அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
தமிழ் உலகம்,
235
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஒ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுக-வின் பெயர்,கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை, அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஒபிஎஸ் தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கில் இரு தரப்பு இறுதி வாதங்களும், மார்ச் 12ஆம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி வழங்க உள்ளார்.
முன்னதாக அதிமுக கட்சி கொடி, சின்னம் ஆகியவை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளிக்க இருப்பது அதிமுக வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.