அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்..

அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்..

அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைப்பட்டு இருக்கும் பெங்களூரு மத்திய சிறைச்சாலையின் வாசலில் செய்தி சேகரிப்பதன் நிமி்த்தம் ஒரு ஐந்து நாள் நிற்க வேண்டி வந்தது.


கிராமும் இல்லாத நகரமும் இல்லாத இடத்தில் அமைதியான ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை என்பதால் பக்கத்தில் சாப்பிடுவதற்கு நல்ல ஒ்ட்டல் எதுவும் இல்லை.

அந்த இடத்தைவிட்டு அரைமணிநேரத்திற்கு மேல் வெளியே எங்கும் போகவும் முடியாத நிலை

கொஞ்சம் பிரட் பிஸ்கட் டீ போன்றவ கிடைத்தால் கூட போதும் பகல் வேளையை கடத்திவிடலாம் பசியை அடக்கிவிடலாம் என்ற நிலை

பத்திரிகையாளர்களின் மனசாட்சி படிக்கப்பட்டதை போல சிறை வாசலில் சின்னதாய் ஒரு பெட்டிக்கடை திறக்கப்பட்டது.

விதவிதமாய் பிஸ்கட்,பப்ஸ்,பிரட்,மிக்சர் இவைகளுடன் டீ காபி என்று வரிசையாக எடுத்துவைக்கப்பட்டது.கடைசியாக ஒரு விஷயம் நடந்த போதுதான் ஆச்சர்யம் மேலிட்டது.

ஆம் கடை வாசலில் ஒரு பேனரை எடுத்துகட்டினர்.அந்த பேனரில் இந்த கடையில் உள்ள பொருட்கள் யாவும் இங்குள்ள சிறைக்கைதிகளால் தயாரிக்கப்பட்டவை என்று எழுதப்பட்டு இருந்தது.

கடையில் இருந்த பொருட்களை விட நம்மை அதிகம் கவர்ந்தவர் கடையின் பொறுப்பாளராக இருந்தவர்.காரணம் கன்னடம் மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு,ஆங்கிலம் என பல மொழிகளில் பேசி கடையில் உ்ள்ள பொருட்களை விற்றுக்கொண்டு இருந்தார்.

அவர் யார் என்பை தெரிந்து கொண்டதும் எனது ஆச்சர்யம் இன்னும் கூடியது,காரணம் அவர் ஒரு கைதி என்பதுதான்.

பெயர் அசோக் ஜெயின்

வரதட்சனை கொடுமை வழக்கில் நீண்ட கால ஜெயில் தண்டனை பெற்று உள்ளே வந்தவர்.செய்யாத குற்றத்திற்காக மனைவி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் சிறையில் தள்ளப்பட்டார்.

உண்மை தெரிந்த மனைவியே தனக்கு எதிராக மாறியபிறகு நமக்கு என்ன வெளியே வேலை உள்ளேயே இருந்துவிடுவோம் என்று சிறையில் இருந்து வருகிறார்.சிறிது நாள் கழி்த்து இனி ஆக வேணடியதை பார்ப்போம் என்ற மனநிலைக்கு வந்தபோதுதான் சிறைக்கைதிகள் தயாரிக்கும் பேக்கரி அயிட்டங்களை மார்கெட்டிங் செய்ய ஒரு ஆள் தேவைப்படுவதை அறிந்தார்.

சிறைக்கு வருவதற்கு முன் அசோக்ஜெயின் வியாபாரியாக இருந்ததால் தானே முன்வந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இதோ பத்து வருடங்களாகிறது இவரது விற்பனை திறன் மற்றும் தயாரிப்பின் தரம் காரணமாக இந்த சிறிய பேக்கரி கடையில் உள்ள சரக்குகளுக்கு எப்போதுமே டிமாண்ட் அதிகம்.

இந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் மற்றும் கைதிகளை பார்க்கவருபவர்களும் இந்த கடையைத்தான் நம்பி வருவர்.

தரமான பொருள் விலை குறைவு காரணமாக எப்போதுமே சரக்குகளுக்கு டிமாண்ட்தான்.நிறைய பேர் மொத்தமாக வாங்கிச்சென்று சில்லரை வியாபாரத்திலும் ஈடுபடுகின்றர்.

பேக்கரி வியாபாரம் காரணமாக அதிகாரிகள் ஆதரவுடன் சிறைக்கு உள்ளேயே ஒரு கோடி ரூபாய்க்கு பேக்கரி மெஷின் வாங்கிப்போடப்பட்டுள்ளது.

பேக்கரியினால் வரும் லாபம் கைதிகளுக்குள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.விருப்பம் உள்ள கைதிகளுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

அவ்வப்போது புதுமையான சரக்குகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.சிறைத்தண்டனை முடிந்து வெளியே வரும் பேக்கரி தொழில் தெரிந்த கைதிகளுக்கு வேலை வாய்போ அல்லது சிறுதொழில் வாய்ப்போ காத்திருக்கிறது.

இவ்வளவ விஷயத்தையும் பகிர்ந்து கொண்ட கைதி அசோக்ஜெயின் அவ்வப்போது செய்த இனனோரு காரியமும் அவரது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது.

கையில் காசு இல்லாமல் வருபவர்களிடம் கூட இன்முகம் கொடுத்து பேசி இலவசமாகவே டீ பிஸ்கட் கொடுக்கிறார்.

இது நட்டமில்லை எனக்கான லாபத்தில் சற்று குறைவு இவர்களுக்கு உதவியதால் என் மனதில் நிறைவு என்று சொல்லும் அசோக் ஜெயின் ஒரு ஆச்சர்யமான மனிதராகவே தென்பட்டார்.
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்