தமிழகத்தில் மதுக்கடைகளை மூட கோரி பந்த்: பஸ் கண்ணாடி உடைப்பு – பதற்றம்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட கோரி பந்த்: பஸ் கண்ணாடி உடைப்பு – பதற்றம்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட கோரி பந்த்: பஸ் கண்ணாடி உடைப்பு – பதற்றம்

 

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பந்த் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், குமரியில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவத்தால் பதற்றம் நிலவி வருகிறது.

முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராட்டம் நடத்தி வந்த காந்தியவாதி சசிபெருமாள், போராட்ட களத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் மதுக்கடைகள மூட வலியுறுத்தி போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்த வண்ணம் உள்ளது. மேலும், சசிபெருமாளின் இறப்புக்கு பின் பல்வேறு போராட்டங்கள் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

உண்ணாமலைக்கடை டாஸ்மாக் கடையை அகற்றிய அதிகாரிகள், அதே எண் கொண்ட கடையை பள்ளியாடி பகுதியில் புதிதாக தொடங்கியுள்ளனர். அந்த கடையை மூடக் கோரி விஜயதரணி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக நேற்று இரவில் மார்த்தாண்டம் பகுதியில் 4 பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

முழு பந்த் காரணமாக குமரி மாவட்டம் நேற்று இரவு முதலே பரபரப்பாக காணப்படுகிறது. இதனிடையே, மார்த்தாண்டத்தில் இன்று காலை மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரிப் பேருந்து மீது கல்வீசப்பட்டது. இதனால், தனியார் கல்லூர் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தது. இதை தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நாகர்கோவில், திருவட்டாறு உள்ளிட்டப் பகுதிகளில் இதுவரை 2 கேரள அரசுப் பேருந்துகள் உட்பட 20 பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால், போலீசார் ஆங்காங்கு குவிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

சென்னை

சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே மதுவிலக்கு கோரி அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சென்னை கோவிலம்பாக்கத்தில் மதுக்கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர்.

அடையார்,திருவான்மியூர்,கிண்டி,சைதாப்பேட்டை,தரமணி,நந்தனம்,அண்ணாசாலை, உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது. நந்தனம் அரசு கல்லூரி மற்றும் மாநில கல்லூரி,பச்சையப்பன் கல்லூரிகளில் மாணவர்கள் தீவிர சோதனைகளுக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளின் நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் சென்னையில் பதற்றம் நீடிக்கிறது.

சேலம் மாவட்டம்

சேலம் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அதே போல வாழப்பாடி பகுதிகளில் பந்த்தையொட்டி கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.ஆத்தூர் பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு அடைப்பு காரணமாக நேற்று இரவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 100 பேரை போலீசார் கைது செய்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள முதுகரை கிராமத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை மர்ம நபர்கள் இன்று காலை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து கொளுத்தினர். இதில், அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் தீயில் எரிந்துள்ளது. இதையடுத்து மதுக்கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை சித்தாமூர் போலீசார் தேடி வருகின்றனர்.

மணப்பாறையில் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

திருச்சி மணப்பாறை சேதுரத்தினபுரத்தில் தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிட் ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தர்மராஜ், தேமுதிக கவுன்சிலர் ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாபு ஆகியோர் திடீரென செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

கடலூரில் டாஸ்மாக் முற்றுகை

கடலூர் மாவட்டம், தொரவலூரில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல், சிதம்பரத்திலும் கஞ்சி தொட்டி என்ற இடத்தில் டாஸ்மாக் கடையை மூட கோரி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 500 பேர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில் அம்மா உணவகம் முன் அனுமதியின்றி உண்ணாவிரதம் மேற்கொண்ட சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தையை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் மாணவர்கள் கைது

புதுச்சேரி அண்ணாசாலையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் தாக்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

குமரி மாவட்டத்தில் 80 சதவீதம் கடையடைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் உதவியுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதை கண்டித்து தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரி கட்சியினர் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இதனை முன்கூட்டியே அறிந்த காவல்துறையினர் அனைத்து கல்லூரிகளுக்கும் முன்பாக போலீசாரை குவித்ததால், மாணவர்கல் மீண்டும் கல்லூரிக்குள்ளேயே சென்று விட்டனர்.

மதுக்கடைகளை மூடக்கோரி அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் போராடக்கூடும் என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பாகவும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். யாராவது போராட்டம் நடத்தினால், ரிமாண்ட் செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீசார் எச்சரித்ததால் போராட வரும் அமைப்பினரும் அச்சத்துடன் கலைந்து செல்லும் நிலை உள்ளது.

இதனிடையே கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் அடித்து நொறுக்கப்பட்ட அந்த டாஸ்மாக் கடை இன்றும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்