உற்சாகமாக இருப்பது எப்படி?

உற்சாகமாக இருப்பது எப்படி?

உற்சாகமாக இருப்பது எப்படி?

உற்சாகமாக இருந்தால் உலகையே ஆளமுடியும். ஆனால் உற்சாகமாக இருப்பது எப்படி? என்பதுதான் பலருக்கும் தெரியாது!
சோகத்தில் மூழ்கி, உற்சாகமிழந்து மனச்சோர்வுடன் வாழ்வதால், வாழ்க்கை ஜொலிக்காது. மனதை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும். மன உற்சாகமாக இருக்க வெற்றியின் வெளிச்சம் அதில் பரவவேண்டும். வெற்றிக் கனிகளைப் பறிப்பதற்கு முயற்சியின் கைகள் உயர வேண்டும். முயற்சியின் கைகள் உயர்வதற்கு இலட்சியம் நமக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும்.

ஆகவே உற்சாகமாக இருக்க விரும்பினால் முதலில் உங்களுடைய எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்தித்து ஒரு தெளிவான இலட்சியத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதை அடைவதற்காக செயல் திட்டங்களைத் தீட்டி முயர்சிகளை மேற்கொள்ளுங்கள். ஓடுகின்ற நதிதான் உற்சாகமாக இருக்கிறது வளர்கின்ற செடிதான் அழகில் ஜொலிக்கிறது. அதுபோல உழைக்கின்ற மனிதர்கள் தான் உற்சாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள். ஆகவே எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்க இலட்சியத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

பறக்கின்ற போதுதான் மின்மினிகள் ஜொலிக்கின்றன. அதுபோல உழைக்கின்ற போதுதான் மனிதர்கள் ஜொலிக்கின்றார்கள். மனதை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள கீழ்காணூம் உத்திகளைக் கடைப்பிடிக்கலாம்!
1. தோல்வியை நினைத்து கவலையில் மூழ்கக் கூடாது. ஏனென்றால் தோல்வி ஒரு முடிவல்ல; அது திருப்புமுனை.
2. நீங்கள் ஏற்கனவே அடைந்துள்ள சிறுசிறு வெற்றிகளையும் எண்ணி, அதன் ஆக்க அதிர்வலைகளை உங்களுடைய நெஞ்சம் முழுவதும் படரவிடுங்கள். அத்துடன் உங்களை நீங்களே ஒரு வெற்றியாளராக நினைக்கத் தொடங்குங்கள்.
3. எப்பொழுதும் ஆக்கபூர்வமான செயல்களைச் செய்து கொண்டே இருங்கள். விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
4. உங்களைப் பற்றியும் வாழ்க்கைப்பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் உயர்வாக எண்ணுவதோடு உயர்வதற்காகவும் எண்ணுங்கள்.
5. உற்சாகம் தரும் நூல்களை வாசியுங்கள். உற்சாகமளிக்கும் நபர்களுடன் உரையாடுங்கள்.
6. உங்களுடைய மனம், ஆன்மா, சிந்தனை, செயல் போன்றவை எப்பொழுதும் ஆக்கப் பூர்வமாக செயல்படும் விதத்தில் விழிப்புணர்வோடு இருங்கள்.
7. ஒவ்வொரு சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்து யோகசனம், உடற்பயிற்சி, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை ஒரு அரைமணி நேரமாவது செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
8. எளிய உணவுப் பழக்கத்திற்கு மாறுங்கள், சிறுதானிய உணவு, காய்கனி, கீரை போன்றவற்றை விரும்பி உண்ணுங்கள்.
9. எப்பொழுதும் உதவும் மனதுடன் இருங்கள், வணக்கம் செலுத்துவதிலும், பாராட்டுவதிலும் முந்திக் கொள்ளுங்கள்.
இந்த உத்திகளைக் கடைப்பிடிக்கத் தொடங்குங்கள் நிச்சயம், உற்சாக நதி உங்களுடய உள்ளத்தில் ஊற்றெடுக்கும். அதன் காரணமாக மனதில் தன்னம்பிக்கையும், ஆக்க ஆற்றலும் கூடும், என்பதோடு எதையும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை ஒளி நமக்குள்ளாக பரவத் தொடங்கும். முயற்சித்து பாருங்கள்! வெற்றிக்கனிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

– முனைவர் கவிதாசன்

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்