இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

பிள்ளையார் பட்டியின் திருக்கோயில் தோற்றம்

பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது.

பிள்ளையார்பட்டி என்னும் பெயரே இது விநாயகப்பெருமான் கோயில் கொண்டருளும் ஒரு சிற்றுர் என்பதை நன்கு விளங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும், 1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், 2. மருதங்குடி, 3. திருவீங்கைகுடி, 4. திருவீங்கைச்வரம், 5. இராசநாராயணபுரம் என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன.

இங்கு இரண்டு இராஜகோபுரங்களுடன் கூடிய பெரிய திருக்கோயில் மிக்க பொலிவுடன் விளங்குகிறது. ஆகம நெறிப்படி அருமையாக பூஜைகள் நடைபெறும் இக்கோயிலில் திருப்பணியை கூர்ந்து நோக்குவோமானால் நான்கு முறையாக திருப்பணி நடந்திருக்கின்றமை நன்கு புலனாகும்.

முதன்முதலாக நடந்த திருப்பணி இன்று காணப்பெறும் திருக்கோயிலின் தெற்கு புறத்தில் கீழ்மேலாக நீண்டு கிடக்கும் குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து சமைக்கப் பெற்ற குடைவரைக் கோயிலாகும்.

இந்த குடைவரைக் கோயிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கிழ்மேல் ஓடிய பத்தி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்கள் இடைநிற்க தென்வடல் ஓடிய இரட்டைப்பத்தி மண்டபம் காணப்படும். அம்மண்டபத்தின் கீழ்புறபத்தியில் தென்பால் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் விளங்கும் கற்பக விநாயகர் திருக்கோலம் அர்த்த சித்திரம் ஆக வடக்கு நோக்கி விளங்கக் காண்போம். இந்த மூர்த்தி தான் பிள்ளையார்பட்டியின் பெருந்தெய்வமான கற்பக விநாயகரான தேசிவிநாயகப் பிள்ளையார்.


அதற்கு மேற்கே அதேமலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கர நராயணர் உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்.

அந்த மேல்புரத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய திருவுண்ணாழி துங்கானை மாட அமைதியிற் குடையப் பெற்றுள்ளது. அதன் நடுவிலே கடைந்தமைத்த பெரியதொரு மஹாலிங்கம் பொழிந்தினிது துலங்கக் காண்போம்.  இந்த மூர்த்தி தன் திருவீசர் என்று விளங்கும் திருவீங்கைக்குடி மஹாதேவர் .

அங்கிருந்து சிறிது வடக்கே வந்து மேற்கே சென்று தெற்கு புறமாக பார்த்தோமானால் திருவுண்ணாழியின் வடபுற வெளிச்சுவரில் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம். இந்த அளவில் உள்ள குடைவரைக் கோயில் தான் முதல்திருப்பணி ஆகும்.

இக்குடைவரைக் கோயிலுக்குள் சுவர்களிலும் தூண்களிலும் காணப்பெறுகின்ற கல்வெட்டுகள் நமக்கு ஓரளவு செய்திகளைத்தான் புலப்படுத்துகின்றன என்றாலும் அவற்றில் இருந்து மிக முக்கியமான செய்திகளும் சில கிடைக்கின்றன.

முதன் முதலில் மருதங்குடி வயல்களை மருதங்குடி ஊராரிடம் பிள்ளையார்பட்டி கோயில் நகரத்தார் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் பின்னர் சம்மந்தப்பட்ட அதனையூர் நாட்டவரிடமும், கீழ்குண்டாற்று நாட்டவரிடமும், அவர்களுக்கு உள்ள உரிமையை வாங்கி பிடிபாடு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்நாளில் பாண்டி மண்டலத்தை வென்று ஆட்சி செய்த (பரகேசி மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரான) கோனேரின்மை கொண்டானிடம் முழு உரிமையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவன் நகரத்தார்களுக்கு கொடுத்த திருமுகத்திலுருந்து மருதங்குடியில் இராசநாராயணபுரம் என்ற பெயருடன் ஒரு நகரம் அமைத்து அதில் குடியேறி வாழ்ந்துவர அனுமதித்திருக்கிற செய்தி நன்கு புலனாகிறது.

