கதறுகிறது தமிழகத்தின் கல்லீரல்!

கதறுகிறது தமிழகத்தின் கல்லீரல்!

கதறுகிறது தமிழகத்தின் கல்லீரல்!

தமிழக மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த 22 புதிய மருத்துவத் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறது தமிழக அரசு. மக்களுடைய மேம்பாட்டில் அரசு கொண்டிருக்கும் அக்கறைக்கு இது ஒரு சான்று; வரவேற்கிறோம். இந்தச் சூழலில், தமிழக ஆரோக்கியத்தைச் செல்லரித்துக்கொண்டிருக்கும் ஒரு பேராபத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசுக்கும் சட்டப்பேரவைப் பிரதிநிதிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இன்றைய தேதியில், தமிழகத்தில் குடிநோய் தொடர்பான துல்லியமான புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை என்கின்றனர் மருத்துவர்களும் குடிநோய்க்கு எதிராகக் களத்தில் இருக்கும் மருத்துவப் பணியாளர்களும். முக்கியமாக, கல்லீரல் பாதிப்பின் தீவிரத்தை இன்னமும் அரசோ, சுகாதாரத் துறையோ உணர்ந்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள். “கடந்த காலங்களில் காசநோய், எய்ட்ஸ் ஆகியவை தீவிரமாகப் பரவியபோது நோயைக் கட்டுப்படுத்தப் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. ஆனால், குடிநோய் தீவிரமாக இருக்கும் நிலையில், தமிழக சுகாதாரத் துறையில் அப்படி எதுவும் புள்ளிவிவரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை” என்கிறார் தமிழக சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநரான மருத்துவர் எஸ்.இளங்கோ.

இதன் தொடர்ச்சியாக, மாநிலத்தின் முக்கியமான ஆறு நகரங்களில் மட்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குடியால், மோசமாகக் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நோயாளிகளின் பட்டியலை ‘தி இந்து’ திரட்டியது. கூடவே, சுகாதார உரிமைச் சமூகச் செயல்பாட்டாளர் ஆனந்தராஜ், மக்கள் கண்காணிப்பு இயக்கம் போன்ற சமூகச் செயல்பாட்டு அமைப்புகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளையும் பெற்றோம். அதிர்ச்சியளிக்கக் கூடிய இந்தத் தரவுகள் முழுமையானவை அல்ல; பிரச்சினையின் ஒரு துளி. ஆழ்கடலில் உறைந்திருக்கும் பெருமலையின் முகடுநுனி என்பதுதான் மேலும் நம்மைக் கலங்கவைக்கிறது.

* சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையின் கல்லீரல் சிகிச்சைத் துறையின் புறநோயாளிகள் பிரிவுக்கு ஆண்டுக்கு 3,650 பேர் வருகின்றனர். இவர்களில் சுமார் 2,200 பேர் மதுப் பழக்கத்தால் கல்லீரல் பாதிப்பு அடைந்தவர்கள்.

* மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 2014-ல் மட்டும் கல்லீரல் சிகிச்சைக்காக புறநோயாளிகள் பிரிவில் 4,320 பேரும், உள்நோயாளிகளாக 239 பேரும் சிகிச்சை பெற்றிருக்கின்றனர்; இவர்களில் 239 பேர் இறந்துவிட்டனர்.

* திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 2014-ல் கல்லீரல் நோயால் 147 பேரும், 2015-ல் இதுவரை 113 பேரும் கல்லீரல் நோய் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். இங்குள்ள மது போதை மறுவாழ்வு சிகிச்சைப் பிரிவுக்கு ஒவ்வொரு நாளும் 15 முதல் 20 பேர் வரையில் சிகிச்சை பெற வருகின்றனர்.

* திருச்சி அரசு மருத்துவமனை கல்லீரல் நோய் சிகிச்சைப் பிரிவில் தினசரி 40 பேர் வரை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருகின்றனர். உள்நோயாளிகளாகத் தினசரி சுமார் 10 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். மனநோய் சிகிச்சைப் பிரிவுக்குத் தினசரி சராசரியாக 175 பேர் வருகின்றனர். இவர்களில் சராசரியாக 35 பேர் மதுப் பழக்கத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். திருச்சியில் ஆறு தனியார் மனநல மருத்துவமனைகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 40 முதல் 80 நோயாளிகள் வரை சிகிச்சைக்காக வருகின்றனர்.

* கோவை அரசு மருத்துவமனைக்குக் கடந்த ஆண்டு கல்லீரல் பாதிக்கப்பட்டு 1,320 நோயாளிகள் வந்தனர். புறநோயாளிகள் பிரிவில் சராசரியாக தினசரி 150 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஒரு ஆண்டில் கல்லீரல் மற்றும் குடல் பாதிப்புக்காகச் சிகிச்சை பெற்றவர்கள் 21,600 பேர். இவர்களில் 15% முதல் 20% வரை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. மேலும், இங்குள்ள கல்லீரல் மற்றும் குடல் நோய் சிகிச்சைப் பிரிவில் தினசரி 15 முதல் 20 பேர் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், இங்கு ஆறு படுக்கைகளும் இரண்டு மருத்துவர்களும் மட்டுமே இருப்பதால் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறிவருகிறது நிர்வாகம். தவிர, மருத்துவர் இல்லாததால் குடல் இரைப்பை அறுவைச் சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டு, நோயாளிகள் பெரும்பாலும் சென்னைக்கு அனுப்பப்படுகின்றனர். கோவையில் இருக்கும் கஸ்தூரிபா காந்தி குடிநோய் சிகிச்சை மறுவாழ்வு ஆராய்ச்சி மையத்தில் சுமார் 50 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். ஆண்டுக்கு சுமார் 1,000 பேர் கல்லீரல் மற்றும் மனநோய் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வருகின்றனர்.

* சேலம் அரசு மருத்துவமனையில் ஆண்டுக்கு சராசரியாக 1,200 குடிநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்குள்ள போதைத் தடுப்பு சிறப்பு மையத்தில் ஆண்டுக்கு சராசரியாக உள்நோயாளிகள் 420 பேரும், வெளிநோயாளிகள் 780 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை நோய் முற்றிய நிலையில் 101 பேர் இரைப்பை, குடல் சிகிச்சை அறுவைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் ஆறு பேர் இறந்துவிட்டனர்.

* நீலகிரி மாவட்டத்தில் தற்போது 1,000 பேர் வரை குடிநோய் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் சுமார் 400 பேர் நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். சராசரியாக மாதம் 15 – 20 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.

* திருப்பூர் அரசு மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சைப் பிரிவுக்கு மாதம் சுமார் 400 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.

* கடலூர் அரசு மருத்துவமனைக்குத் தினசரி சரா சரியாக 25 நோயாளிகள் வரை வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 524 பேர் கல்லீரல் நோயால் இறக்கின்றனர்.

எப்போது மீளும் தமிழகம்?

ஒப்பான செய்திகள்...

விளம்பரம்