ஆயிரம் கைகள் ஏன் இணையவில்லை?
ஆயிரம் கைகள் ஏன் இணையவில்லை?
உழவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நான்காகப் பகுத்தால், அதில் முதலாவது தற்சார்பை இழந்தது என்று பார்த்தோம். இரண்டாவதாக, இந்திய உழவர்களின் வாழ்க்கை முறை என்பது அவர்களை ஒன்றிணைய விடாது, உதிரிகளாக வைத்திருக்கக் கூடியதாக உள்ளது.
இந்திய எடுத்துக்காட்டாக, ஒருங்கிணைந்த தொழிலாளர் போராட்டங்களை எடுத்துக்கொள்வோம். ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடும்போது, பல சமயம் சிறை செல்கிறார்கள். அதன் விளைவாகப் பள்ளிகள் மூடப்படுகின்றன. மாணவர்கள் கல்வியை இழக்கிறார்கள். மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர், சிறை செல்கின்றனர்.
நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் போராட்டங்கள் பலவற்றில் ஏற்படும் சேதாரம், சம்பந்தப்பட்ட பிரிவினரை நேரடியாகப் பாதிப்பதில்லை (முற்றிலும் இல்லை என்று கூறவில்லை). ஆனால், உழவர்கள் போராட்டம் நடத்திச் சிறை செல்லும்போது அவர்களது குடும்பமே நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய வயலுக்கு நீர் பாய்ச்ச இயலாது, ஆடு மாடுகளுக்குக்கூடத் தீவனம் தர முடியாமல் போகும் நிலைமை உருவாகிறது. எனவே, அவர்கள் ஒருங்கிணைந்து போராடித் தங்களது உரிமையைப் பெற்றுக் கொள்வது என்பது இயலாத ஒன்றாக மாறிவிடுகிறது. எனவே, இந்திய உழவர்களின் வாழ்க்கை முறை அவர்களை ஒன்றிணைந்து போராட முடியாத நிலைமைக்குத் தள்ளியுள்ளது. ஜனநாயகம் யாருக்கானது?
மூன்றாவதாக அரசின் கொள்கைகள், திட்டங்கள், சட்டங்கள் யாவும் பரந்துபட்ட உழவர்களின் மீது சுமையை ஏற்றிவிடுவதாகவே உள்ளன. ஏனென்றால் உழவர்கள் ஒன்றிணைந்து தொடர்ச்சியாகப் போராட முடியாது. நம்மை ஆள்வோர், இதை நன்கு அறிவார்கள். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயகம் என்பது பெரும்பான்மையோர் சேர்ந்து எடுக்கும் முடிவுகளுக்கு, சிறுபான்மையோர் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய முறை சார்ந்தது.
ஆக, ஜனநாயகத்தில் யாரெல்லாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த முடியும். இது எண்ணிக்கைக் கணக்கு மட்டுமல்ல, எப்படி வெளிப்படுத்துவது என்பதும் அதே அளவு முக்கியமானதாகும். இந்த அடிப்படையில் ஒருங்கிணைந்து போராடத் தெம்பில்லாத உழவர் சமூகம் அரசிடமிருந்து தனக்குச் சாதகமான கொள்கைகளையும், திட்டங்களையும் வென்றெடுப்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது.
ஆக, அனைத்து மக்கள் கூட்டத்தாலும் சுரண்டப்படும் ஒரே சமூகமாக உழவர் சமூகம் உள்ளது. இயக்கும் சக்திகள் அத்துடன் இன்றைய அரசை இயக்கும் சக்திகள் யார் என்று ஆராய்ந்து பார்த்தால், பெரும்பான்மை பலம் கொண்ட உயர் அதிகார மட்டத்திலும் சிறுபான்மையினர் தனித்து இருப்பதைக் காண முடியும். இந்திய மக்களாட்சி என்பது நேரடியாக மக்களின் ஆட்சியன்று;
இதில் மக்களது சார்பாகத் தேர்வு செய்யப்படும் சிலர் மக்களை ஆட்சி செய்கிறார்கள். அதாவது 120 கோடி மக்களை 524 பேர் சேர்ந்து ஆட்சி செய்கிறார்கள். இன்றும் இதை நுட்பமாகப் பார்த்தால், அவர்களிலும் குறிப்பிட்ட சிலரே பிடியைக் கையில் வைத்துக்கொண்டு இயக்குகிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. எனவே, உழவர்களின் சிக்கல் ஆழமான அரசியலை உள்ளடக்கியதாக உள்ளது. இதைப் பற்றி இன்னொரு முறை விளக்கமாகப் பார்க்கலாம்.