மருதங்குடியான இராசநாராயணபுரம் என்னும் பிள்ளையார்பட்டியும் கீழ்குண்டாற்று நாட்டில் அடங்கியதே. எனவே பிள்ளையார்பட்டியை "கேரள சிங்கவள நாட்டு கீழ்குண்டாற்று நாட்டில் மருதங்குடியான இராச நாராயணபுரத்து பிள்ளையார்பட்டி" என்றே குறிப்பிட வேண்டும்.

பிள்ளையாரின் பெருமை


உலகம் யாவையும் காத்துத் துடைக்கும் முழுமுதல் இறைவன் ஒருவனே. அவனை இப்படியேன் இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று நம் போன்றவர்கள் எளிதில் உணரமாட்டோம். ஆனாலும் உண்மை உணர்ந்த அருள்பழுத்த நெஞ்சினர்கள் அவனுக்கு அவனருளாலே ஆயிரமாயிரம் திருப்பெயர்களையும், திருவுருவத்தையும் தந்து நாமுய்ய வழிவகுத்தருளியிருக்கிறார்கள். அவையனைத்தும் அறவோர் தியானத்தில் முளைத்தவை. அவற்றிர்கெல்லாம் தத்துவப்படியும், ஆகமமுறையிலும், சிற்ப நெறியிலும் தியான ஸ்லோகங்கள் எண்ணற்றவை நமக்கு உண்டு.

பிள்ளையார், மூத்த திருப்பிள்ளையார், கணபதி, கணேசன், கணநாதன், விநாயகன், விக்கின விநாயகன், விக்கினராஜன், விக்கினேசுவரன், கஜமுகன், கரிமுகன், யானைமுகன், வேழமுகன், தும்பிக்கையன், அத்தி முகன், ஐங்கரன், அங்குசபாசன், முன்னவன், ஓங்காரன், பிரணவப்பொருள், கற்பக மூர்த்தி, கற்பக விநாயகன், கற்பக பிள்ளையார் முதலான பல பொதுப்பெயர்களை கொண்டருலும் பெருமான் இடத்திற்கு தக்கபடி பலப்பல காரணங்களால் சிறப்பு பெயர்கள் பலவற்றை தாங்கி அருள்வதை நாம் நன்கறிவோம்.

இந்த மூர்த்தீயின் உருவ தத்துவத்தைச் சிறிது சிந்தித்து பார்த்தாலும் அதன் அருமை நன்கு புலப்படும். பிள்ளையாரை ஞானத்தின் அதிதேவதை என்பர் நூலோர் யானைத்தலையே அதற்குச் சான்று. ஓங்கார ஒலிக்குறிய வரிவடிவமான ஓம் என்பதை காட்புலனாகும்படி காட்ட யானைத்தலையே பெரிதும் ஏற்றதாயிருக்கிரது.வலப்புற தந்தம் ஒடிந்ததான அமைதியில் காட்டப்பெருவதன் மூலம் 'ஓ' என்ற எழுத்தின் தொடக்கச்சுழி கிடைத்து விடுகிறது. அங்கிருந்து மேல் நோக்கி வலஞ்சுழித்து இடக்காது வரை சென்று வலைந்த இடத்தந்தத்தின் வழியாக கீழ் நோக்கி துதிக்கை நுனி வரைக் கோடிட்டால் 'ஓ' என்ற வரி வடிவம் தோன்றிவிடக்காண்போம். கையில் உள்ள மோதகம் 'ம்' என்ற வரி வடிவத்தை சுட்டுகிறது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் வலம்புரி பிள்ளையாராக இருப்பதால், பெரும்பாலான மற்ற இடங்கலில் உள்ள மூர்தங்களை விட விளக்கமாக இவ்வுண்மையை (ஓங்கார சொரூபத்தை) புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பிள்ளையாரின் சிறப்பு

1. இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது.
2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
4. வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது.
5. இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.
6. வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.

7.ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது.

ஆகிய இவை பிள்ளையார்பட்டி பெருமானிடம் காணப்பெறும் சிறப்பாகும். இவற்றால் நாம் உணரக்கூடியது உணர வேண்டியது ஒன்று. பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தோன்றிய ஆதி நாளிலேயே இந்த மூர்த்தம் அமைக்கப் பெற்றிருக்கிறது என்ற உண்மை தான் அது.
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்