CSK vs RCB: விக்கெட் வேட்டை நடத்திய வங்கத்துச் சிங்கம்; ருத்துராஜ் தலைமையில் வெற்றி பெற்ற சென்னை!

CSK vs RCB: விக்கெட் வேட்டை நடத்திய வங்கத்துச் சிங்கம்; ருத்துராஜ் தலைமையில் வெற்றி பெற்ற சென்னை!

CSK vs RCB: விக்கெட் வேட்டை நடத்திய வங்கத்துச் சிங்கம்; ருத்துராஜ் தலைமையில் வெற்றி பெற்ற சென்னை!
 
சேப்பாக்கம் சென்னை அணியின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் நடந்த இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக 2008-ம் ஆண்டு டிராவிட் தலைமையிலான பெங்களூரு அணிதான் சென்னை அணியை வீழ்த்தியிருக்கிறது. அதன்பிறகு இங்கே பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்தியதே இல்லை. இந்தப் புள்ளிவிவரமே சென்னை அணியின் ரசிகர்களுக்குப் பெரிய தெம்பாக இருந்தது. தோனி கேப்டன்சியை விட்டு விலகிய பிறகு சென்னை ஆடும் முதல் போட்டி, புதிய கேப்டன் ருத்துராஜ் தலைமையில் முதல் போட்டி. ருத்துராஜூம் டு ப்ளெஸ்ஸியும் நேருக்கு நேர் நிற்கும் சுவாரஸ்யம் வேறு! சில மாதங்களுக்குப் பிறகு கோலியின் கம்பேக்கும் உடன் சேர்ந்துவிட, இதனாலேயே இந்தப் போட்டியின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பான டோர்னமென்ட் ஓப்பனராகவே இது அமைந்தது.
 
ஒரு சுவாரஸ்யமான டென்னிஸ் போட்டியைப் போன்றுதான் இந்தப் போட்டியும் அமைந்திருந்தது. இரு வீரர்கள் மாறி மாறி செட்களை வெல்வதைப் போலவே இரு அணிகளும் மாறி மாறி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தின. டாஸ் வென்று பெங்களூரு அணிதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. கோலியும் டு ப்ளெஸ்ஸியும் ஓப்பனர்கள். ஆரம்பத்தில் சில ஓவர்களுக்கு டு ப்ளெஸ்ஸி தனியாக வேடிக்கைக் காட்டினார். 22 பந்துகளில் 35 ரன்களை அடித்திருந்தார். சேப்பாக்கக் கூட்டத்தைக் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக இருக்க வைத்துவிட்டார். பீல்டிங்கிலிருக்கும் இடைவெளிகளைக் குறிவைத்து அடுத்தடுத்து பவுண்டரிகளைச் சிறப்பாக விளாசினார். ஆட்டம் அப்படியே பெங்களூர் அணியின் கைகளுக்குச் செல்வது போலத் தோன்றிய தறுவாயில்தான் முஷ்தபிஷூர் ரஹ்மான் கைக்குப் பந்து சென்றது.
 
அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டு ப்ளெஸ்ஸியை பவர்ப்ளேக்குள்ளாகவே வெளியேற்றினார். அதே ஓவரில் ரஜத் பட்டிதரையும் காலி செய்தார். இன்னொரு பக்கம் டைட்டாக வீசிக்கொண்டிருந்த சஹார் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் கோலியும் க்ரீனும் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணி அணியைக் கொஞ்சம் சரிவிலிருந்து மீட்டது. இருவரும் சேர்ந்து 35 ரன்களை எடுத்திருந்தனர்.
 
