குழந்தைகள் பராமரிப்பு..
`கடவுள் மனிதன் மேல் நம்பிக்கை இழக்காததன் அடையாளம் குழந்தைகள்’ என்பார் தாகூர். சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
1 இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில் இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம்.
2 இரண்டு வயது வரை குழந்தைக்குக் கொஞ்சுவதும் சீராட்டுவதும் தேவைப்படும். இரண்டரை வயது முதல் ஆறு வயது வரை நல்லது கெட்டதுகளை சொல்லித்தர வேண்டும். பிடிவாதம் அதிகம் இருக்கும் பருவம் இது என்பதால், கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துகொள்ளலாம். பொய்சொல்லும் போதும், அளவுக்கு அதிகமாகக் குறும்புத்தனம் செய்யும் போதும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். செய்த தவறை திரும்பத் திரும்பச் செய்யும் குழந்தைகளிடம் கண்டிப்பைப் படிப்படியாக அதிகரிப்பதில் தவறு இல்லை.
3 சாப்பிட மறுக்கும் குழந்தைகளைத் துரத்தி துரத்தி உண்ணவைப்பது மிகவும் தவறு. அவர்களின் உணவுகளை அவர்களுக்கு எட்டும் இடத்தில் வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். அவர்களுக்குத் தேவையானதை அவர்கள் எடுத்துச் சாப்பிடுவார்கள். வலிய போய் உணவைத் தருவது, அவர்களின் பிடிவாதக்குணத்தை அதிகரிக்கும். மேலும், குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான உணவைத் தேர்வு செய்ய ஏழு முதல் பத்து சந்தர்ப்பங்கள் தேவைப்படும் என்கிறது ஓர் ஆய்வு. எனவே, ஒரு முறை குழந்தை மறுத்த உணவை வற்புறுத்தித் தருவதைவிட, வேறு வகை உணவை அதனிடம் தரலாம். மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த உணவை வேறு வடிவிலோ ருசியிலோ மாற்றம் செய்து கொடுத்துப் பார்க்கலாம்.
4 ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுத் தேவை மாறுபடுகிறது. எனவே மற்ற குழந்தைகளோடு ஒப்பிட அதிகமாகத் தருவதோ குறைப்பதோ கூடாது. அவர்களின் பசியறிந்து ஆரோக்கியமான உணவைக் கொடுப்பது நல்லது.
5 மொட்டை மாடித் தோட்டத்தில் நீர்விடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைக் குழந்தைகளோடு சேர்ந்து செய்யுங்கள். அவர்களால் செய்ய இயன்ற வேலைகளைச் செய்ய அனுமதியுங்கள். குழந்தைகள் ஆர்வத்தோடு ஈடுபடும்போது அவர்களின் மனவலிமை அதிகரிக்கும்.
6தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, தும்மல் வந்தால் கைக்குட்டையைக்கொண்டு மூக்கை மூடுவது, போன்ற நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
7ஷூவுக்குப் பாலிஷ் போடுவது போன்ற அவர்களின் சின்னச்சின்ன வேலைகளை (Self care activity) அவர்களே செய்ய அனுமதியுங்கள். இது, எதிர்காலத்தில் அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் சொந்தக்காலில் நிற்பவர்களாகவும் மாற்றும். அவர்களின் ஆளுமைப் பண்பினை வளர்க்க உதவும்.
8 குழந்தைகள் செய்யும் சின்னச்சின்ன நல்ல செயல்களுக்கு எளிய கிஃப்ட்களைக் கொடுத்து ஊக்குவியுங்கள். இதனால் அவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள். இதுபோலவே, அவர்கள் தவறு செய்யும்போது, தர வேண்டிய கிப்ட்களைத் தராமல் தாமதபடுத்தலாம். இது அவர்களுக்கு கண்டிப்பின் வலுவை உணர்த்தும்.
9 மார்க்கெட்டுக்கு அழைத்துச்சென்று காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன எனக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள். அவர்களுக்குப் பிடித்தமானக் காய்கறிகளை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள். இதனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை உண்ணும் பழக்கமும் ஏற்படும். சமூகத் தொடர்பும் குழந்தைக்குக் கொஞ்சம் புரியும்.
10 தினமும் படிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். நாளிதழ்களில் வரும் செய்திகளில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து அவர்கள் ஏதேனும் கேட்டால், எதிர்மறை எண்ணங்கள் தோன்றாதவாறு பாசிடிவ்வான முறையில் அதற்கு விளக்கங்கள் கொடுங்கள். இது சமூகத்தில் என்ன நடக்கிறது என அவர்கள் தெரிந்துகொள்ள உதவும்.