சர்வதேச புலிகள் தினமும், புலிகள் பற்றிய தகவல்களும்!
சர்வதேச புலிகள் தினமும், புலிகள் பற்றிய தகவல்களும்!
புலிகளை டி.வி. சேனல்களில் பார்த்திருப்பார்கள். சிலர் மிருகக் காட்சி சாலைகளிலும் பார்த்திருக்கக் கூடும். ஆனால் காடுகளிலோ, புல்வெளிகளிலோ நேரடியாக புலிகளை பார்த்தவர்கள் அரிதிலும் அரிது.
மனிதர்கள் ஒரு காலத்தில் விலங்குகளை பார்த்து அஞ்சுவதில் புலிக்கு முதலிடம் உண்டு. அதன் 100லிருந்து 300 கிலோ வரை இருக்கும் உடலின் எடையும், 8-13 அடி வரையான நீளமும் மனிதர்களை அச்சுறுத்துபவைகளில் ஒன்று. அப்படிப்பட்ட புலிகளின் சர்வதேச தினம்(ஜூலை 29ம் தேதி) இன்று. அதை பற்றிய தகவல்கள் இங்கே இடம் பெறுகிறது.
புலி (பாந்தெரா தீகிரிஸ்), என்னும் பூனையினத்தைச் சேர்ந்ததாகும். பாந்தெரா வகை பூனையினங்களில் இதுவே மிகப் பெரியதாகும். புலி உயர்நிலை ஊனுண்ணியும், ஆதிக்கமிக்க ஊனுண்ணியும் ஆகும்.
பசி இல்லாதபோது மிருகங்களைக் கொல்வதில்லை சிங்கம். அதனால் சிங்கத்தைக் காட்டுக்கு அரசன் எனக் கூறுவார்கள். இருந்தாலும் கிழக்காசிய நாடுகளில் புலியே காட்டின் அரசன் என்று சொல்லப்படுகிறது. புலியின் நெற்றியில் 王 என்ற அடையாளம் இருக்கும். இது சீன எழுத்தில் அரசன் என்பதை குறிக்கும். வரலாற்றில் புலிக்கும், சிங்கத்திற்கும் இடையிலான சண்டைகளில் புலியே பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது. புலியின் சிறப்பு கருதி இந்திய அரசு தேசிய விலங்காக புலியை அறிவித்து கொண்டாடி வருகிறது.
புலியின் தோற்றம்
புலி பூனைகள் இனத்தைச் சேர்ந்தது. புலியின் உடல் பழுப்பு கலந்த வெளிர் சிவப்பு நிற தோலை உடையது. உடல் முழுவதும் வெள்ளை மற்றும் கருப்பு நிற கோடுகள் விரவி கிடக்கும்.
இந்த கோடுகள் மனிதர்களின் கைரேகைகளை போன்றது. இது தன் உடலை புல்வெளிகளில் மறைத்துக் கொண்டு விலங்குகளை வேட்டையாட உதவுகிறது.
புலி உடலின் நடுப் பகுதியும், அடிப்பகுதியும் வெண்ணிறத்தில் உள்ளன. முகத்தைச் சுற்றி ஒரு வெண்ணிற “வளையம்” காணப்படுகிறது. புலி இனங்களில் 9 இனங்கள் இருந்து வந்தன. அவை பெங்கால், சைபீரியன், சுமத்ரன், இந்தோ/சைனீஸ், மலையன், தெற்கு சீன புலிகள், காஸ்பியன், ஜாவன் மற்றும் பாலி. இதில் கடைசி நான்கு இனங்கள் தற்போது இல்லை.
புலிகளின் உணவு
புலிகள் பெரும்பாலும் மான்களை விரும்பி சாப்பிடும். அடுத்து காட்டு பன்றி, நீர் எருமை, கொம்பு மான்களை சாப்பிடும். இதோடு கரடி, நாய், சிறுத்தை, முதலை, மலைபாம்புகளையும் வேட்டையாடும் தன்மை கொண்டது. தண்ணீரில் நீந்தும் தன்மையுடையதால், நீருக்குள்ளும் வேட்டையாடும். விலங்குகளை வேட்டையாடும்போது முதலில் அதன் கழுத்தை கடித்து வேட்டையாடும் இயல்புடையது.
புலிகளின் எண்ணிக்கை
1900-களில் புலிகளின் எண்ணிக்கை அனைத்து பகுதிகளையும் சேர்த்து 1 லட்சம். இன்று 3000-4500 வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள புலி இனங்களின் எண்ணிக்கை, இன வாரியாக
பெங்கால்- 2000க்கும் கீழ்
இந்தோ/சைனீஸ்- 750-1300
சைபீரியன் – சுமார் 450
சுமத்ரன்- 400-500
மலையன் – 600-800
வரலாற்று ரீதியாக புலிகளின் வாழ்விடம் துருக்கியில் தொடங்கி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகள் வரை நீள்கிறது. ஆசியக் கண்டத்தின் கடற்கரை பகுதிகளிலும் வாழ்விடம் கொண்டிருந்தது. இப்போது தெற்கு, தென்கிழக்கு ஆசியா பகுதிகள், சீனா மற்றும் ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் புலிகள் வாழ்ந்து வருகின்றன.
புலிகளின் வசிப்பிடம்
புலிகள் அனைத்துவித பருவநிலை காலங்களிலும் வாழும் தன்மை கொண்டது. செடி கொடிகள் அடர்ந்த காடுகள், மரங்கள் அடர்ந்த காடுகள், மாங்குரோவ் காடுகள், சதுப்பு நில காடுகள், புல்வெளிகளிலும் வாழும் தன்மை கொண்டது.
புலிகளின் இனப்பெருக்கம்
புலிகளின் இனப்பெருக்க மாதங்கள் நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை. இனப்பெருக்க காலம் 16 வாரங்கள். ஒருமுறைக்கு 3-லிருந்து 4 குட்டிகளை ஈனும். குட்டிப் போட்ட 8 வாரங்கள் வரை புலிக் குட்டிகள் தாய் புலிகளிடம் இருக்கும். இரண்டரை வருடங்களில் தாய் புலியை விட்டு வெளியே வந்துவிடும். புலிகள் தனிமையாக வாழும் பழக்கம் உடையது. அது வேட்டையாடுவதற்கு உகந்த, பரந்த இடங்களையே வாழ்வதற்கு தேர்ந்தெடுக்க கூடியது.
இந்தியா
அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ள நாடாக உள்ளது. புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 25 புலிகள் சரணாலயத்தை உருவாக்கியுள்ளது இந்தியா.
2007 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பில், இந்தியாவில் வனப் புலிகளின் எண்ணிக்கை தோராயமாக 1,411 என்று குறைந்துள்ளதாகக் சொல்கிறது. அந்த அறிக்கையில் புலிகளின் எண்ணிக்கை குறைவிற்கு, சட்டவிரோதமாக வேட்டையாடுதலே காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது.