ஒரு புறாவின் ‘புரா’

ஒரு புறாவின் ‘புரா’

த நல்லிணக்கத்துக்கு ஒரு வழிகாட்டியாக, வானில் பறந்த சமாதானப் புறாவான அப்துல்கலாம் வாழ்வில் மற்றொரு ‘புரா’ முக்கிய இடம் பெற்றது.

அப்துல்கலாம், இந்தியாவின் கடைக்கோடியான ராமேசுவரம் என்ற மிகச் சிறிய ஊரில் பிறந்து வளர்ந்தவர். 

 மேல் படிப்புக்காகவும் பணி நிமித்தம் காரணமாகவும் அவர் பெரு நகரங்களில் தான் அதிக நாட்கள் வாழ்ந்தார் என்றாலும், கிராமத்தின் முக்கியத்துவத்தை அவர் என்றும் மறந்ததே இல்லை.

 ஒரு மாநிலம் முன்னேற வேண்டும் என்றால், முதலில் அங்குள்ள கிராமங்கள் முன்னேற்றம் பெற வேண்டியது மிக அவசியம் என்று அவர் அடிக்கடி கூறுவது உண்டு.

 ‘‘ நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் கிராம வாழ்க்கையின் லயத்தை என்னால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இப்போது பலரும் பணம் சமபாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கிராமத்தில் இருந்து நகரம் நோக்கிப் படையெடுப்பது அதிகரித்துவிட்டது. சொத்து சுகங்கள், ஆசாபாசங்களை இழந்துவிட்டு, நகரத்தின் நெருக்கடியான பகுதிகளில் குடியேறி காலம் தள்ளுகிறார்கள். கிராமங்களை நகர வசதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தினால், அவர்கள் கிராமங்களிலேயே தங்கிவிடுவார்கள். இதனால் இந்தியாவின் முகமே மாறிப்போய்விடும்’’ என்று அப்துல்கலாம் கூறுவது உண்டு.

  இதன் அடிப்படையில் ‘இந்தியா 2020’ என்ற திட்டத்தை அவர் உருவாக்கி, இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களை மேம்படுத்தத் திட்டமிட்டார்.

 அப்போது பேராசிரியர் பி.வி.இந்திரேசன் என்பவர் ‘புரா’ என்ற திட்டத்துடன் அப்துல்கலாமை அணுகினார். இது அப்துல் கலாமை வெகுவாகக் கவர்ந்தது.

 நகரத்து வசதிகளை கிராமப் பகுதிகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இந்தத் திட்டம்

 ஆங்கிலத்தில், புரொவைடிங் அர்பன் அமெனிட்டீஸ் டு ரூரல் ஏரியாஸ் என்பதின் சுருக்கம் தான் ‘புரா’ என்று அழைக்கப்படுகிறது.

 இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அப்துல்கலாம் மத்தியபிரதேசத்தில் உள்ள, அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத தோர்னி என்ற கிராமத்தைத் தேர்வு செய்தார்.

 அங்கே மின்சார வசதியோ, சரியான போக்குவரத்து சாலைகளோ இல்லை.

 ‘புரா’ திட்டம் அங்கே செயல்படுத்தியதன் காரணமாக அங்கே எல்லா பருவங்களிலும் தாக்குப் பிடிக்கக்கூடிய சாலைகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்குப் போடப்பட்டது. மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டது. நீர் பிடிப்புப் பகுதிகள் உருவாக்கப்பட்டன. உயிரியல் பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்த மக்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். தோர்னி என்ற கிராமத்தின் அடையாளமே மாறிவிட்டது.

 இந்தத் திட்டம் செயல்வடிவம் பெற்ற பிறகு அப்துல்கலாம் அங்கே சென்று பார்வையிட்டு, இந்தத் திட்டத்தை மற்ற கிராமங்களிலும் அமல்படுத்தவும், இதே போன்ற பல கிராமங்களை ஒன்று சேர்த்து ஒரு தொகுப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அங்கு இருந்த மாநில அரசைக் கேட்டுக்கொண்டார்.

