அனைத்து நோயும் குணமாக்கும் பழமுதிர்ச்சோலை முருகன் கோயில்
அனைத்து நோயும் குணமாக்கும் பழமுதிர்ச்சோலை முருகன் கோயில்
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாகப் போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, 'சோலைமலை' என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு 'பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை' என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்தக் கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்தத் தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார். கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற 'நூபுர கங்கை' என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள். சிறுவன் உருவத்தில் முருகப்பெருமான் அவ்வைக்கு அருளினார். இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம். பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்தத் தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த தீர்த்தத் தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து நோயும் பறந்தோடிவிடும் என்கிற நம்பிக்கையில் இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது. மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் எனறு இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.
முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, சிறப்பான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள். இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.