நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மாநில அந்தஸ்த்தை பெறுமா விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள்?!

நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மாநில அந்தஸ்த்தை பெறுமா விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள்?!

நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மாநில அந்தஸ்த்தை பெறுமா விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள்?!
 
தேர்தல் ஆணையத்தின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற்றால், தி.மு.க, அ.தி.மு.க-வைப் போல நிரந்தர சின்னத்தைப் பெறலாம்.
 
தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் காட்சிகள் க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிரசாரத்தை நிறைவுசெய்திருக்கிறார்கள். இந்த தேர்தலின்மூலம் மாநில கட்சி அங்கீகாரத்தை பெற்றிட முனைகின்றன நாம் தமிழர் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும். அதற்கான சாத்தியங்கள் குறித்து விசாரித்தோம்.
 
தேர்தல் அரசியலில் வெள்ளி விழா கண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், 2016 சட்டமன்றத் தேர்தல் முதல் களம்காணும் நாம் தமிழர் கட்சியும் இதுவரை மாநில கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை. ஆனால் இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்மூலம் இரு கட்சிகளும் மாநில அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கட்சி 2 எம்.பி-க்களையும் 2 சதவிகித வாக்குகளையும் பெற்றாலோ... அல்லது 8 சதவிகித வாக்குகளைப் பெற்றாலோ மாநில அங்கீகாரம் பெறலாம். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டால் நிரந்தரமான சின்னத்தை அந்தந்த கட்சிகள் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.
 
இது குறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அங்கீகாரம் பெறுவதற்கு இரண்டு எம்.பி தொகுதிகளை வெல்வதோடு, இரண்டு சதவிகித வாக்குகளையும் பெறவேண்டும். அதற்கு இரு தொகுதிகளிலும் 5 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி அடைந்தால், மாநில கட்சி அங்கீகாரம் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது.
 
அதேசமயம், நாம் தமிழர் கட்சி எந்த எம்.பி தொகுதிகளையும் வெல்லும் நிலையில் இல்லை... எனவே அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு 8 சதவிகித வாக்குகளைப் பெறுவதுதான். தற்சமயம் 7 சதவிகித வாக்குகளுடன் இருக்கும் நாம் தமிழர், அந்த வாக்குகளை தக்கவைப்பதோடு கூடுதலாக 1 சதவிகித வாக்குகளையும் பெறும்பட்சத்தில், மாநில அங்கீகாரம் கிடைக்கும்” என்றனர்.
 
நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ``2016-ல் 1 சதவிகிதத்தில் ஆரம்பித்தது நாம் தமிழர் கட்சி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே 6.89 சதவிகிதத்தை தொட்டுவிட்டார் சீமான். அந்தக் கட்சியின் தமிழ் தேசிய கொள்கைக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகுவதை மறுக்க முடியாது. `சின்னம் பறிக்கப்பட்டது, அரசியல் பழிவாங்கல்' என்ற அனுதாபமும் அவருக்கு தேர்தல் களத்தில் எதிரொலிக்கும். எனவே அவர்களது வாக்கு சதவிகிதம் கணிசமாக உயர்ந்து, 8 சதவிகிதத்தைத் தாண்டும்” என்றார்.
 
தொடர்ந்து பேசிய அரசியல் நோக்கர்கள் சிலர், ``வி.சி.க போட்டியிடும் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அந்தக் கட்சி வெற்றிபெறும் சூழல் பிரகாசமாக இருக்கிறது. வலுவான எதிரிகள் இல்லையென்பதால், இரு தொகுதிகளிலும் வி.சி.க 5 லட்சம் வாக்குகளை பெற்றால், தேர்தலில் வி.சி.க மாநில கட்சி அங்கீகாரம் பெறும் வாய்ப்புகள் உண்டாகும்” என்றனர்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்