உலகின் முதல் மனிதன் உருவானது எங்கே?

உலகின் முதல் மனிதன் உருவானது எங்கே?

உலகின் முதல் மனிதன் உருவானது எங்கே?

நமது உண்மை - டிசம்பர் 16-31, 2012, இதழில், ஜாதியைத் தகர்க்கும் மரபணு என்ற கட்டுரை வெளிவந்ததைத் தொடர்ந்து 2013 ஜனவரி 1-15 உண்மை இதழில் மதுரை காசிநாதன் அவர்களால் எழுதப்பெற்ற மதுரையில் மரபணு ஆய்வு மய்யம் என்ற குறுங்கட்டுரை வெளிவந்துள்ளது.


இவற்றின் அடிப்படையில் மரபணு ஆய்வு நெறியில் உலகின் முதல் மனிதன் பிறந்த இடம்பற்றிய விளக்கமான தகவல்களை நாம் தந்துள்ளோம்.

வேண்டுதல் - வேண்டாமை வேண்டாம்:

இவ்விளக்கம் வேண்டுதல் _ வேண்டாமை இன்றி வெளியிடப்பட்டுள்ள அறிவியல் ஆய்வு முடிவு ஆகும். விருப்பு, நம்பிக்கை, ஆர்வம் முதலானவற்றை மூட்டைகட்டிவிட்டுத் தொடர்ந்து பார்ப்போம்.

மதி மனிதன்

மனிதன் பொதுவாக, விலங்கினத்தைச் சேர்ந்தவன். அனைத்து மாந்தர்களும் மதிபெற்றவர்கள் எனப் பொருள்படும் (Man, the wise) ஹோமோ சேப்பியன் (Homo Sapien) என்னும் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

யாரோ? அவர் யாரோ?

இன்றைய புதிய மதிமனிதனின் முன்னோர்கள் யார்? அவர்கள் எங்கே உருவாயினர்? _ என்று மனித இன அறிவியல் ஆய்வாளர்கள் ஆய்ந்து கூறியுள்ளனர். இந்த ஆய்வுக்கு, உதவ புதைபடிவச் சான்றுகள் உள்ளன. இவற்றை வைத்துக்கொண்டு புதிய மதிமனிதனின் முன்னோர்கள் அவர்களின் பிறப்பிடம், இருப்பிடம் இவற்றை ஆய்ந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

மண்டை ஓடுகள் கூறும் மாபெரும் உண்மை

உலகம் முழுதும் 6 ஆயிரம் மண்டை ஓடுகளைத் திரட்டி அவற்றை ஆய்வு செய்ததில், ஆப்ரிக்காவில் சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஒரு பகுதியிலிருந்து தற்போதுள்ள மனித இனம் தோன்றியதாக, உறுதியாகத் தெரிகிறது. _ என, கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் (Department of Zoology) சார்ந்த ஆண்ட்ரியா மானிகா கூறியுள்ளார்.

உலகெங்கும் பரவிய உண்மை

மனித இனம் ஆப்ரிக்காவிலிருந்து பரவி உலகெங்கும் நிறைந்திருக்கிறது என்பதே உண்மை_தகவல்: 28.7.2007 விடுதலை நாளிதழ்.

மனித இனத்தின் மூல இடமே ஆப்ரிக்காதான்; மண்டை ஓடுகளை ஆய்வு செய்து பெற்ற உண்மை. _ தலைப்பு, மற்றும், உலக மனிதரின் தாய் ஓர் ஆப்ரிக்கப் பெண் _தினமணி -_ அக்டோபர் 22, 1988.

உறுதிப்படுத்தும் ஓர் ஆய்வுமுறை

மண்டை ஓடுகள் வழி, கருதப்பட்ட மனித இனம் ஆப்ரிக்காவிலிருந்து தோன்றி பரவியது என்ற உண்மையை உறுதிப்படுத்தும் ஒரு முதன்மையான ஆய்வு உண்டு. அதுதான் மரபணு ஆய்வு.

இது, இன்றியமையாதது:

இந்த மரபணு ஆய்வினை முழுதும் விளங்கிக் கொள்ள முதலில் சில அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்வது மிக மிக இன்றியமையாத ஒன்று ஆகும்.

அகப்பட்டுக் கொண்டாள் அம்மா

இன்றைய 500 கோடிப் பேர்களின் தாய் ஆப்ரிக்காவின் அடர்ந்த காட்டில் அலைந்து திரிந்தவள். இன்றைய அத்துணை பேருக்கும் இவள் ஒருத்திதான் தாயா? இருக்க முடியாது! இவள் போன்ற உடல் வலிமை படைத்த பல பெண்கள் _ அம்மாக்கள் இருந்திருக்கலாம். ஆனால், அனைவரும் ஒரே தன்மை கொண்டவர்கள்தாம்!

