கோவை: ஒரே நேரத்தில் வந்த 2 வேட்பாளர்கள்... அண்ணாமலை வாகனத்தை சிறைபிடித்த அதிமுக!
தமிழ் உலகம்,
199
கோவை: ஒரே நேரத்தில் வந்த 2 வேட்பாளர்கள்... அண்ணாமலை வாகனத்தை சிறைபிடித்த அதிமுக!
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரசார வாகனத்தை, அதிமுகவினர் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பல்லடம் தொகுதியிலும், அ.தி.மு.க வேட்பாளர் ராமச்சந்திரன் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை சூலூர் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொண்டனர்.
சூலூர் தொட்டிபாளையம் பகுதியில் பிரசாரம் செய்ய பா.ஜ.க-வினருக்கு பிற்பகலிலும், அ.தி.மு.க-வினருக்கு மாலையிலும் காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் பா.ஜ.க-வினர் குறித்த நேரத்தில் பிரசாரம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் குறித்த நேரத்தில் நிர்வாகிகளுடன் பிரசாரத்தைத் தொடங்கினார். அதேநேரத்தில் அங்கு பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொள்ளும் வாகனமும் வந்தது. அண்ணாமலை வேறு வாகனத்தில் வந்த நிலையில் , பிரசார வாகனம் மட்டும் தனியாக வந்தது.
ஏற்கெனவே அ.தி.மு.க-வினர் பிரசாரத்தில் ஈடுபட்டதால், அண்ணாமலையின் பிரசார வாகனம் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதையடுத்து அ.தி.மு.க-வினரின் வாகனங்களை ஓவர்டேக் செய்து, அண்ணாமலை வாகனம் செல்ல முயற்சித்தது.
அப்போது அ.தி.மு.க-வினரின் வாகனத்தில் உரசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணாமலையின் பிரசார வாகனத்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். “எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நாங்கள் வந்துள்ளோம்.
அவர்கள் 7 மணி நேரம் தாமதமாக வந்துள்ளனர். பா.ஜ.க-வினருக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து காவல்துறை அனுமதி வழ்ங்கியுள்ளது.” என்று குற்றம்சாட்டினர். காவல்துறை இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.