மொழிப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாள் (செப் 3)

மொழிப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாள் (செப் 3)

அனைத்து நாட்டுக் கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியையே வலியுறுத்துகின்றனர். அதற்கேற்பவே அனைத்து நாடுகளிலும் தாய்மொழிக் கல்வியே நிலவுகிறது. தமிழ்நாட்டுக் கல்வியாளர்களும் அறிஞர்களும் தமிழ்வழிக் கல்வியையே வற்புறுத்துகின்றனர். ஆனால், கல்வியாளர் என்ற போர்வையில் கல்வி வணிகம் செய்வோரும் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றுள்ள பிற மொழியாளரும் ஆங்கில மொழிவழிக் கல்வியையும் இந்தி, சமற்கிருதம் முதலான மொழிக் கல்வியையுமே நடைமுறைப்படுத்தி விற்று வருகின்றனர். தாம் வாழ்ந்த காலத்தில் தமிழ்வழிக் கல்விக்காக செல்லும் வழியெல்லாம் அல்லும் பகலும் போராடித் ‘தமிழ்ப் பயிற்சி மொழிக் காவலர்’ எனப்  போற்றப் பெற்றவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். அவரது 41ஆவது நினைவு நாளான செப்தம்பர் 3இல் அவரது தமிழ்ப் பயிற்சி மொழி பற்றிய சிந்தனைகளை நினைவுகூர்வோம்!
 
தமிழே தமிழ்நாட்டில் முழுமையாக ஆட்சி செய்ய வேண்டும் என வாணாளெல்லாம் எழுதியும் பேசியும் பரப்புரை மேற்கொண்டும் போராடியும் வீரத் திருமகனாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். இத்தகைய பணிகளுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று, தமிழ்நாடு முழுவதும் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம் மேற்கொள்வது எனத் திட்டமிட்டது. பெருநடைப் பயணம் தொடங்கும் முன் பேராசிரியர் சி.இலக்குவனார், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்(D.I.R.)படித் கைது செய்யப்பட்டார். எனினும் அதுவரை அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அவரது சிறையிருப்பும் தமிழ் மக்களிடையே தமிழே இங்கு ஆட்சி செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 
 
அதன்பின்னர் மாணவர் பெருமளவில் தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்தனர். இதனைத் தேர்தலில் வெற்றியாகத் தி.மு.க. அறுவடை செய்திருப்பினும் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்கு பிறகு உணர்வு மங்கி மெல்ல மெல்ல ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் ஆகியன நம் தலையில் அமர்ந்து கழுத்தை நெரிக்கும் அவல நிலை வந்துவிட்டது. முழுமையாகத் தமிழ் விரட்டுப்படும் பேரவல நிலைக்கு இன்று கல்வி முறை வந்துவிட்டது. இப்பொழுதேனும் நாம் விழித்தெழாவிட்டால் நமக்கு விடிவு என்றைக்கும் கிடையாது. இந்த நேரத்தில் தமிழ்ப் பயிற்சி மொழி குறித்த பேராசிரியர் சிந்தனைகளை நினைவுகூர்வது நமக்கு உரனாக அமையும்.
 
”கல்லூரிகளில் உடனே தமிழைப் பாடமொழியாக ஆக்கவேண்டியதன் இன்றியமையாமையை மக்களிடையே விளக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களிடையே தமிழ் மூலம் படிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் பிறமொழிகள் மூலம் படிப்பதனால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழைப் பாடமொழியாகக் கொண்டு படிக்க வருவோர் தொகையை மிகுதிப்படுத்த வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே காலத்தில் தமிழைப் பாடமொழியாக ஆக்கியதுபோல் கல்லூரிகளிலும் ஒரே சமயத்தில் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பாட மொழியாக்க வேண்டும்” என்பனவற்றைப் பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணத்தில் அடிப்படை வேண்டுகோளாக வைத்தார்.
 
"தமிழைப் பயிற்று மொழியாக்குவதில் எவ்வகை ஆர்வமும் காட்டாததனால் தமிழ் தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது" என வருந்தினார் பேராசிரியர் சி.இலக்குவனார்.
 
"உதட்டளவில் தமிழ்ப் பற்றைக் காட்டிவிட்டு உலகப் புகழ் பெற நாடுகின்றீர்கள். ஆனால், உயர் தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டீர்கள். இப்பொழுதேனும் பிழையை உணர்ந்து திருந்த முற்படுங்கள். தமிழ்ப் பயிற்று மொழித் திட்டத்தை உடனே செயற்படுத்த முனையுங்கள்" என அரசியலாளரிடமும் ஆட்சியாளரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
 