பாட்டிக்கெல்லாம் பாட்டி

எனவே, புதிய மனித இனத்தின் தாய் ஒருத்தி மட்டுமன்று; பலர். இவர்களே, நமது பாட்டிகளுக்கெல்லாம் பாட்டிகள்; பெரும்பாட்டிகள். 10 ஆயிரமாவது பாட்டி!

கண்டம் விட்டுக் கண்டம்

இந்தப் பெண்ணின் மூதாதையரும் இந்த ஆப்ரிக்கக் காட்டில் பிறந்தவர்கள்தாம். அவர்கள் இவர்களுக்கு முன், 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள். இவர்களில் பலர், உலகின் பல கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து (Migrate) சென்று மறைந்திருக்கலாம்.

எவர், எவர்? எங்கெங்கே?


அவர்களின் வழித்தோன்றல்களின், எச்சங்கள் பீகிங் மனிதன் ஆக, சீனாவிலும், ஜாவா மனிதன் ஆக ஜாவாவிலும், நியாண்டர்தால் மனிதன் ஆக ஜெர்மன் நாட்டின் நியான்டர்தால் பள்ளத்தாக்கிலும் வாழ்ந்து, மறைந்திருக்கிறார்கள். இவர்களே, உலகின் பல பகுதிகளுக்கும், அதாவது அய்ரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என கால வெள்ளத்தில் நகர்ந்து பல்லாயிரம் ஆண்டுகளில் ஆங்காங்கே நிலைக்கத் தொடங்கினர்.

10 ஆயிரமாவது பாட்டி 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தனது வழித்தோன்றல்கள் பலருடன், பிறந்த இடத்தை விட்டு, இவ்வாறு நகரத் தொடங்கினார்.

அந்த மரபணுவின் அந்தரங்கம்!

மரபணு ஆய்வு பற்றி இப்பொழுது பார்க்க இருக்கிறோம். அதற்கு முன், முதலில் மனித உயிரணு (Cell); அதன் உட்கரு (Nucleus); உட்கருவின் உள்ளே உள்ள குரோமோசோம்கள் (Chromosomes); குரோமோசோமில் உள்ள மரபணுக்கள் (genes); மரபணுக்களுள் உள்ள டி.என்.ஏ. (D.N.A. மூலக்கூறுகள்: Deoxiribo Nucleus Acid).. டி.என்.ஏ. மூலக்கூறுகளில் உள்ள நால்வகை நைட்ரஜன் பொருள்கள் இவற்றை நினைவுகொள்ள வேண்டும்.

மறைவாய்ப் புதைந்து கிடக்கும் மர்மங்கள்:

மரபணுவில் உள்ள டி.என்.ஏ.தான் நமது நிறம், மூக்கின் நீளம், முக அமைப்பு, தலைமுடிவரை தீர்மானிக்கிறது. இந்த டி.என்.ஏ.வைவிட மற்றொரு டி.என்.ஏ. சந்தடி இல்லாமல் நமது மூதாதையரின் மறைபொருள் (இரகசியங்)களைப் புதைத்து வைத்திருக்கிறது. அந்த டி.என்.ஏ.தான் மைட்டோகாண்டிரியா டி.என்.ஏ. (Mitrocandria D.N.A.) ஆகும். இது, உயிரணு (Cell)வின் சைட்டோபிளாசத்தில் (Cytoplasm) உள்ள மைட்டோகாண்டிரியாவில் உள்ளது. இவ்வண்ணம், நம் உடல் உயிரணு (Cell)வில் இருவகை டி.என்.ஏ.க்கள் உள்ளன. ஒன்று, உட்கரு டி.என்-.ஏ; மற்றொன்று, மை.டி.என்.ஏ. இது உட்கருவுக்கு வெளியே உள்ளது.

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!!

இந்த உட்கருவில் உள்ள டி.என்.ஏ.யை நம் அம்மாவும் அப்பாவும் வழங்குகிறார்கள்! ஆனால், மைட்டோகாண்டிரியா டி.என்.ஏ.யை அம்மா மட்டுமே வழங்கமுடியும்!

முதல் பெண்மணியின் முகவரி

ஆக, ஒரு மனிதனிடம் காணப்படும் மை.டி.என்.ஏ.யை வைத்து அவனுடைய அம்மாவை, அம்மாவுக்கு அம்மாவை, பாட்டியை, பாட்டிக்குப் பாட்டியை 10 ஆயிரமாவது பாட்டியைக் கண்டுபிடித்து விடலாம். இந்தப் பத்தாயிரமாவது பாட்டிதான் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் வாழ்ந்த முதல் பெண்மணி.

