சுசீந்திரம் கோயிலில் மூலிகை ஓவியம் புதுப்பிக்கும் பணி... நாளை தொடக்கம்
சுசீந்திரம் கோயிலில் மூலிகை ஓவியம் புதுப்பிக்கும் பணி... நாளை தொடக்கம்
நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய கோயிலில் மூலிகை ஓவியம் புதுப்பிக்கும் பணி நாளைத் தொடங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான கோவில்களில் உள்ள ராஜகோபுரம் மற்றும் கோபுரங்களின் உள்ளே உள்ள மூலிகை ஓவியங்களை புனரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள பழமையான 50 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலும் அடங்கும்.
முதற்கட்டமாக தமிழகத்திலேயே சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலை தேர்வு செய்து, கோவிலின் முன் உள்ள 7 அடுக்குகளை கொண்ட 133 அடி உயரம் உள்ள ராஜகோபுரத்தை புனரமைக்க, அரசு முடிவு செய்து அதன் அடிப்படையில் தொல்லியல் துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆராய்ச்சியாளர் வீரராகவன் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சுசீந்திரம் கோவிலில் உள்ள ராஜகோபுரம் மற்றும் ராஜகோபுரத்தின் உள்பகுதியில் வரையப்பட்ட ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை விளக்கும் மூலிகை ஓவியங்களையும், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள லட்சக்கணக்கான சிற்பங்களையும் பார்வையிட்டு, தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு மூலிகை ஓவியங்களை சீரமைக்கும் வகையில் ரூ.81 லட்சமும், கோபுரத்தில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சிற்பங்கள் மற்றும் சுதைகள், ஈரக்கசிவுகளை சரிசெய்யும் வகையில் ரூ.33 லட்சமும் என ரூ.1 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டரும் விடப்பட்டது. இதில் முதற் கட்டமாக ராஜகோபுரத்தின் வெளிப்பிரகாரத்தில் உள்ள சிற்பங்கள், சுதைகள் மற்றும் ஈரக்கசிவுகள் ஆகியவற்றை புனரமைக்கும் பணி நடந்து முடிந்து விட்டது. தற்போது ராஜகோபுரத்தின் வெளிப்பிரகாரம் புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் கோபுரத்தின் உள்பகுதியில் 7 அடுக்குகளிலும் காணப்படும் மூலிகை ஓவியங்களை புதுப்பிப்பதற்கான பணிகள் நாளை 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தொல்லியல் துறை வல்லுனர் வீரராகவன் தலைமையில், அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கப்பட உள்ளது.