"மாணவர்களே! தமிழ் வழியாகப் பயிலுதலே எளிதும் இனிதுமாகும் என்பதை நீவீர் அறிந்திருந்தும் தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்புக்குப் பெருந்திரளாக வாராதிருப்பது உங்கள் தமிழ்ப் பற்றுக்குக் களங்கம் ஏற்படுத்துகிறது. ஆகவே, தமிழ் வழியாகப் பயில முன் வாருங்கள். தமிழ் வழியாகவே கற்பிக்க வேண்டும் என்று வற்புறுத்துங்கள். மாணவர்களுக்காக ஆசிரியர்களேயன்றி ஆசிரியர்கட்காக மாணவர்கள் அல்லர். மாணவர்கள் விரும்புவது போல் ஆசிரியர்கள் கற்பிக்கக் கடமைப்பட்டுள்ளனர். தமிழ் வாயிலாகப் பயிலுங்கள்; தலைவர்களாக விளங்குங்கள். தமிழும் வாழும்! தமிழரும் வாழ்வர்!" என மாணாக்கர்களிடம் வற்புறுத்தினார்.
 
"அவரவர் மொழிவழியாகப் பயிலலே இயற்கையோடு ஒத்ததும் எளிதும் ஆகும்." என்றும் "உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழ்வழியாகப் படித்துவிட்டு, கல்லூரிக்கு வந்தவுடன் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் முறையால் மாணவர்கள் இடர்ப்பாடு அடைகின்றனர்" என்றும் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கினார்.
 
"தமிழ் வழியாகப் படித்தால் இன்றுள்ள சூழ்நிலையில் அரசுப் பதவிகள் கிட்டா என்று கருதுகின்றனர். நடைமுறை அவ்வாறு கருதுமாறு செய்கின்றது. தமிழ்நாட்டு ஆட்சிமொழியாகத் தமிழை ஏற்றுக் கொண்டிருந்தும் தமிழ் வழியாகப் படித்தோரைத்தான் முதலில் பணிகளில் அமர்த்திக்கொள்ள வேண்டும் என்ற விதியை மேற்கொண்டிலர்" என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பேராசிரியர் நொந்தும் இன்று பெயரளவிற்குத் தமிழில் படிப்போருக்கு 20 விழுக்காடு முன்னுரிமை என்ற சட்டம்தான் வந்துள்ளது. 
 
பிற நாடுகளில் எல்லாம், "இவ்வாறு வேற்று மொழியில் பயில உரிமை கேட்டால், நாட்டுப் பற்றற்ற தன்மையாகக் கருதப்பட்டு, மிகவும் வெறுக்கப்படும். இங்கு உரிமை கிடைத்து விட்டது. இன்று ஆங்கிலத்தில் பயில உரிமை கிடைத்ததைக் கருதி, நாளைக்கு இந்தியில் பயில உரிமைக் கிளர்ச்சி செய்வோரும் தோன்றுவர். பின்னர், தெலுங்கர், மராத்தியர், குசராத்தியர் போன்றோரும் கிளர்ச்சி தொடங்கக் கூடும்" என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.
 
"உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழ் பயிற்றுமொழி நிலை பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் அதனை விடுத்து ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொள்ள உரிமையளித்தால், ஆங்கிலேயர் ஆட்சியையே மீண்டும் கொள்ளும் அடிமை நிலைக்கு ஒப்பாகும். உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாவதற்கு ஒரு நாளும் இசைதலே கூடாது. கல்லூரிகளிலும் ஆங்கிலம் பயிற்றுமொழித் திட்டத்தை அகற்ற ஆவன செய்ய வேண்டும். எல்லாக் கல்லூரிகளிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி இருக்குமேல் மாணவர்கள் இன்றுள்ள சூழ்நிலையில் அதனையே ஏற்பர்; ஏற்குமாறு தள்ளப்படுவர். தமிழ்ப் பயிற்றுமொழி வெறுக்கப்படும், ஒதுக்கப்படும்" என்று பேராசிரியர் சி.இலக்குவனார் எச்சரித்தார். 
 
ஆனால், இன்றைக்குப் பள்ளிகளிலும் தமிழ் அகற்றப்பட்டு, ஆங்கிலம் திணிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விக் கூடங்களை மேம்படுத்தாமல் ஆங்கில வழியைத் திணித்துக்கொண்டு வருகிறது தமிழக அரசு. நாமோ கைகட்டி, வாய்மூடி வேடிக்கைப் பார்த்துக்  கொண்டுள்ளோம்!
 
கல்வி என்பது வெறும் வேலை வாய்ப்பிற்காக அல்ல. எனினும் அத்தகைய எண்ணம் வந்துவிட்டமையால், வேலை வாய்ப்பு நோக்கிலும் தமிழைப் பயன்பாட்டு மொழியாக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் சி. இலக்குவனார். 
 
"ஆங்கிலத்தின் வழியாகப் பயின்றோரே உயர்ந்தோர் எனவும் தமிழ் வழியாகப் பயின்றோர் தாழ்ந்தோர் எனவும் அலுவலக வட்டாரங்களில் கருதுவோர் உளர். கல்வியின் குறிக்கோள் அலுவலகங்களில் பணிபுரிவதே எனக் கருதுகின்ற நிலை நீடிக்கின்ற போது தமிழ் வழியாகப் படித்தோர்க்குப் பணிமனைகளில் தவறாது இடம் கிடைக்கும் என்ற உறுதி ஏற்படச் செய்தல் வேண்டும்" எனத் தமிழ்வழி பயில்வோருக்கு வேலை வாய்ப்பு உறுதி அளிக்கப்பட வேண்டும் என்கிறார்.
 
