மீண்டும் ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கம் விலை; ஒரே நாளில் பவுனுக்கு ரூ.288 குறைந்தது
மீண்டும் ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கம் விலை; ஒரே நாளில் பவுனுக்கு ரூ.288 குறைந்தது
சென்னை,
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.288 குறைந்து மீண்டும் ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.18 ஆயிரத்து 752-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலையில் சரிவு
தங்கம் விலை தொடர் சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அவ்வப்போது விலை ஏற்றம் காணப்பட்டாலும், பெரும்பாலும் விலை சரிந்த வண்ணமே இருந்து வருகிறது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 22-ந்தேதி தங்கம் விலை ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
ஆனால் மறுநாளே தங்கம் விலை பவுனுக்கு ரூ.176 அதிகரித்து, விலை ரூ.19 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் தங்கம் விலையில் நேற்று மீண்டும் திடீர் சரிவு ஏற்பட்டது. இதனால் ரூ.19 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான ஒரு பவுன் தங்கம், மீண்டும் ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
பவுனுக்கு ரூ.288 குறைந்தது
சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 380-க்கும், ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.
நேற்று கிராமுக்கு ரூ.36-ம், பவுனுக்கு ரூ.288-ம் சரிந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 344-க்கும், ஒரு பவுன் ரூ.18 ஆயிரத்து 752-க்கும் விற்பனை ஆனது.
எப்போதெல்லாம் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறதோ? அப்போது வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்படும். அதன்படி வெள்ளி நேற்று கிராமுக்கு 70 காசும், கிலோவுக்கு ரூ.635-ம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.33 ஆயிரத்து 625-க்கு விற்பனை செய்யப்பட்டது.
30 சதவீதம் விற்பனை அதிகம்
தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:-
உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து குறைந்து தான் உள்ளது. ஆனால் அதே சமயம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக பெருமளவில் குறைய வேண்டிய தங்கத்தின் விலை தற்போது கொஞ்சம் தான் குறைந்து இருக்கிறது.
இந்த வாரம் இறுதி வரை தங்கம் விலை குறைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் இதே நிலை நீடிக்காது. அடுத்த வாரம் தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதால், சாதாரண நாட்களில் நகைக் கடைகளில் விற்பனையாகும் தங்கத்தின் அளவை விட தற்போது 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.