இது அச்சுறுத்தும் பார்ட்னர்ஷிப்பாக மாறும் எனத் தோன்றுகையில் சரியாக மீண்டும் முஷ்தபிஷூர் ரஹ்மானைக் கொண்டு வந்தார் ருத்துராஜ். அதற்கு முன்பாகவே கோலிக்கு ஒரு ப்ளானையும் வைத்திருந்தனர். லாங் ஆன், டீப் மிட் விக்கெட், டீப் ஸ்கொயர் என லெக் சைடிலேயே மூன்று பீல்டர்களை டீப்பில் வைத்திருந்தனர். ஆப் சைடில் டீப்பில் கவர் அல்லது பாயின்ட் மட்டும் வைத்துக் கொண்டனர். ஜடேஜா, தீக்சனா என எல்லாருமே இந்த செட்டப்புக்கு ஏற்ற வகையில் கோலியை லெக் சைடில் ஆட வைக்கும் வகையிலேயே வீசினர். இந்த பீல்டை கோலி கொஞ்சம் அட்டாக்கும் செய்தார். ஆனாலும், ருத்துராஜ் இந்த செட்டப்பை மாற்றவில்லை. ரஹ்மானும் அப்படியே வீசினார். பயனாக கோலியின் விக்கெட் கிடைத்தது. டீப் மிட் விக்கெட்டில் ரஹானேவும் ரச்சினும் இணைந்து ஒரு கடினமான கேட்ச்சைப் பிடித்து கோலியை வெளியேற்றினர். ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பெரிய வேகமில்லாமல் காற்றில் சுழற்றிவிட்டு அவர் வீசும் ஸ்லோயர் டெலிவரிக்கள் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
கோலியின் விக்கெட்டுக்குப் பிறகு ஆட்டம் சென்னை பக்கம் வருவதைப் போல இருந்தது. ஆனால், அடுத்த செட்டில் பெங்களூரு முன்னேறியது. தினேஷ் கார்த்திக்கும் அனுஜ் ராவத்தும் கடைசிக்கட்ட ஓவர்களில் சென்னை அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளினர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூரு அணி 71 ரன்களைச் சேர்த்தது. தினேஷ் கார்த்திக்கும் அனுஜ் ராவத்தும் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார்கள். துஷார் தேஷ்பாண்டே ஒரே ஓவரில் 25 ரன்களை அள்ளிக்கொடுத்திருந்தார். கூடவே எக்கச்சக்க ஒயிடுகளையும் வீசினார். விளைவாக, பெங்களூரு அணி சவாலளிக்கும் வகையில் 173 ரன்களை எட்டி மிரட்டல் விடுத்தது.
 
சென்னைக்கு டார்கெட் 174. சென்னை அணியின் பேட்டிங் பெர்பார்மென்ஸூம் அப்படியே பெங்களூரு அணியின் பேட்டர்னைப் போலவே இருந்தது. இன்னிங்ஸை பவுண்டரியுடன் தொடங்கினார் ருத்து. ரச்சினும் பவுண்டரியுடன் தனது கணக்கைத் தொடங்க இருவரும் பட்டாசாய் வெடித்தனர். பவர்ப்ளேயில் மட்டும் 62 ரன்கள் வந்திருந்தன. ருத்துராஜ் மட்டும் யாஷ் தயாள் பந்தில் அவுட் ஆகியிருந்தார். ரச்சின் தொடர்ந்து வேகமாக ஆடினார். ரஹானேவும் அதிரடி காட்டினார். டேரில் மிட்செல் கொஞ்சம் நின்று நிதானப் போக்கைக் கடைபிடுத்தார். மொத்தத்தில் ரன்ரேட் பிரச்னையில்லாமல் சென்றது. ஆனால், யாருமே நிலைக்கவில்லை. அடுத்தடுத்து வீழ்ந்து கொண்டே இருந்தனர். போட்டியும் இங்கேயும் அங்கேயுமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.
 
இந்தச் சமயத்தில்தான் 13வது ஓவரில் துபேவும் ஜடேஜாவும் கூட்டணி சேர்ந்தனர். அப்போது வெற்றிக்கு இன்னும் 64 ரன்கள் தேவைப்பட்டன. இருவரும் ரன்ரேட்டையும் எகிறவிடாமல் விக்கெட்டையும் விடாமல் பவுண்டரிகளையும் அடுத்தடுத்து அடித்துத் துடிப்பாக ஆடினர். இருவரும் இடதுகை பேட்டர்கள் என்பதால் மேக்ஸ்வெல் வந்து ஆப் ஸ்பின் வீசிப் பார்த்தார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. க்ரீனின் மிதவேகங்களும் வேலைக்காகவில்லை. இருவரும் நன்றாக ஆடி, பந்துக்கு ஏற்ற வகையில் ரன்னையும் குறைத்தனர். கடைசி வரை ஆட்டம் சென்றிருந்தாலும் சென்னை அணியின் மீது பெரிய அழுத்தமெல்லாம் இல்லை. எளிதாகவே வென்றுவிட்டனர்.
 
இரு அணியின் பந்துவீச்சிலுமே பிரச்னைகள் இருந்தன. இரு அணியின் பௌலர்களுமே டெத் ஓவர்களில் சொதப்பினர். சென்னை பௌலர்களின் சொதப்பல் பெங்களூருவை ஒரு சவாலான ஸ்கோரை எடுக்க வைத்தது. பெங்களூரு பௌலர்களின் சொதப்பல் சென்னையை வெல்லவே வைத்துவிட்டது.
 
சென்னை அணி வெற்றியை நெருங்கிய தறுவாயில் எப்படியாவது விக்கெட் விழுந்து தோனி பேட்டிங் வர வேண்டும் என ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். அதுவரை 'We Want Sixers' என்றவர்கள், அதன்பின் விக்கெட் வேண்டும் எனக் கூச்சலிட்டனர். ஆனாலும் ரசிகர்களின் எண்ணம் பலிக்கவில்லை. ஜடேஜா - துபே கூட்டணியே வெற்றியைத் தேடித் தந்துவிட்டது. சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியிலும் ஒரு துக்கமாக இந்த நாள் முடிந்தது.
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்