ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்
மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் அவர்களின் கருத்துக்கள்
அரசுப் பள்ளிகள் நமது வரிப்பணத்தில் தான் நடக்கின்றன. ஒரு சாதாரண தீப்பெட்டி வாங்கினால் கூட அதில் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். தீப்பெட்டி இல்லாத வீடு எதாவது இருக்கிறதா? அப்படி இருக்க, நமது வரிப்பணத்தில் நடக்கும் பள்ளிகள் முறையாக நடக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டியதும் நமது கடமை தான். ஆசிரியர்களை போதுமான அளவு நியமிக்காவிடில் அதற்காக போராட வேண்டும். அப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வராவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கவும் நாம்தான் போராடியாக வேண்டும்.
தனியார் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். அரசு பள்ளிகளில் நாற்பது சதவீத மாணவர்களுக்குத்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை நாற்பதால் வகுத்து அந்த எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதால் பிரச்சினை தீராது. அரசு இதனைத்தான் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஐந்து வகுப்பு வரை இருந்தால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். ஒரே ஒரு மாணவர் இருக்கும்பட்சத்தில் கூட அதற்கு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். ஐந்தாம் வகுப்பு முடிக்கும் மாணவருக்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டும் என்று வெறும் பாடத்திட்டத்தை மட்டும் வரையறுத்துக் கொடுத்து விட்டு ஆசிரியர்களை முறையாக நியமிக்காவிடில் அரசு பள்ளிகள் என்றுமே முன்னேற முடியாது.
ஆசிரியர்கள் நடத்தும் குழந்தைகள் மீதான் பாலியல் வன்முறைகளை இப்போது பெரிதாக பேசுகிறோம். ஊடகங்களும் இவற்றை வெளியில் கொண்டு வந்துள்ளன. எங்கள் காலத்திலும் இப்படியான பாலியல் வன்முறை சம்பவங்களை நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. அப்போது ஆசிரியருக்கு எதிராக பேசினால் அடி கிடைக்கும் என்பதால் யாரும் இதனைப் பேசவில்லை.
முன்னர் பொதுப்பள்ளி முறை இருந்தபோது முதலாளி மகனும், தொழிலாளி மகனும் அருகருகே அமர்ந்து கற்றனர். அவர்களிடையேயான தோழமை உணர்வை பொதுப்பள்ளி முறை வளர்த்தது. ஆனால் இப்போது கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைக்கு ஒரு பள்ளி, லட்சாதிபதி பிள்ளைக்கு ஒரு பள்ளி, ஆயிரங்களில் சம்பளம் வாங்குபவன் பிள்ளைக்கு ஒரு பள்ளி, ஒன்றுமில்லாதவன் பிள்ளைக்கு ஒரு பள்ளி என சமூகத்தில் இருக்கும் பிரிவுகளையே பள்ளித்துறையும் பின்பற்றுவதாக மாறி விட்டது.
தென் மாவட்ட சாதிக்கலவரங்களின் போது நான் அங்கே ஒரு பதினைந்து நாட்கள் போயிருந்தேன். அங்கே சாதிவாரியாக பள்ளிகள் பிரிந்து கிடக்கின்றன. பறையர் சாதியினை சேர்ந்தவர் தலைமையாசிரியராக இருக்கும் பள்ளியில் தேவர் சாதி மாணவர் சேர மாட்டார். தேவர் சாதி தலைமையாசிரியர் இருக்கும் பள்ளியில் பள்ளர் சாதியினை சேர்ந்த மாணவர் சேர மாட்டார். இருப்பது ஒரே பொதுப்பள்ளியாக, ஊருக்கு ஒரே பள்ளியாக இருக்கும்பட்சத்தில் இதெல்லாம் நடக்குமா? சாதியத்தை ஒழிப்பதற்கு பதிலாக தனியார் பள்ளிகள் இதனை வளர்க்கத்தான் உதவுகின்றன. தரமான கல்வி, மருத்துவத்தை அரசுதான் மக்களுக்கு தர வேண்டும்.
