மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தமிழர் வெற்றி.
தமிழ் உலகம்,
1223

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தமிழர் வெற்றி.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மும்பையில் உள்ள சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பில் ஆர். தமிழ்ச்செல்வன் என்னும் தமிழர் போட்டியிட்டார். பாஜக வேட்பாளர்களில் தமிழ்ச்செல்வன் மட்டுமே தமிழர் ஆவார். அவரை எதிர்த்து சிவசேனாவின் மங்கேஷ் சாத்தம்கர், காங்கிரஸின் ஜெகநாத் ஷெட்டி, தேசியவாத காங்கிரஸின் பிரசாத் லாட் ஆகியோர் போட்டியிட்டனர்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தமிழர் வெற்றி- பாஜக சார்பில் போட்டியிட்டவர்
தேர்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. இதில் தமிழ்ச்செல்வன் 40 ஆயிரத்து 869 வாக்குகள் பெற்றார். சிவசேனாவின் மங்கேஷுக்கு 37 ஆயிரத்து 131 வாக்குகள் தான் கிடைத்தன. இதையடுத்து தமிழ்ச்செல்வன் 3 ஆயிரத்து 742 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி அருகே இருக்கும் பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ராமையா, தங்கம் தம்பதியின் மகன் ஆவார். அந்த தம்பதிக்கு 6 மகன்கள். அதில் தமிழ்ச்செல்வன் தான் மூத்தவர். அவர் கடந்த 35 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருகிறார். அவரது சகோதரர்கள் 4 பேரும் அவருடன் தான் வசித்து வருகிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக பாஜகவின் நகரப் பொதுச் செயலாளராக இருந்த அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.