``நான் விஜயகாந்த் சொந்தக்காரன்..!” - தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பிரசாரம் லைவ் ரிப்போர்ட்

``நான் விஜயகாந்த் சொந்தக்காரன்..!” - தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பிரசாரம் லைவ் ரிப்போர்ட்

``நான் விஜயகாந்த் சொந்தக்காரன்..!” - தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பிரசாரம் லைவ் ரிப்போர்ட்
 
அதிமுக வேட்பாளர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாடல்களை போட்டு தான் பிரசாரம் செய்வார்கள். ஆனால் நாராயணசாமி விஜயகாந்த் பாடலான `பொட்டு வச்ச தங்கக்குடம் ஊருக்கு நீ மகுடம்’ என்ற பாடலை திரும்ப திரும்ப போட்டு வாக்குச் சேகரித்து வருகிறார்
 
மக்களவைத் தேர்தலுக்கு 3 நாள்களே உள்ள நிலையில் தேனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி நேற்று பொம்மையகவுன்டன்பட்டி, அன்னஞ்சி, வடபுதுப்பட்டி, அம்மாபட்டி, தேனி நகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
 
பிரசாரத்தின் பேசிய நாராயணசாமி, ``எனக்கு எதிராக போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் முதலில் இரட்டை இலைக்காக வந்தார்கள் , அடுத்தமுறை வேட்டியை மாத்தினார்கள், மூன்றாவது முறை வேறு வேட்டியில் வருகின்றனர். நாளை எத்தனை வேட்டியை மாற்றுவார்கள் என அவர்களுக்கே தெரியாது. ஒவ்வொரு நேரத்திற்கு ஒரு வேட்டி சட்டையை மாற்றுவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை  40 வருடங்களாக ஒரே வேட்டியை கட்டிய எனக்கு வாக்களிங்கள்.
 
இங்கு ஒருத்தர் இருக்காரு நான் கோயிலை கட்டி கொடுத்தேன், குளத்தை வெட்டினேன் என சொல்லி வருகிறார். அதெல்லாம் யாருடைய பணம்... உங்களுடைய பணம் ஜெயலலிதா நலத் திட்டங்களுக்காக கொடுத்த பணம், தற்போது நான் தான் செய்தேன் என்று கூறிக்கொண்டு இருக்கிறார். வனவாசம் போனேன் என்று கூறுகிறார். ஊருக்குள்ள தானே இருந்தாரு. சரி அந்த 14 வருடத்தில் உங்களுக்கு எதாவது செய்து இருக்கலாமே ஏன் அவர் கையில் பணம் இல்லையா, பணத்தை எல்லாம் வெளிநாட்டில் பதுக்கி வைத்துவிட்டார் டிடிவி தினகரன்” என்றார்.
 
நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நாராயணசாமி தான் சார்ந்த சமுகத்தைச் சேர்ந்த நடிகர் விஜயகாந்த் வேறு யாரும் இல்லை தன்னுடைய சொந்தக்காரர் தான். ``அவர் என்னுடைய அண்ணன், நான் ஒரு படம் தயாரித்து பணத்தை இழந்த போது விஜயகாந்த் என்னை அழைத்து, `கலங்காதே நான் உனக்கு பணம் இல்லாமல் படம் எடுத்துத் தருகிறேன்’ என்றார்” என்று உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தார். நாராயணசாமிக்கு ஆதரவாக சில நாள்களுக்கு முன் தேனி வந்த விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும், தன் கணவர் இழப்பால் மிகவும் துக்கத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
 
அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க செல்லும் போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாடல்களையும், அவர்களை புகழ்ந்து பாடும் தனிப்பாடல்களையும் போட்டு தான் பிரசாரம் செய்வார்கள். ஆனால் நாராயணசாமி விஜயகாந்த் நடித்த பொன்மன செம்மல் படத்தில் வரும் `பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்’ என்ற பாடலை திரும்ப திரும்ப போட்டு வாக்குச் சேகரித்து வருகிறார்.
 
மேலும் செல்லும் இடமெல்லாம் அடுத்த முறை முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும். அதற்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனப் பேசுகிறாார். இதனால் கட்சியினரும் பொதுமக்களும் இவர் எம்.பி தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கிறாரா அல்லது எம்.எல்.ஏ தேர்தலுக்கு வாக்குசேகரிக்கிறாரா எனத் தெரியவில்லை எனக் குழப்பிபோகின்றனர்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்