கல்வியை போலவே மருத்துவத்தையும் தனியாருக்கு திறந்து விட்டவர் எம்.ஜி.ஆர்.தான். அப்பல்லோவுக்கு அனுமதி கொடுத்தவர் அவர்தான். கூடவே அரசு மருத்துவமனை நன்றாக நடக்க விடாமலும் செய்தார். அரசு மருத்துவமனைகள் ஒழுங்காக நடந்தால் அப்பல்லோவுக்கு எப்படி ஆட்கள் வருவார்கள். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தற்போது ரூ 2 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகளுக்கு 2000 தனியார் மருத்துவமனைகள் பரிந்துரைக்கப்பட்டு, அங்கு விலையில்லா மருத்துவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை நான் எதிர்ப்பவன். இதனை அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சையாக தர வேண்டும் என்பவன். சொல்லப் போனால் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு பாடம் கற்பித்தவர்களே இந்த நமது அரசு மருத்துவமனையில் உள்ள பேராசிரியர்கள்தான், இவர்களை விடவும் மிகவும் அனுபவம் உடையவர்கள். முன்னர் கவர்னர் முதல் அமைச்சர் வரை எல்லோருமே அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்தார்கள். நானே அப்படி பல அமைச்சர்களை அரசு மருத்துவமனையில் சென்றுதான் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அவர்கள் எல்லாம் அப்பல்லோவுக்கும், ராமச்சந்திராவுக்கும் ஏன் ஓடுகிறார்கள்? இது தவறு. அரசின் கொள்கை இது. தனியார்மயம் உலக வங்கியின் நிர்ப்பந்தம் காரணமாக நடக்கிறது. முன்னர் விசா மறுத்த அமெரிக்கா இப்போது ஏன் மோடிக்கு பின்னால் வருகிறது. அவனுக்கு வியாபாரம் நடக்க வேண்டும். அதனால் தான் இப்போது காலைப் பிடிக்கிறான்.
ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம் என்று சொல்கிறேன். உங்களுக்கு வேலை தரும் அமெரிக்காக்காரன் உங்களுக்கு எவ்வளவு ஆங்கிலம் தெரியும் என்று பார்த்து வேலை தருவதில்லை. உங்களுக்கு எவ்வளவு கணிதம், அறிவியல், பொறியியல் தெரியும் என்று பார்த்துதான் தருகிறான். ஒரு மொழியை ஓராண்டுக்குள் படித்து விட முடியும். இங்குள்ள துணைத்தூதரகங்களில் அதற்கான பயிற்சியும் தருகிறார்கள்.
ஆறு மாதங்களில் அலையன்சு பிரான்சிசில் (Alliance Française) பிரெஞ்சு மொழி கற்றுத் தருகிறார்கள். அதிலும் தினமும் கூட வகுப்பு கிடையாது. மாக்ஸ்முல்லர் பவனில் (Max Mueller Bhavans) எட்டு மாதங்களில் ஜெர்மன் மொழியை கற்றுத் தருகிறார்கள். ஓராண்டுக்கு மேற்பட்ட படிப்பு எங்குமே கிடையாது. சிறிதும் பரிச்சயமில்லாத இம்மொழியை ஓராண்டுக்குள் கற்க முடியும்போது, ஏற்கெனவே ஓரளவு நமது சமூகத்தில் நடைமுறையில் உள்ள பரிச்சயமுள்ள ஆங்கிலத்தை டிகிரி வரை பதினைந்து ஆண்டுகள் ஏன் கற்க வேண்டும். இரண்டு கோடை விடுமுறைகளில், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் முப்பது நாட்கள் என ஆக 120 மணி நேரத்தில் ஆங்கிலத்தை கற்றுத்தந்து விட முடியும்.
நம்ம ஊரில் பிறந்து, வளர்ந்த, மொழி கற்ற ஒரு ஆசிரியரால் எப்படி ஆங்கில வழியில் அறிவை கற்றுத்தந்து விட முடியும். இங்கு எல்லாம் வெறும் மனப்பாட கல்வியாகத்தான் சொல்லித்தர முடியும். "
" நம் ஊரில் ஏழு லட்சம் பொறியாளர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லாமல் இருப்பதால் அல்ல. பொறியியல் அறிவு இல்லாமல் இருப்பது" .
உயர்கல்வியினை தமிழ்வழியில் கொடுப்பதை கோரும் தீர்மானங்கள் முன்னர் ஆசிரியர் சங்க கூட்டங்களில் முதல் முதலாக வைக்கப்படும். இன்றைக்கு ஆரம்ப கல்வியே தாய்மொழியில் இல்லாத நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்விக்காக நான் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். ஏறக்குறைய 161 நாடுகளைப் பார்த்த வரையில் எங்குமே பயிற்றுமொழி வேற்றுமொழியாக ஒரு நாட்டில் கூட இல்லை. கல்தோன்றி முன்தோன்றா காலத்தே தோன்றியதாக சொல்லிக் கொள்ளும் நாம் தோன்றி 1300 ஆண்டுகள் மட்டுமேயான ஆங்கில மொழியில் தான் கற்கிறோம். சோவியத் யூனியனில் இருந்த துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் போன்ற நாடுகளில் கூட நர்சரி பள்ளி துவங்கி ஆய்வுப்படிப்பு வரை தாய்மொழியில்தான் கல்வி கற்றல் நடைபெற்று வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற மூன்று ஜப்பானிய விஞ்ஞானிகள் கூட அவர்கள் தாய்மொழியில்தான் ஆய்வுப்படிப்பு வரை கல்வியை மேற்கொண்டிருக்கின்றனர். அவர்களில் இருவர் ஜப்பானில்தான் இப்போதும் உள்ளனர். ஒருவர் மட்டும்தான் அமெரிக்கா போயுள்ளார். ஜப்பானியர்களுக்கு ஆங்கில அறிவு குறைவுதான்.