மனைவியை உயிரோடு தீவைத்து எரித்த கணவர்

மனைவியை உயிரோடு தீவைத்து எரித்த கணவர்

மனைவியை உயிரோடு தீவைத்து எரித்த கணவர்

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கானாவூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24), செங்கல்சூளை தொழிலாளி. இவர் கடந்த 4 வருடத்திற்கு முன்பு சாராள் (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் நாகராஜ் வீட்டிற்கு ஒழுங்காக பணம் கொடுக்காமல் மது குடித்து வந்தார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது இனி நீங்கள் குடித்தால் நான் தீக்குளித்து தற்கொலை செய்வேன் என்று சாராள் கணவரிடம் கூறினார்.

ஆனாலும் நாகராஜ் திருந்தாமல் நேற்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் மனம்உடைந்த சாராள், நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று சமையல் அறையில் உள்ள மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றினார். இனி குடிக்க மாட்டேன் என்று கூறுங்கள், இல்லாவிடில் தீவைத்து விடுவேன் என்று கூறினார்.

அப்போது நாகராஜ், நீ என்ன சொல்வது, நானே தீவைத்து விடுகிறேன் என்று கூறி அவரே தீப்பட்டியை எடுத்து தீ பற்ற வைத்து மனைவி சாராள் மீது போட்டார். இதில் சாராள் உடலில் தீப்பற்றியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்து சாராளை காப்பாற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு உடல் கருகிய நிலையில் சாராளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்றதால், தென்காசி மாஜிஸ்திரேட்டு மரண வாக்குமூலம் வாங்கினார். அதில் சாராள் தனது கணவர் தன்னை தீவைத்து எரித்த மேற்கண்ட சம்பவத்தை வாக்குமூலமாக கூறினார். மேல் சிகிச்சைக்காக நேற்றிரவு சாராளை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லதா, சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார், நாகராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்