 தமிழகத்தில் 2003–ம் ஆண்டு டிசம்பர் 20–ந்தேதி வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக தொடங்கப்பட்டது. அப்துல்கலாம் இதனைத் தொடங்கிவைத்து பேசினார். இந்தத் திட்டத்தில் 65 கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.

 2006–ம் ஆண்டு டிசம்பர் 24–ந் தேதி அப்துல்கலாம் அங்கே மீண்டும் சென்று பார்த்தபோது, ‘புரா‘ திட்டத்தினால் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.1,800 சுய உதவிக் குழுக்களின் ஆதரவுடன் தொழில் முனைவோர் பலர் உருவாகி இருந்தனர். நீர் நிர்வாகத் திட்டத்தை செம்மையாகப் பயன்படுத்தியதால், 200 ஏக்கர் தரிசு நிலம் விளை நிலமாக மாற்றப்பட்டு இருந்தது. பல விதமான பொருட்கள் அங்கே உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘புரா‘ திட்டத்தில் இணைந்து இருந்த 65 கிராமங்களும் வேகமாக வளர்ச்சி பெற்றன. அங்கே வசித்த மக்களின் வாழ்க்கையின் தரம் வெகுவாக உயர்ந்தது.

இதுகுறித்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி கூறியதாவது:– 

 தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள முத்துவீரன் கண்டியன்பட்டி வீரமரசன்பேட்டை கிராமத்தில் மக்கள் புளோரைடு அதிகம் கலந்த தண்ணீரை குடித்து வந்தனர். இதனால் அப்பகுதி மக்களின் பற்கள் கொட்டி விட்டன. 

இதற்காக பல்கலைக்கழகம் அமெரிக்க கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து நீரை சுத்திகரிப்பு செய்து அந்த கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை ‘புரா’ திட்டத்தின் மூலம் தொடங்கியது. அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் நேரடியாக இந்த கிராமத்திற்கு வந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். தண்ணீரில் புளோரைடு கலந்து இருக்கிறதா என்பதை அவர் பரிசோதிக்க அந்த தண்ணீரை பாதுகாவலரின் எதிர்ப்பையும் மீறி குடித்தார். பின்னர் அங்கு கூடி இருந்த ஒவ்வொருவரிடம் கை குலுக்கி உடல் நலத்தை நன்கு பார்த்து கொள்ளும்படி ஆலோசனை கூறினார். 

இந்த கிராமத்துக்கு ஜனாதிபதி வருவாரா? என்று நினைத்த மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த கிராமத்துக்கே வந்த அப்துல்கலாமின் எளிமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நாட்டு நலனிலும், மக்கள் முன்னேற்றத்திலும் கடைசி வரை அவர் மிகுந்த அக்கறை கொண்டு இருந்தார். 

இவ்வாறு அவர் கூறினார்.

 ‘‘ குடும்ப உறவுகளுடன் கூடிய ஒரு சமூக அமைப்பு, இந்திய ஞானத்துடன் நவீன கால கல்வி முறை இணைதல், பெண்கள் உள்பட அனைவருக்கும் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்தல், அனைவரும் ஆரோக்கிய நலன் பெறுதல், தூய்மை மற்றும் சுற்றுச் சூழல் மீது அக்கறை காட்டுதல், அனைவருக்கும் ஏற்றத்தாழ்வின்றி செல்வ வளம் கிடைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது’’ என்று அப்துல்கலாம் பெருமையாகச் சொல்வது உண்டு.

 எதிர்காலத்தில் நாட்டில் சுமார் 7ஆயிரம் ‘புரா’ திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அப்துல் கலாம் கனவு கண்டார்.

 அப்துல் கலாம், இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி எங்கு சென்றாலும் தனது பேச்சின் ஊடே இந்த ‘புரா’ திட்டம் பற்றி குறிப்பிடத் தவறுவதே இல்லை.

 காலம், கலாமுக்கு இன்னும் சற்று அதிக வாய்ப்புக் கொடுத்து இருந்தால், இந்தியாவின் அனைத்து கிராமங்களையும் அவர் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று, கிராமத்து இளைஞர்கள், விட்டில் பூச்சிகளைப்போல நகர் புறங்களை நாடி, தேடி வருவதை கணிசமாகக் குறைத்து  இருப்பார்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்