சித்தர்கள் ஆத்திகர்களா..? நாத்திகர்களா….?

சித்தர்கள் ஆத்திகர்களா..? நாத்திகர்களா….?

சித்தர்கள் ஆத்திகர்களா..? நாத்திகர்களா….?

ஆதியில் மனிதன் தன்னைச் சூழ்ந்திருக்கும் இயற்கையை, அதன் பேராற்றலைக் கண்டு அஞ்சி நடுங்கி தன்னை காத்துக் கொள்ள வேண்டி அவற்றை பணிந்து வணங்கத் துவங்கினான். இப்படித்தான் பஞ்சபூத வழிபாடுகள், மர வழிபாடுகள், நாக வழிபாடுகள் போன்றவை துவங்கின.
பின்னாளில் இந்த பிரபஞ்ச சக்திகளுக்கு உருவமும், குறியீடுகளும் கற்பிக்கப் பட்டு அவற்றை மனமுருகி வணங்கினால் அவை மகிழ்ந்து சாந்தமாகி நல்வாழ்வை அருளும் என்கிற எண்ணப் போக்கு உருவானது.
இதற்கென இறைவனுக்கு படையல், பலி, பூசைகள், வேள்விகள், வழிபாடுகள், துதிகள், விதிகள், சடங்குகள் என ஒவ்வொன்றாய் உருவாக்கப் பட்டன. ஒரு கட்டத்தில் இறைவனை விடவும் இறைவனைச் சுற்றி கட்டமைக்கப் பட்ட கோட்பாடுகளின் ஸ்தாபனம் வலுவடைந்து மதம் ஆனது.
இந்த மதத்திற்கு உண்மையுள்ளவனாகவும், அதன் கட்டுப்பாடுகளுக்கு பணிந்து அடங்கி இருப்பதுதான் இறையருளை பெறுவதற்கான ஒரே வழி என்கிற நம்பிக்கை மக்களிடையே ஆழமாய் விதைக்கப் பட்டது.
இதனை மறு பேச்சில்லாது ஏற்றுக் கொண்டவர்கள் ஆத்திகர்கள் என்றும் நம்பாமல் கேள்வி எழுப்பியவர்கள் நாத்திகர்கள் என அழைத்தனர். அநேகமாய் எல்லா மதங்களும் இறை அருளை பெற, அதனை பணிந்து துதித்து சரணடைவதே முக்திக்கான வழி என கூறுகின்றன.
இதனை பக்தி மார்க்கம் அல்லது பக்தி யோகம் எனலாம். பக்தி மார்க்கத்தில் ஏன், எதற்கென்கிற கேள்விகளே கிடையாது. மதம் முன்வைக்கும் சடங்குகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு அதன் போக்கில் வாழ்ந்திருப்பதே நம் கடமை என்பதாக வலியுறுத்தப் படுகிறது.
இந்த சடங்குகள், விதிகள் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டவை. இவற்றிற்கான நிரூபணங்கள் அல்லது தேவைகள் என்ன என்கிற கேள்விகளுக்கு பெரும்பாலும் நேரடியான பதில்கள் கிடைப்பதில்லை. அப்படியே கேள்விகள் எழுப்பினாலும் அவை தெய்வ நிந்தனையாக கருதப்படும்.
அப்படி கேள்வி எழுப்பியவர்கள் எந்தவொரு சமூகத்திலும் விரும்பப் படாதவர்களாகவே இருந்தனர். மேலும் அவர்கள் தீய சக்தியின் குறியீடுகளாய் இனம்காட்டப் பட்டனர். "நாஸ்திக்" என்னும் வடமொழிச் சொல்லின் மருவிய தமிழ் வடிவமே நாத்திகம்.
"ஆஸ்திக்" என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் மருவலே ஆத்திகமாயிற்று. ஆஸ்திக் என்னும் வடமொழிச் சொல்லுக்கு வேதங்களையும், அது முன் வைக்கும் கருத்துக்களையும், வரையறைகளையும், அவற்றின் உயர்வினை ஏற்றுக் கொண்டவன் என பொருள் கூறுகிறது.
இதனைப் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் அறிய விரும்புவோர் இந்த சென்று வாசித்தறியலாம். இந்த விளக்கங்களின் அடிப்படையில் இறைவனை முன்னிறுத்தி கட்டமைக்கப் பட்டிருக்கும் வேதங்கள், உபநிடதங்கள், சடங்குகள் அவை முன் வைக்கும் வழிபாடுகளை ஏற்றுக் கொள்பவரை ஆத்திகர் என்றும், இவற்றை நிராகரிப்பவரை நாத்திகர் என்றும் புரிந்து கொள்ளலாம்.
வேதங்களும், உபநிடதங்களும் முன் வைக்கும் கருத்தியலை கேள்விக்குள்ளாக்கும் போதுதான் நாத்திகம் பிறக்கிறது. கேள்விகளுக்கான பதிலைத் தேடும் பயணத்தில் அறிந்துணரும் உண்மைகளை வாதிக்கவும், விவாதிக்கவும் செய்யும் போது தெளிவுகள் உண்டாகின்றன.
இந்த தெளிவுகளின் தொகுப்பே ஞானம் ஆகிறது. இவ்வாறு கிடைக்கும் ஞானத்தை மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் போது ஏற்படும் தெளிவுகள் மெய்ஞானத்தை உருவாக்குகிறது. சித்தர்கள் இதனை சித்தி நிலை என்கின்றனர்.
இதன் படி பார்த்தால் சித்தர்கள் நாத்திகர்களே. இதற்கு சான்றாக சிவவாக்கியார் பாடிய பாடல்களை கூறலாம்.
”பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்;
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே”
 
”என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ;
என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே.”
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்