ராமநாதபுரம்: `2 கட்சிகளிடையேதான் போட்டி’ - ஓ.பி.எஸ் பெயரை சொல்லாமல் தவிர்த்த எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரம்: `2 கட்சிகளிடையேதான் போட்டி’ - ஓ.பி.எஸ் பெயரை சொல்லாமல் தவிர்த்த எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரம்: `2 கட்சிகளிடையேதான் போட்டி’ - ஓ.பி.எஸ் பெயரை சொல்லாமல் தவிர்த்த எடப்பாடி பழனிசாமி
 
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இங்கு போட்டியிடுவது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் தவிர்த்தார்.
 
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாகவும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ் கனியும், அதிமுக சார்பில் ஜெயப்பெருமாளும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், `தான் அதிமுகவில் எடப்பாடி தரப்பினரால் அவமானபடுத்தப்பட்டதையும், அதற்கு நியாயம் கேட்கவே இரண்டாவது தர்மயுத்தமாக இந்த தேர்தலில் இங்கு சுயேட்சையாக போட்டியிடுவதாகவும்’ கூறி தனக்கு ஆதரவு கேட்டு வருகிறார்.
 
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஜெயப்பெருமாளை ஆதரித்து நேற்று ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, ''காசிக்கு நிகரான ராமேஸ்வரம் அமைந்துள்ள தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயப்பெருமாளை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் நல்லவர், வல்லவர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதால் அதில் உள்ள கஷ்டங்களை அறிந்தவர்.
 
தமிழ்நாட்டில் 2 கட்சிகளிடையேதான் போட்டி நடக்கிறது. அதில் நிறைய திட்டங்களை இப்பகுதிக்கு கொண்டு வந்த அதிமுக முதலிடத்தில் உள்ளது. குடும்ப கட்சியாக உள்ள திமுக இரண்டாவதாக உள்ளது. 3வதாக ஒரு கட்சி போட்டியிடுகிறாது. அவர்கள் போட்டியிட வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
 
நானும் ஒரு விவசாயி. இந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்ததால் 14 ஆயிரம் கோடி மாநில நிதியில் இருந்து காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினோம். ஆனால் திமுக அரசு அதனை நிறுத்திவிட்டது. அதிமுக இங்கு வென்றால் மீண்டும் அந்த திட்டம் செயல்படுத்தப்படும். மீனவர்கள் பிரச்னைக்கு காரணமாக உள்ள கச்சத்தீவை காங்கிரஸ் அரசு இலங்கைக்கு கொடுத்தது. அதற்கு ஆதரவாக இருந்தது திமுக. இதன் மூலம் நம் மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்க, ஓய்வெடுக்க, வலைகளை உலர்த்த வாய்ப்பு இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். எனவேதான் கச்சத்தீவை மீட்க கோரி 2008-ல் வழக்கு தொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா. 2014-ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன், கச்சத்தீவை மீட்க பிரதமருக்கு கடிதம் எழுதினார். அவற்றின் மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டு தேர்தல் வந்தவுடன் பிரச்னையாக பேசுகிறார்கள்.
 
கச்சத்தீவு குறித்து பேச அதிமுகவிற்கு மட்டுமே தகுதி உள்ளது. அதனை மீட்டெடுக்க அதிமுக தொடர்ந்து போராடும். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது கண்டுகொள்ளாமல் இருந்த பாஜக இனியாவது உச்ச நீதிமன்றத்தில் அதிமுக தொடுத்த வழக்கில் கச்சத்தீவை மீட்க மறு பரிசிலனை செய்வோம் என பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்'' என்றார். இந்த கூட்டத்தில் திமுக-வையும், பாஜக-வையும் தாக்கி பேசிய எடப்பாடி பழனிசாமி தன்னை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.!

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்