வியப்பின் மேல் வியப்பு!!

அமெரிக்க அறிவியலாளர்களான, கேன், வில்சன் மார்க், ஸ்டோன்கிங்ஸ் ஆகியோர் ஆப்ரிக்கா, அய்ரோப்பா, நடு ஆசியா நாடுகளின் முந்தைய வழித்தோன்றல்களைக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த 147 பெண்களின் நச்சுக் கொடியின் செல்களைப் பிரித்து, மை.டி.என்.ஏக்களைப் பிரித்து எடுத்து ஆய்வு செய்தனர் பெர்க்ஸிசயர் பல்கலைக்கழகத்தில். என்ன வியப்பு? எல்லா மை.டி.என்.ஏ.வும் ஒன்றாகவே இருந்தன. மேலும், ஆப்ரிக்காவில் வாழும் மனிதர்களின் மை.டி.என்.ஏ.யை ஒத்திருந்தன. சென்னைப் பல்கலைக்கழக மனிதவியல் துறையும், மதுரை காமராசர் பல்கலைக்கழக உயிரியல் துறையும் கூட்டாக மரபணுக்கள் ஆய்வை மேற்கொண்டன. மதுரையை அடுத்த 3 சமுதாயத்தவரின் மரபுக் குறியீடு (Genetic Marks) மலேசியா, நியூகினியா, ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி மக்களுக்குரிய மரபுக் குறியீடுகளும் ஒத்திருந்தன. இதிலிருந்து நாம் அறிவது என்ன? ஆப்ரிக்கத் தாயின் மை.டி.என்.ஏ.வே 10 ஆயிரம் தலைமுறையாக நம்மிடம் வந்து கொண்டிருக்கிறது.

என்ன மாற்றம்? எத்தனை மாற்றம்?

ஆப்ரிக்கப் பெண்ணின் மை.டி.என்.ஏ. தொல்பழங்காலத்தது என்றும், பிறநாடுகளில் காணப்படுவன அதன் பின்னர்தான் என்றும் ஆய்வு செய்துள்ளனர். எப்படிக் கூறமுடியும் இப்படி? அதாவது, ஆப்ரிக்காவில்தான் முதல் தாய் உருவாகி இருந்தாள் என்றால், தற்பொழுது, அங்குள்ளவர்களின் மை.டி.என்.ஏ. பெருத்த மாற்றங்களைப் பெற்றிருக்கும். அதே தாயின் குழந்தைகள் இடம் பெயர்ந்து பல்வேறு காலங்களில் பல்வேறு பகுதிகளில் இடம் பெயர்ந்து சென்று வாழ்ந்த காலத்தின் அறிவிற்கேற்ப மை.டி.என்.ஏ.வில் மாற்றம் இருக்குமாம்! எடுத்துக்காட்டாக, துவக்க இடத்தில் தற்போது 32 முறை மாற்றங்களும், அடுத்த இடத்தில் 16 முறை மாற்றங்களும், அதற்கு அடுத்த இடத்தில் 8 முறை மாற்றங்களும் மை.டி.என்.ஏ. பெறுகிறது.

அனைவரும் அறிவது

மிகுந்த அளவு மாற்றம் பெற்ற, மை.டி.என்.ஏ.வே மிகப் பழமையானது என்றும் குறைந்த அளவு மாற்றம் பெற்றவை அண்மைக் காலத்தது என்றும் அறிவியலார் கூறுகின்றனர். தற்பொழுது, ஆப்ரிக்காவில் வாழ்பவர்களிடமே மிகுந்த மை.டி.என்.ஏ.வில் மாற்றங்கள் உள்ளன. எனவே, அனைவரின் பிறப்பிடம் ஆப்ரிக்கா என்பது மெய்ப்பிக்கப் பெறுகிறது.

அப்பா எங்கே?

நம்முடைய அம்மா பிறந்தது ஆப்ரிக்கா என்றால் நம் அப்பா பிறந்தது எங்கே? அப்பா பிறந்ததும் ஆப்ரிக்காதான்! ஏன் அவ்வாறு கொள்ளவேண்டும்? நம் அப்பாவின் தோற்றம்பற்றி அறிவியல் வழிமுறையில் கண்டறிந்துள்ளனர் அறிவியலாளர்கள். எப்படி அப்படிச் செப்புகிறார்கள்? ஆண்களின் டி.என்.ஏ.யினை அலசிப் பார்த்தால் தெரிந்துவிடும்.

