சமுதாயத்தை சீரழிப்பது குடி மட்டுமல்ல… சினிமாவும் தான்…!

சமுதாயத்தை சீரழிப்பது குடி மட்டுமல்ல… சினிமாவும் தான்…!
மதுவுக்கு எதிரான மக்களின் போராட்டம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அண்மையில் தீவிரத்தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக தன் வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிராகப் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள், குமரி மாவட்டத்தில் ஒரு மதுக்கடையை அகற்றும் போராட்டத்தின்போது மரணமடைந்தார்.
சசிபெருமாளின் மரணத்துக்குப் பிறகு மதுவுக்கு எதிரான மக்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் தீவிரமடைந்துள்ளது. மதுவுக்கு எதிராகப் போராடி வருபவர்கள் மட்டுமின்றி, மாணவர்களும், மாணவிகளும், பெண்களும் தெருவில் இறங்கி போராடத்தொடங்கிவிட்டனர். மதுக்கடைகள் அடித்து உடைக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம், ஊடகங்களிலும் மதுவிலக்கு பற்றிய விவாதமும்… விழிப்புணர்வு உரையாடல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மக்களுக்கு மதுவை அறிமுகப்படுத்திய தி.மு.க.வே தேர்தல் நெருங்குவதை மனதில் வைத்து மதுவிலக்கு வேண்டும் என்று குரல் கொடுக்க, மற்ற அரசியல்கட்சிகளும் மதுவிலக்கை உடனடியாய் அமல்படுத்த வேண்டும் என்ற கோஷத்தை முன் வைக்கத் தொடங்கியுள்ளன.
இப்படியாக, சமூக, அரசியல் தளங்களில் மதுவுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வரும்நிலையில், அதற்கு நேர்மாறாக, திரைப்படங்களில் மட்டும் மதுவுக்கு ஆதரவான பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக அண்மைக்காலமாக இந்தப்போக்கு முன்னைவிட வலுப்பெற்றும் வருகிறது.
தமிழ்சினிமாவில் கதாநாயகனின் நண்பன் என்ற பெயரில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஒரேயொரு வேலைதான்…! சதா நேரமும் கதாநாயகன் சகிதமாக சரக்கடிப்பதைத் தவிர தமிழ்சினிமா நண்பேன்டாக்கள் வேறு எதையும் செய்வதில்லை. அது மட்டுமல்ல, சரக்கடிப்பதை மிகப்பெரிய கொண்டாட்டமாக சித்தரிக்கும் வசனங்களையும் பேச தவறியதில்லை.
காதல் என்றாலும் சரக்கு… காதலில் தோல்வி என்றாலும் சரக்கு…!
தமிழ்சினிமாவில்…. கதாநாயகன் காதல் வயப்பட்டாலும் சரக்கடிக்கிறார்கள்… காதலில் தோல்வியடைந்தாலும் சரக்கடிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட காட்சிகளை தொடர்ந்து எல்லாப்படங்களிலும் பார்க்கும் பார்வையாளன் நிஜ வாழ்வில் தனக்கு அப்படியொரு அனுபவம் ஏற்படுகிறபோது, சினிமாவில் பார்த்த அதையே செய்யத் துணிகிறான். குறிப்பாக காதல் தோல்வி ஏற்படுகிறபோது அதற்கான தீர்வாக குடிப்பதை தேர்ந்தெடுக்கிறான். திரைப்படக்காட்சி ஒருவனின் வாழ்வை இப்படியும் சூறையாட முடியும்.
எனவே, கதாநாயகனும், நண்பர்களும் சினிமாவில் குடித்துவிட்டு கூத்தடிக்கும் காட்சிகளை… சினிமாதானே என்று ஒதுக்கிவிட முடியாது என்பதை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஆபத்தான வசனங்கள்…!
சில தினங்களுக்கு முன் வெளி வந்த ஒரு திரைப்படத்தில் அப்படத்தின் நாயகன், இன்னொரு நடிகரிடம் சொல்கிறார்… போரடிக்குதுன்னு கூப்பிடுறவன் ப்ரண்டு, பீர் அடிக்கலாம்னு கூப்பிடுறவன் பெஸ்ட் ப்ரண்டு என்று…
மேலோட்டமாகப் பார்த்தால் இது நகைச்சுவை வசனம்போல் தோன்றும். உண்மையில் மிக ஆபத்தான வசனம் இது. இந்தப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களிலும் இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து கேட்கும் ஒருவனின் மனதில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்?
பீர் அடிக்கலாம்னு கூப்பிடுகிறவன்தான் பெஸ்ட் ப்ரண்டு – என்று நட்புக்கு புது இலக்கணம் சொல்லும் அந்த வசனம், அதைக் கேட்பவர்களின் மனதில் அவர்களை அறியாமலே ஆழமாகப் பதியும் என்பது உளவியல் உண்மை.
