பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்
 
கொ ஞ்சம் தாட்டியான பொண்ணா பொறந்துட்டா அவ்வளவுதான்! அதுலயும் இடுப்புல எக்கச்சக்கமா சதை மடிப்பும் இருந்துச்சுனா வேற வில்லங்கமே வேணாம்! மத்த பெண்களுக்கு இருக்கிறதைவிட மாதவிலக்குக் கோளாறுகள் அதிகமா வந்து சேர்றதே குண்டா இருக்கிற பொண்ணுங்களுக்குத்தான்! இப்படி குண்டான உடம்பை வச்சுக்கிட்டு அவஸ்தைப்படுறவங்களுக்கு வரப்பிரசாதமா இருக்கப் போகுது நான் சொல்லப் போற ரசம்! ‘அட.. ரசம் ஜீரணத்துக்குத்தானே உதவும். உடம்பைக் குறைக்கவுமா உதவும்?’னு நீங்க கேட்கிறீங்கதானே.. நான் சொல்றது மிளகு ரசம் இல்லீங்க.. கொள்ளு ரசம்.
 
‘ஐயய்யே.. கொள்ளா? அதெல்லாம் குதிரை திங்கிறதாச்சே?!’னு கொல்லுனு சிரிக்கறீங்களா? சிரிக்காதீங்க. கொள்ளு சாப்பிடுறதால தான் குதிரை அத்தனை சக்தியோட இருக்கு. மோட்டாரோட சக்தித் திறனையே ‘ஹார்ஸ் பவர்’னுதானே சொல்லுறோம் (‘கொள்ளு’ பேரன், பேத்திகளோட பேசிப் பேசி எனக்கும் இங்கிலீஷ் கொஞ்சம் தெரியுமாக்கும்!). ஊளைச் சதையை கரைச்சு, உடம்பை கிண்ணுனு வச்சுக்கற சக்தி கொள்ளுக்கு உண்டு!
 
சரி.. விஷயத்துக்கு வர்றேன். மாதவிலக்கு கோளாறு காரணமா குழந்தைப் பேறு வாய்க்காத பெண்கள், இதை முயற்சி செஞ்சு பார்க்கலாம். மாதவிலக்கு ஆன ஐந்து நாட்களும் காலையில வெறும் வயித்துல கொள்ளு வேகவைச்ச தண்ணியை (சுமார் ஒரு டம்ளர்) நல்லா கலக்கிக் குடிக்கணும். ரெண்டு, மூணு மாசம் இப்படி செஞ்சா கர்ப்பப்பையில இருக்குற கசடு, அழுக்குகள் போறதோட, இடுப்புப் பகுதியில இருக்குற அதிகப்படி சதைகள் குறைஞ்சு சீக்கிரமே கர்ப்பமாவும் ஆவாங்க. இப்படி பொண்ணுங்களுக்கு முக்கியமா தேவைப்படுற கொள்ளுவை வச்சு ரசம் செஞ்சா நல்லதுதானே?
 
கொள்ளு ரசம் எப்படி செய்றதுனு செய்முறை சொல்றேன்.. குறிச்சுக்கங்க. கால் கப் கொள்ளுவை எடுத்துக்கிட்டு, வெறும் வாணலியில நல்லா வறுத்து, தண்ணியில ஊறப் போடுங்க. மறுநாள் காலையில அதே தண்ணியோட சேர்த்து, கொள்ளுவை நல்லா வேகவைச்சு மசிச்சுக்கங்க! தேவையான அளவு புளியை தண்ணியில கரைச்சு, அதுல கொஞ்சம் ரசப்பொடி, உப்பு, பெருங்காயம், சுண்டைக்காயளவு வெல்லம் போட்டு கொதிக்க விடுங்க. கடைசியா, வேக வைச்ச கொள்ளுவை சேர்த்து, ரசம் நுரைச்சு வந்ததும் இறக்கி, நெய்யில சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிச்சுக் கொட்டினா.. கொள்ளு ரசத்தோட வாசனை எட்டூருக்கு மணக்கும்!

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்