நமது முதல் தாயின் கணவன்

ஒவ்வோர் ஆண் உயிரணு (Cell)விலும் பெண் செல்லிலும் 23 இணை குரோமோசோம்கள் உள்ளன. 23ஆவது இணை பால்(Sex) தீர்மானிக்கும் (Determination) குரோமோசோம்களாகும். இதில் 23ஆவது இணை பெண்ணில் XX  என்றும் ஆணில், XY என்றும் இருக்கும். ஆணில் குரோமோசோம் X உடன் பெண்ணின் குரோமோசோம் X சேர்ந்தால், அதாவது, XX (எக்ஸ், எக்ஸ்) என்று இருந்தால் பிறக்கும் பிள்ளை பெண் ஆகும். பெண்ணின் குரோமோசோம் X உடன் ஆணின் குரோமோசோம் Y(ஒய்) சேர்ந்தால் பிறப்பது ஆண் பிள்ளை ஆகும். அதாவது, ஆண் பிள்ளை பிறப்பதில் பெண்ணின் பங்கு இல்லை. ஆணின் பங்குதான் உண்டு!

கண்டுபிடி! கண்டுபிடி!

ஆகவே, ஆணுக்கே உரிய Y குரோமோசோமின் டி.என்.ஏ.யை ஆய்வு செய்தால் நம் அப்பா, அதாவது நம், முதல் அம்மாவின் கணவனைக் கண்டுபிடித்து விடலாம்.

கணக்குப் பண்ணிப் பார்ப்போம்?

Y குரோமோசோம் மிகவும் குட்டையானது; இதன் ஒருபகுதி X குரோமோசோமோடும், எவ்வகைக் கலப்பும் செய்ய முடியாததால் தலைமுறை தலைமுறையாக, தானாகவே வந்து கொண்டிருக்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மனித இன இயல் அறிஞர் பேராசிரியர் முனைவர் கொசர்ட் லூகோட் அவர்கள், பல நாடுகளின் ஆண் குரோமோசோமின் டி.என்.ஏ.வை ஆய்ந்து பார்த்தார் (Y குரோமோசோம்கள்). இந்த டி.என்.ஏ., தற்பொழுது நடு ஆப்ரிக்காவில் வாழும் அகா _ பழங்குடியினரோடு ஒத்திருக்கிறது. இந்தக் குழு, நடு ஆப்ரிக்காவில் அவ்பான் கல், சங்கா, லோபயா ஆகிய ஆறுகளுக்கு இடையே இன்றும் வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார் லூகோட். அந்த டி.என்.ஏ.வின் வயதைக் கணக்கிட்டுப் பார்த்தால் சற்றேறத்தாழ 2 இலட்சம் ஆண்டுகள் இருக்கும் என்கிறார் அவர்.

கண்டுபிடித்தோம் - நாம் கண்டுபிடித்தோம்

எனவே, நம் முதல் தாய் _ தந்தை இருவருமே ஆப்ரிக்காவில்தான் உருவாயினர் எனக் கொள்ளலாம். ஆப்ரிக்காவே மனித இனத்தின் மதிப்புமிகு தொட்டில் எனலாம்.

இன்றைய அறிவியல் சான்று இதுதான்!

டி.என்.ஏ. சான்றுகளின்படி இன்றைய மனிதனின் முன்னோர்கள் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில்  உருவாயினர் எனத் தெரிகிறது. அங்கிருந்து ஆசியாவிற்கு வந்து, பின்னர் உலகின் பல பகுதிகளுக்கும் பரவியிருத்தல் வேண்டும்.

குழுக்களின் பயணம் பற்றிய ஒரு சிறு குறிப்பு:

90,000 _ 85,000 ஆண்டுக் காலகட்டத்தில் பரவிச் சென்ற மனித இனம் செங்கடல் தாண்டி, அரேபியக் கடற்கரையை ஒட்டி, இந்தியத் துணைக்கண்டத்தில் குடியேறியது. இவ்வாறு, குடியேறிய குழுக்களிலிருந்து ஆப்ரிக்கர் அல்லாத இனம் தோன்றியது. 85,000 _75,000 ஆண்டுவாக்கில் மேற்கூறிய குழுவினர் தென்னிந்தியாவில், இலங்கையில் குடியேறினர்.

அண்மைக்காலத்து ஆய்வுண்மை

2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன், ஆப்ரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் முதல் மனிதன் அங்கிருந்து, குழுவாக, பஞ்சம், பருவ மாற்றம் போன்ற சூழ்நிலைகளால் மிகப்பெரும் இடப் பெயர்ச்சிக்குத் தள்ளப்பெற்று உலகின் பல பகுதிகளுக்கும் குறிப்பாக, ஆஸ்திரேலியா, ஆசியப் பகுதிகளுக்குத் தள்ளப்பட்டான் என்று அறிந்தோம்.

- பேராசிரியர் ந.வெற்றியழகன்

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்