படிக்கவும் சிந்திக்கவும் வாழவும் அனுமதியுங்கள்!

படிக்கவும் சிந்திக்கவும் வாழவும் அனுமதியுங்கள்!

படிக்கவும் சிந்திக்கவும் வாழவும் அனுமதியுங்கள்!

 

* உலகிலேயே குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கும் நாடு இந்தியா.  18 வயதுக்கு முன் கட்டாயத் திருமணத்துக்குள் தள்ளப்படுகிற பெண்கள் 47 சதவிகிதம்.
* 18 வயது நிரம்புவதற்குள்ளேயே தாய்மை அடைகிற பெண்கள் 22 சதவிகிதம்.
* இது மட்டுமல்ல… இந்த நிலை மாறாவிட்டால், 2030ல் இந்தியாவில் 28 மில்லியன் சிறுமிகள் திருமதிகளாகி இருப்பார்கள் என எச்சரிக்கிறது ஓர் ஆய்வு.

பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்தக் கொடுமைக்குக் குரல் கொடுத்திருக்கிறது ‘தஸ்ரா’ என்கிற தன்னார்வ அமைப்பு. குழந்தைத் திருமணங்களையும் இளவயது கர்ப்பங்களையும் தடுக்கும் விதமாக ‘மேரி மீ லேட்டர்’ என்கிற விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறது. ‘‘25 முதல் 49 வயதுக்குள்ளான திருமணமான பெண்களிடம் ‘தஸ்ரா’ ஓர் ஆய்வு நடத்தியது. அதில் 61 சதவிகிதப் பெண்கள் 18 வயதுக்குள் திருமணம் முடித்தவர்கள் என்பதும்,

அவர்களில் 15 வயதுக்குள் திருமணமாகி, கர்ப்பம் தரிப்பவர்கள் பிரசவத்தின் போது இறந்து போகிற சதவிகிதம் 20 வயதில் தாய்மை அடைகிற பெண்களைவிட 5 மடங்கு அதிகம் என்பதும் தெரிய வந்தது. ஆபத்தான இந்தப் புள்ளிவிவரங்கள்தான் இந்த ஆய்வைத் தொடர்வதற்கான வேகத்தைக் கொடுத் தன…’’ – மிரள வைக்கிற உண்மைகளுடன் பேச ஆரம்பிக்கிறார் சோன்வி ஏ கண்ணா. தஸ்ரா சார்பாக இந்த ஆய்வை மேற்கொண்ட அட்வைசரி ரிசர்ச் அசோசியேட் இவர்.

‘‘வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிற குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள், ஓரளவு பொருளாதார வசதி உள்ள குடும்பத்துக் குழந்தைகளைவிட, 5 வயது முன்னதாக திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.கல்வியறிவு இல்லாத பெண் குழந்தைகளும் கிராமங்களில் வசிக்கிற பெண் குழந்தைகளும் இந்தக் கொடுமையில் அதிகம் தள்ளப்படுகிறார்கள். ஆணைக் குடும்பத் தலைவனாகக் கொண்டு இயங்கும் இந்தியச் சமுதாய அமைப்பின் மனநிலையின் பிரதிபலிப்பே இவை அத்தனைக்கும் அடிப்படை.

திருமணமும் குழந்தை பெறுவதும்தான் பெண்ணின் வாழ்க்கையை முழுமையாக்குகிற சம்பவங்கள் என்று காலங்காலமாக மக்கள் மனங்களில் பதிந்து போன பார்வையும், சீக்கிரமே மகளை மணமுடித்துக் கொடுப்பதன் மூலம் பொறுப்புகளில் இருந்து விடுபடலாம் என்கிற பெற்றோரின் மனோபாவமுமே முக்கிய காரணங்கள்.

எந்தப் பெண் குழந்தையும் தனக்கு ஏற்பாடு செய்யப்படுகிற வயதுக்கு முந்தைய திருமணத்துக்கு மனத்தளவிலோ, உடலளவிலோ தயாராக இருப்பதில்லை. மேலே படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் திருமணம் வேண்டாம் என மறுக்கிறார்கள். திருமண வயதுச் சட்டம் பற்றிப் படிக்கிற, கேள்விப்படுகிற அவர்கள், தன்னார்வ அமைப்புகளின் உதவியை நாடி, தங்களுக்கு நிகழ இருக்கும் திருமணத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், எல்லா சிறுமிகளுக்கும் இது சாத்தியமாவதில்லை. திருமணம் செய்து கொள்வதைத் தவிர மாற்றுவழி இல்லாதவர்கள் எத்தனையோ பேர். எதிர்ப்பை வெளிப்படுத்த வழி தெரியாமல் திருமணத்துக்குத் தலையசைக்கிற பெண் குழந்தைகளும் ஏராளமாக இருக்கிறார்கள்.

குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், 2006, 18 வயதுக்குள்ளான பெண்களுக்கும் 21 வயதுக்குள்ளான ஆண்களுக்கும் திருமணம் முடிப்பதை சட்டப்படி தவறு என்கிறது. அப்படித் திருமணத் துக்குக் கட்டாயப்படுத்தப்படுகிற பெண்ணோ,

ஆணோ அந்தத் திருமணத்தை இல்லாததாக அறிவிக்கச் சொல்லி சட்டத்தின் உதவியை நாட வழி உண்டு. அப்படி அந்தத் திருமணம் இல்லாததாக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, அந்தச் சிறுமி, இன்னொரு திருமணம் செய்கிற வரை அவளுக்கு இருப்பிடம் மற்றும் பராமரிப்புக்கான தேவைகளை அந்தப் பெண்ணை மணந்தவர் மற்றும் அந்த ஆணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செய்தாக வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

இந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படுவதோடு, அவர்களது எதிர்கால நலன் கருதி,  பராமரிப்பும் கவனத்தில் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. சட்டத்தின் இந்த விதிமுறைகள் மீறப்படுகிற பட்சத்தில் அந்த ஆண், பெண்ணைச் சேர்ந்த குடும்பத்தாருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுவதோடு, திருமணத்துக்கு வருகை தந்தவர்கள், திருமணச் சேவையில் ஈடுபட்டவர்கள் போன்றோருக்கும் அதே தண்டனையை விதிக்கிறது.

சட்டம் இத்தனை கடுமையாக இருக்கும் போதும், இந்த அவலம் தொடர என்ன காரணம் தெரியுமா? குழந்தைத் திருமணம், சட்டத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டால், அந்த இரு குடும்பங்களுக்கும் ஏற்படுகிற அவமானம், பொருளாதார இழப்பு, தண்டனை போன்றவற்றைச் சொல்லி, அந்தப் பெண்ணைப் புகார் செய்வதி லிருந்து தடுத்து விடுகிறார்கள். லஞ்சத்துக்குப் பழகிய போலீஸார்,  இதை மனசாட்சியுடன் தொடர்புள்ள ஒரு சம்பவமாகப் பார்க்கத் தெரியாதவர்களாக இருப்பதும் இன்னொரு காரணம்.

இந்தியாவில் முதல் முறையாக  ஒரு குழந்தைத் திருமணம், 2013ல் இல்லாநிலைத் திருமணமாக அறிவிக்கப்பட்டது. லட்சுமி சர்காரா என்கிற அந்தப் பெண்ணுக்கு 1 வயதில் திருமணம் நடத்தப்பட்டிருக்கிறது. அந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து 18 வயதில் அவருக்கு இன்னொரு திருமணம் நடத்தப்பட்டது.

எனவே சட்டம் தன் கடமையை சரியாகச் செய்தாலே லட்சுமி போன்ற பல பெண்கள் காப்பாற்றப்படுவார்கள்…” தனது ஆய்வறிக்கையின் பின்னணி குறித்து நீண்ட விளக்கம் அளிக்கிற சோன்வி, குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதில் ‘தஸ்ரா’வின் ஆலோசனைகள் சிலவற்றையும் பட்டியலிடுகிறார்.

‘‘கிராமப்புறங்களில் கல்வியைத் தொடரச் செய்வது மட்டுமின்றி, பெண் குழந்தைகளுக்கான வேலை வாய்ப்புகளுக்கும் வழிகளை அமைத்துத் தர வேண்டும். ஒரே ஒரு பாசிட்டிவான உதாரணம் காட்டப்பட்டால் கூட, மொத்த கிராமத்து மக்களின் சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். குடும்பப் பொறுப்பை ஏற்பவரிடம், பெண் குழந்தைகளின் திருமணத்தின் பாதிப்புகளைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசி, மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

கட்டாயத் திருமணத்துக்குள் தள்ளப்படுகிற பெண் குழந்தைகள், அதையடுத்து மனரீதியாக, உடல் ரீதியாக உச்சக்கட்ட கொடுமைகளை சந்திக்கிறார்கள். குரலெழுப்ப வாய்ப்பின்றி, தவிக்கிற அத்தகைய குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு, அவர்களது எதிர்கால நலனுக்கான உதவிக்கரம் நீட்ட வேண்டிய கடமை அரசுக்கும் சமுதாயத்துக்கும் இருக்க வேண்டும்.

கடைசியாக பிறப்பு மற்றும் திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். பிறப்பு பதிவு செய்யப்படாத பெண்களுக்கு திருமணப் பதிவு இன்னொரு வாய்ப்பு. திருமணம் என்கிற பெயரில் கடத்தப்படுகிற, பாலியல் தொழிலுக்காக விற்கப்படுகிற பெண் குழந்தைகளைக் காப்பாற்றவும் இந்தப் பதிவு பேருதவியாக அமையும்” என்கிறவர், பெற்றோருக்கும் எச்சரிக்கை விடுக்கிறார்.

‘‘குழந்தைத் திருமணத்துக்கு உட்படுத்தப்படுகிற பெண்கள், வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதை வெளியில் சொல்வதில்லை. விருப்பமற்ற பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டாலும், வாய் திறப்பதில்லை. பிரசவத்தின் போது உயிரிழக்கிறார்கள். மிக இளவயதில் கர்ப்பம் தரித்ததன் விளைவாக பிரசவத்தின் போது, குழந்தையை இழக்கிறார்கள்.

இவை எல்லாவற்றின் தொடர்ச்சியாக அதீத மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.பெற்றோரும் சமுதாயமும் மனது வைத்தால் இந்த எல்லா அவலங்களையும் மாற்ற முடியும்… பெண் குழந்தைகளை அவர்களது விருப்பப்படி படிக்கவும் சிந்திக்கவும் வாழவும் அனுமதித்தால்!’’கட்டாயத் திருமணத்துக்குள் தள்ளப்படுகிற பெண் குழந்தைகள், அதையடுத்து மனரீதியாக, உடல்ரீதியாக உச்சக்கட்ட கொடுமைகளை சந்திக்கிறார்கள்…

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்