நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்தால் ஆயுள் குறையும்!
பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே முடங்கி கிடக்க வேண்டியதாகி விடுகிறது.அதே சமயம் வீட்டிலுள்ள பெண்கள் ஆடாமல் அசையாமல் சீரியலில் மூழ்கி விடும் போக்கே நிலவுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சனைகள் ஏராளம் என்று அடிக்கடி எச்சரிக்கைக் குரல் ஒலித்தாலும் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்தால் ஆயுள் குறைவதாகவும் குறைவாக அமர்ந்தால் ஆயுள் கூடுவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.எனவே நீங்கள் கடின உழைப்பாளியாக இருந்தாலும் வாழ்நாளில் பாதி நாட்கள் இருக்கையில் அமர்ந்து ஆயுளை குறைத்து கொள்ள வேண்டாம்.
தினந்தோறும் நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்தால் தசைகளின் செயல்பாடு குறைந்து பல பிரச்னை கள் உருவாகின்றன.தசைகளில் தான் அதிகப்படியான கொழுப்புகள் சேமிக்கப்படுகின்றன. எனவே,
ஒரே இடத்தில் எந்த நடவடிக்கையும் இல்லாமல் சும்மா மூச்சு விட்டுக் கொண்டிருந்தால் கலோரி கள் எரிக்கப்படுவது குறையும். அதன் காரணமாக ‘குளூக்கோஸ் கன்வர்ஷன்’ மிகவும் குறைந்து, முடிவில், ‘டைப் 2 டயாபடீஸ்’ என்ற வகையிலான, சர்க்கரை நோயை உருவாக்கி விடும். எனவே, சுறுசுறுப்பாக, ஓடி ஆடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் தான், ஆக்சிஜன் அதிகம் உள்வாங்கப்பட்டு கலோரிகள் எரிக்கப்பட்டு கொழுப்பு குறைகிறது. தொடர்ந்து ஆறு வாரம் உட்கார்ந்தே இருந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்கும்.
உதாரணமாக பிரியாணி சாப்பிட்டு, சில மணித்துளிகள் கழிந்து உடற்பயிற்சி செய்தால், அது நல்ல கொழுப்பாக மாறும். ஆனால், எவ்வித உடற்பயிற்சியும் செய்யாமல் தூங்கினால், அது கெட்ட கொழுப்பாக மாறும்.எனவே வீடு அல்லது அலுவலகத்தில் ‘லிப்ட்’ இருந்தாலும் அதை தவிர்த்து படிகளில் ஏறலாம். தெருமுனையில் இருக்கும் ஏ.டி.எம்., செல்ல ‘பைக்’ எடுக்காமல் நடந்து செல்லலாம்.அலுவலகத்திற்குள் ‘இன்டர்னல் மெயில்’ அனுப்புவதற்கு பதில் ஒரு சிறிய நடை நடந்து அவர்களின் ‘கேபின்’ சென்று கைகுலுக்கலாம்.
ஏனெனில், தொடர்ந்து கணினியில் வேலை செய்யும் பலருக்கும் ‘சிஸ்டம் ரேடியேட்டிங் பெய்ன்’ எனும் ராடிகலோபதி ஏற்படுகிறது.கணினியில் பணியாற்றும் போது முதுகு தண்டு, தலை, தோள்பட்டை போன்றவை நேராக இருக்க வேண்டும். மேலும் ‘மானிட்டர்’ சரியான அளவாகவும், அது வைக்கப்பட்டிருக்கும் கோணமும் சரியாக இருக்க வேண்டும். ‘கிராஸ் லெக் பொசிஷன்’ அதாவது கால் மேல் கால் போட்டு அமர்வது மற்றும் கோணலாக அமர்வதை தவிர்க்க வேண்டும்.