வரலாறை சேகரிக்கும் மன்னர் மன்னன்

வரலாறை சேகரிக்கும் மன்னர் மன்னன்

இரண்டாயிரம் ஆண்டு பழமையான தமிழக நாணயங்களின் கண்காட்சி. இடம், அரும்பாக்கம் காவல் நிலைய எதிர்ப்புறம். நடத்தியவர் , 25 வயது, நாணய ஆராய்ச்சியாளரும், சேகரிப்பாளரும், 'பயிற்று' அமைப்பின் நிறுவன தலைவருமான மன்னர் மன்னன். அவரிடம் இருந்து...

நாணய சேகரிப்பு பற்றி:
தஞ்சாவூர் தான் என்னோட சொந்த ஊர். நான் மூணாவது படிச்சிட்டு இருந்தப்போ, ஒரு வித்தியாசமான ஆங்கிலேய நாணயம், எனக்கு கிடைச்சது. அதை, எங்க வீட்டுக்கு வர்றவங்ககிட்டே எல்லாம் காட்டி பெருமைபட்டுக்குவேன். அப்படித்தான், எனக்கு நாணயத்து மேல ஈர்ப்பு வந்தது. இப்போ, எங்கிட்ட 2,000க்கும் மேற்பட்ட நாணயங்கள் இருக்கு.கடந்த, 2012ல், 'பயிற்று'ங்கற அமைப்பை ஏற்படுத்தி நாணயவழி வரலாற்றை, பள்ளி, கல்லுாரிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு இலவசமா காட்சிப்படுத்திக்கிட்டு வர்றேன்.

தமிழக வரலாற்றில், குறிப்பிடும்படியான நாணயங்கள் பற்றி சிறிது

பாண்டிய மன்னன் பெருவழுதி நாணயம்:

கடந்த, 1850களில், உ.வே.சாமிநாத அய்யர், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சீவக சிந்தாமணி உள்ளிட்ட ஓலைச்சுவடிகளை, நுால்களாக பதிப்பித்து, அவை 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் என்று சொன்னார். ஆனால், அவற்றை, மற்ற மொழி ஆய்வாளர்கள் நம்ப தயாராக இல்லை. அந்த நுால்கள் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகவும், அதில் வரும் பெயர்களும் வரலாறும் கற்பனையாகவும்
இருக்கலாம் என்றனர்.கடந்த, 1980களில், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி சேகரித்த, பெருவழுதி நாணயத்தில், சங்க இலக்கியத்தில் வரும் பாண்டிய மன்னனின் 'பெருவழுதி' என்ற பெயர் இருந்தது. அதற்கு பின்தான், தமிழகத்தின் இலக்கிய பழமையையும், 2,000 ஆண்டு கால வரலாற்றையும் ஏற்றுக்கொண்டனர் உலக வரலாற்று ஆய்வாளர்கள்.
 

ராசராச சோழன் நாணயங்கள்:

ராசராசன் நாணயத்தில், சோழர் சின்னத்துடன், இரண்டு விதமாக, சாளுக்கியர்களின் சின்னமான பன்றி உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.ஒன்று, வெண்கொற்றக் குடையுடன் கூடிய பெரிய பன்றி. இந்த நாணயம், மேலை சாளுக்கிய மன்னனுக்கு பெண் கொடுத்த போது, அந்த உறவை தன் நாட்டுக்கு தெரிவிப்பதற்காக வெளியிட்டிருப்பது.மேலே வெண்கொற்றக் குடையுடன் கூடிய பெரிய பன்றியும், கீழே சிறிய பன்றியும் உள்ள நாணயம், அவன் மேலை, கீழை சாளுக்கியர்களை வென்றதன் சாட்சி.கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள்ல கிடைக்கிற ராசா ராசன்  நாணயம், அவனோட ராஜாங்க எல்லையை காட்டுது.

Chola Kingdom

அலுமினியம் பிரித்தெடுக்கிற தொழில்நுட்பம் அறியாத போது, விலை உயர்ந்த உலோகமா கருதப்பட்டிருக்கு. அப்போதே, ராசராசன்  அலுமினியத்துல நாணயங்களை வெளியிட்டிருக்கான். அதனால அவனோட செல்வ செழிப்பை தெரிஞ்சுக்க முடியுது.கட்சு வழங்கும் பெருமாள் நாணயம்: நாணயத்தின் இரண்டு பக்கமும் பாண்டியனின் சின்னமான மீனும், பல்லவர்களின் தெய்வமான கட்சு வழங்கும் பெருமாள் (வரதராஜ பெருமாள்) என்னும் எழுத்தும் கொண்டு குழப்பமான நிலையில் காணப்படும் நாணயம். ஒரு அரசை தோற்கடித்து, அவன் கோட்டையில் இருந்துகொண்டு, வெற்றி பெற்றவன் நாணயம் வெளியிட்டிருக்கிறான் என்ற உண்மையை வெளியுலகத்துக்கு உணர்த்திய நாணயம் இது.
 

காசு, 'கேஷ்' ஆன கதை:

18ம் நுாற்றாண்டில், சென்னை மின்ட் பகுதியிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியிட்ட நாணயத்தில், காசு என்னும் தமிழ் சொல்லுக்கு பதிலாக, ஆங்கிலத்தில் 'கேஷ்' என, குறித்து உள்ளனர். இதுதான், ஆங்கில வார்த்தை, 'கேஷ்', தமிழில் இருந்து மருவியது என்பதற்கான ஆதாரம்.

வரலாறு தெரியாமல், அறிவியல் மட்டும் அறிந்து கொள்பவர்களால், அடுத்த நாட்டுக்கு தான் பயன். வரலாறு தெரிந்து, தேசப்பற்றும் கொண்டவர்களால் தான் தாய்நாட்டுக்கு பயன். நம் நாட்டுக்கு பயன்படக்கூடிய, இளைய சமூகத்தை உருவாக்க வேண்டும்.


மன்னர் மன்னன்,
நிறுவன தலைவர், 'பயிற்று' அமைப்பு
99448 84432

 நன்றி: படங்கள் தினமலர் மற்றும் விக்கிபீடியா


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்