``கூவத்தூரில் நீங்களும்தானே எடப்பாடியை ஆதரிச்சீங்க?" - திடீர் கேள்வியால் திகைத்த கருணாஸ்
தமிழ் உலகம்,
193
``கூவத்தூரில் நீங்களும்தானே எடப்பாடியை ஆதரிச்சீங்க?" - திடீர் கேள்வியால் திகைத்த கருணாஸ்
ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக நவாஸ்கனி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பரமக்குடி பகுதிகளில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும் நடிகருமான கருணாஸ் பிரசாரம் மேற்கொண்டார். பரமக்குடி அருகில் உள்ள அக்கிரமேசி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட கருணாஸ், ''கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 10.5 தனி இட ஒதுக்கீட்டினை ஒரே நாளில் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
அவருக்கு இருக்கும் சமுதாய பற்று உங்களுக்கு ஏன் இல்ல. இதை நான் கேட்காமல் யார் கேட்பது. நான் உங்களுக்காக ஜெயிலுக்கு போவேன். அசிங்கப்படுவேன். அவமானப்படுவேன். அதற்காக நான் உங்கள் மீது வருத்தப்பட மாட்டேன். ஏன் என்றால் நான் உங்களை நம்பி வரல. தேவரை நம்பி வந்தேன். அவர் எனக்கு என்ன கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். அதனால் நான் வந்துவிட்டேன். துணிந்துவிட்டேன்'' என பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட ஒருவர் கருணாஸிடம், ''நீங்க கூவத்தூரில் எடப்பாடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல'' என கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே, மேடையில் இருந்த கருணாஸின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பிய நபருக்கு எதிராக கிளம்பினர். இதனை கண்ட போலீஸார், அந்த நபரை அங்கிருந்து அழைத்து சென்றனர். அப்போது மேடையில் இருந்த கருணாஸ், ''அந்த தம்பியை விடுங்க. அவர இங்க கூட்டிட்டு வாங்க. அவரு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும். அவரு கேள்வி என்னன்னா 'கூவத்தூரில் நீங்களும்தானே இருந்தீங்க. எடப்பாடியை ஆதரிச்சு நீங்களும்தானே ஓட்டு போட்டீங்க. அப்படி ஆதரிச்ச எடப்பாடியை இன்னைக்கு ஏன் வசை பாடுறீங்க' என்பதுதானே.
கூவத்தூரில எடப்பாடியை ஆதரித்து 127 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தது அவருக்காக அல்ல. தியாக தலைவி சின்னம்மாவுக்காகத்தான் வாக்களித்தார்கள். இதை இல்லைன்னு சொல்ல எடப்பாடி தயாரா இருக்காரா. இல்ல அன்னைக்கு இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சொல்ல தயாரா இருக்காரா?'' என கேள்வி எழுப்பிய கருணாஸை நோக்கி அந்த நபர் மீண்டும் வர அந்த இடத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாரும் கிராம மக்களும் அந்த நபரை சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து கருணாஸ் தனது பிரசாரத்தை தொடர்ந்தார்.