அந்தக் காலத்திலும் வரி இருந்தது!
வரிமுறைகள் முற்காலத்தி்ல் எப்படி பின்பற்றப்பட்டன?
மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கைகுறித்துப் பல விவாதங்கள் எழுந்துள்ளன. நமக்கு வரிச்சலுகை கிடைக்குமா என்பது உட்பட பல எதிர்பார்ப்புகள் அனைத்துத் தரப்புப் பொதுமக்களின் மனதிலும் எழுவது இயல்பு. இந்த வரிவிதிப்பு முறை முற்காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா?
மன்னராட்சிக் காலத்திலும் சரி, மக்களாட்சிக் காலத்திலும் சரி, வரியை ஏன் செலுத்துகிறோம் என்று யோசிக்கவும் நேரமின்றி ஓடுவது நம் இயல்பு. உண்மையில் மனித இனம் ஒரு சமுதாய மாக வாழத் தொடங்கியபோதே வரி செலுத்தும் முறையும் உருவாகிவிட்டது. மக்களின் உயிரை யும் பொருட்களையும் பாதுகாக்க ஒரு தலைவன் தேவைப்பட்டான். மக்களுக்கு நேரும் ஆபத்துகளைத் தடுப்பது தலைவனின் கடமையாயிற்று.
ஆறாம் பங்கு மன்னனுக்கு!
இத்தகைய கடுமையான பணிக்காக, பொது மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பங்கைத் தலைவனுக்குக் காணிக்கையாக்கினர். இதை மன்னனுக்கான மரியாதையாகவோ, சன்மான மாகவோ, சம்பளமாகவோ கருதலாம். இதுவே, பொதுமக்கள் செலுத்திய முதல் வரி என வரலாற்றில் பதிவாகி உள்ளது. பண்டைய இந்தியா வின் பல இலக்கியப் படைப்புகள் வருமானத்தின் ஆறில் ஒரு பாகம் மன்னனுக்கு உரிய வரி என்று குறிப்பிடுகின்றன. ஆனால், எந்த நூலும் அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. இந்த விகிதத்துக்கான குறிப்புகள், நமது தமிழ் இலக்கியங் களில் மட்டுமே காணப்படுகின்றன.
‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தா ரோம்பல் தலை’
எனும் திருக்குறளுக்கான விளக்க உரையில் வரும் ஒரு குறிப்பில், இதற்கான காரணம் அழகாக விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒருவர் தனது மூதாதையர்கள், கடவுளர்கள், விருந்தினர்கள் மற்றும் சுற்றத்தார்கள் ஆகியோருக்கு நான்கு பங்கு போக, தனக்கென ஒரு பங்கு எடுத்துக்கொண்ட பின், ஆறாவது பங்கை மன்னனுக்குச் செலுத்தினார் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன்மூலம், தனிநபரின் வருமானம் ஆறு பங்காகப் பிரிக்கப்பட்டதையும் அறியலாம். இந்த வரிமுறைதான் சங்ககாலம் முதல் விஜயநகரப் பேரரசின் ஆட்சி வரை அமலில் இருந்தது. இதன் பிறகு ஆங்கிலேயர்கள் தம் அடிமைகளுக்கான ஒரு புதிய வரிமுறையை அமல்படுத்தினர். அதுதான், இன்று நம் சுதந்திர நாட்டின் நடைமுறையில் இருக்கிறது.
உழைப்பின்மூலம் வரி!
சோழர் காலத்தில் இருந்த வரிமுறைகள்குறித்துப் பல செய்திகள் கிடைக்கின்றன. வரி என்பது பொருள், பணம் மற்றும் உடல் உழைப்பாக மக்களிட மிருந்து பெறப்பட்டது. வெட்டி, ஆள், அமஞ்சி எனக் கல்வெட்டுகளில் காணப்படும் பல சொற்கள் இத்தகைய உடல் உழைப்பையே குறிப்பதாக நம்பப்படுகிறது.
தொழிலாளிகளின் இந்த உடல் உழைப்பு ஊர்களில் சாலைகள் போடவும் சாலைகளைச் செப்பனிடவும் ஏரி, குளம், குட்டைகளில் தூர் எடுத்தல் கரைகளைப் பலப்படுத்துதல் போன்ற பொதுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. அப்போ தெல்லாம், உடல் உழைப்பானது பொருளுக்கும் பணத்துக்கும் சமமாகக் கருதப்பட்டு மதிக்கப்பட்டது.
மன்னனின் பிறந்த நாள், முடிசூடிய நாள், வெற்றித் திருநாட்கள் போன்ற சிறப்பு நாட்கள் மற்றும் இயற்கைச் சீற்றக் காலங்களில் வரித் தள்ளுபடி, சிறப்புப் பரிசளித்தல் போன்றவை மேற்கொள்ளப் பட்டன. ஒரு மன்னன், மக்களிடம் வரி வாங்கும் முறையைச் சொல்லும் சங்க இலக்கியப் பாடல் ஒன்று, ‘மலர் ஒன்று தன் வலியை உணராதவாறு வண்டு தேன் எடுப்பதைப் போல மன்னன் செயல்பட வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறது.
முற்காலத்தில் வரிகளை எதிர்க்கும் வழக்கமும் மக்களில் சிலரிடம் இருந்தது. மன்னனின் வரியைப் பெரும் சுமையாகக் கருதியவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையெல்லாம், நாம் இப்போது செய்ய முடியாது. புதிய வரிகளை எதிர்ப்பதற்காகத் தம் ஊரை விட்டு வெளியேறிவிடுவது அந்தக் கால மக்களின் வழக்கமாக இருந்தது. வரியின் சுமையையும் மக்களின் கோபத்தையும் புரிந்து கொண்ட மன்னன், வரியைக் குறைத்து மக்களை மீண்டும் ஊருக்குத் திரும்ப வைத்த வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.
ஆனால், இன்றைய வரிமுறை முற்றிலும் எதிர்மறையாக உள்ளது. மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதமும் பாதுகாப்பும் தர இயலாத மக்களாட்சி, வரியை மட்டும் வசூல் செய்துகொள்கிறது. நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, வயது வரம்பில்லாப் பாலியல் பலாத்காரம் போன்ற பல கொடுமைகளுக்குப் பொதுமக்கள் ஆளாகின்றனர். இந்தக் கொடுமை களை இன்றைய அரசுகளால் தடுக்க இயலவில்லை. தன் கடமை செய்யத் தவறிய அந்த அரசுகள், மக்களின் மீதான வரிகளை உயர்த்தவும் தவற வில்லை. தற்போது, பெருநிறுவனங்கள் அதிக வரி செலுத்துகின்றன என்பதற்காக அவற்றுக்கு, அதிக அளவில் சலுகைகளை அரசு அளிக்கிறது. இவை சாதாரணப் பொதுமக்களுக்கு மறுக்கப்படுவதுதான் வேதனை!