அயலக வேலை வாய்ப்பினைக் காரணம் காட்டித் தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணிப்பதும் தவறு என இடித்துரைக்கிறார் பேராசிரியர். "தமிழ் வழியாகப் படித்தால் வெளிநாடுகளில் வேலை கிடைக்கப்பெறாது வருந்துவரே என்பர். கல்வியின் நோக்கம் வேலை தேடிப் பிழைப்பதற்கு என்பதே தவறு. அன்றியும் எங்கும் அந்தந்த நாடுகளில் அந்தந்த நாட்டினர்க்கே வேலை என்ற உணர்ச்சி மேலோங்கி நிற்பதைப் புறக்கணிக்க முடியாது. அதனையும் கடந்து வேலை கிடைப்பதற்கு உதவியாக உலகப் பொதுமொழியாம் ஆங்கிலத்தைக் கற்க நம் கல்லூரிகளில் வசதியுண்டு. ஆகவே தமிழைப் பாட மொழியாக ஆக்குவதற்கு வேலை வாய்ப்பினைத் தடையாகக் காட்டுவதும் பொருந்தாது" என்கிறார்.
 
பாடப் புத்தகங்கள் இல்லை எனக் கூறிக் கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்றுமொழியைத் தடுக்கக் கூடாது எனவும் தமிழ்ப் பயிற்சிமொழியானால் நூல்கள் பெருகும் எனவும் பேராசிரியர் கூறுகிறார். ஆனால், இன்றைக்குப் பாட நூல்கள் இருக்கக்கூடிய உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் அகற்றப்பட்டுக்கொண்டு வரும் அவலநிலை பெருகுகிறது.
 
"ஆங்கிலத்தின் வழியாகவும் படிக்கலாம் என்று வைத்து, அதன் வழியாகப் படித்து வருவோரே சிறந்தவர் என்று மதித்தால் தமிழ் வாயிலாகப் படிக்க வருவோர் அரியவே இருப்பர்" என்று நடைமுறை உண்மையை உணர்த்தி, தெரிவுமுறையின்றித் தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்கிறார்.
 
“மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் அற்றவர்கள், பதவிகளில் அமர்ந்து கொண்டு தமிழ்ப் பயிற்று மொழித் திட்டத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகின்றனர்” என்றும் “ஆங்கிலப் புலமையும் பற்றும் உடையோர்தாம் ஆட்சி செலுத்துகின்றனர்” என்றும் தமிழ்வழிக் கல்வி இன்மைக்கான காரணங்களைப் பேராசிரியர் இலக்குவனார் விளக்குகிறார்.
 
"உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை" என்னும் நிலை, மிக மிக வருந்தத்தக்கது; நாணத்தக்கது என வருந்தி உரைக்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார்.
 
"நம் நாட்டில் நம் மொழி வாயிலாகக் கல்வியளிக்கப்படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடைய நாம், இரு நூறாண்டுகட்குக் குறைந்த வரலாற்றினுடைய நாடுகளின் நல்லன்பை நாடி உதவி பெற வேண்டிய நிலையில் உள்ளோம்" என உணர்த்தி, உடனே தமிழை அனைத்து நிலைகளிலும் பயிற்சி மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். 
 
"தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிகளில் பாடம் கற்பித்தாலன்றி நம்நாடு முன்னேறாது. பேரறிஞர்கள் தோன்றும் வாய்ப்பு ஒருநாளும் ஏற்படாது. நாடென்ப நாடா வளத்தன எனும் வள்ளுவர் மறைக்கு இலக்காக இலங்காது" என்னும் பேராசிரியர், "தமிழ் வழியாகப் படித்தலே தமிழர் பிறப்புரிமையாகும். அதுவே அறிவைப் பெருக்கும் எளிய இனிய வழியாகும்." எனத் தமிழ்வழிக் கல்வியை நம் பிறப்புரிமை என உணர்த்துகிறார்.
 
“தமிழ்நாட்டில் தமிழ்தான் - தமிழ் மட்டும்தான் பயிற்று மொழியாக இருத்தல் வேண்டும். ஆங்கிலம், இந்தி, ஆரியம் வேறு எம்மொழி வழியாகவும் கற்பிக்கும் நிலை இங்கு உண்டாதல் கூடாது” என்ற பயிற்சிமொழிப் போராளி பேராசிரியர் சி்.இலக்குவனார் வேண்டுகோளை நிறைவேற்ற நாம் போராடி வாகை சூடுவோம்! தமிழ்வழியில் பயிற்றுவிப்போம்! தகைமையாளர்களை உருவாக்குவோம்!
 

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்