கதாநாயகன், சிரிப்பு நடிகர்களைவிட, தமிழ்சினிமாவின் வில்லன்கள் இன்னும் மோசமான காட்சிகள்…! வில்லனைப் பற்றிய அறிமுகக்காட்சி தொடங்கி க்ளைமாக்ஸில் கதாநாயகனிடம் அடிபட்டு சாகும்வரை வில்லன் என்பவன் குடித்துக்கொண்டேதான் இருப்பான். ஒரு கையில் தம்… இன்னொரு கையில் தண்ணி…!
குடிப்பாட்டாக மாறிய குத்துப்பாட்டு…!
அதுபோலவே, அண்மை வருடங்களாக தமிழ்சினிமாவுக்கான வணிக சூத்திரத்தில்… அதாவது கமர்ஷியல் ஃபார்முலாவில் மிக அபாயகரமான மற்றொரு அம்சமும் சேர்ந்திருக்கிறது.
குத்துப்பாட்டு என்ற பெயரில் இடம்பெற்று வந்த கவர்ச்சி நடனம், கடந்த சில வருடங்களாக குடிப்பாட்டாக மாறிவிட்டது. டாஸ்மாக் பாரில் சரக்கடிக்கும் காட்சியும், அங்கே கவர்ச்சி நடிகை ஒருவர் உடம்பைக் குலுக்கி ஆடும் கவர்ச்சிப்பாடலும் இல்லாத தமிழ்ப்படங்களை பார்ப்பது அரிது. அல்லது விரல்விட்டு எண்ணிவிடலாம்.
இதுபோன்ற குடிப்பாட்டுக்கள் நிஜத்தில் எந்தவொரு டாஸ்மாக் பார்களிலும் நடப்பதில்லை. தமிழ்சினிமாவில் மட்டும் இப்படியான சித்தரிப்பு. இதுபோன்ற காட்சிகள் மது மீது மட்டுமல்ல, மாது மீதும் மோகத்தை உண்டாக்கக் கூடியதாக உள்ளன.
பட தலைப்பிலேயே மது…!
வசனங்கள், காட்சிகள், பாடல்கள் என பல வழிகளில் மதுவை பிரதானப்படுத்திய… பிரச்சாரம் செய்த தமிழ்சினிமா தற்போது அடுத்த கட்டத்தைத் தொட்டிருக்கிறது. அதாவது படங்களில் தலைப்பிலேயே மதுவை குறிப்பிடுகிறார்கள். வ குவாட்டர், மதுபானக்கடை என்ற பெயரில் எல்லாம் படங்கள் வந்தன.
இப்போது, விரைவில் வெளிவர உள்ள படம் – வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்பது படத்தின் பெயராக இருந்தாலும், இப்படத்தை VSOP என்றே அப்படத்தில் நடித்தவர்கள் தொடங்கி படக்குழுவினர் குறிப்பிட்டு வருகின்றனர். VSOP என்பது பிரபலமான மதுவின் பிராண்ட்.
VSOP என்ற படத்தின் தலைப்பிலேயே மதுவின் நெடி இருக்கிறபோது, இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் எப்படி இருக்கும் என சொல்லத் தேவையில்லை.
சென்சாரும் கண்டு கொள்ளவில்லை!
சரக்கடிக்கும் காட்சிகளும், வசனங்களும் அதிகமாக இடம்பெறும் படங்களை சென்சாரும் கண்டு கொள்வதில்லை. வெறுமென புகைப்பிடிப்பது, மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று வாசகங்கள் மட்டும் இடம்பெற்றால் போதுமா…! படங்களில் அப்படி போடும் வாசகங்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள். அதைவிட முக்கியம், அந்த வாசகம் இடம்பெற்றுள்ளதா…? என தேடும் அளவுக்கு சிறிதாக வௌியிடுகிறார்கள். வன்முறை, ஆபாசம் போன்ற விஷயங்களை பார்க்கும் சென்சார் மதுபானம் போன்ற விஷயங்களையும் கொஞ்சம் கவனித்தால் நல்லது.
வரிச்சலுகை கூடாது…!
பொதுவாக குடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள எந்தவொரு படத்துக்கும் வரிவிலக்கு சலுகை அளிக்கக் கூடாது என்பதை அரசு கட்டாயப்படுத்த வேண்டும்.
சமூகத்தில், இன்றைக்கு சினிமாவின் தாக்கம் அதிகம். ஒவ்வொரு ஹீரோவையும் இளைஞர்கள் தங்களது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதுமட்டுமல்ல குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்டவர்களும் தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்களை பாலோ செய்ய தொடங்கிவிட்டனர். ஒரு ஹீரோ செய்யும் எந்தவொரு விஷயமும் அவர்களிடம் அப்படியே பிரதிபலிக்கின்றன. உதாரணத்திற்கு சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வௌிவந்த மாரி படத்தில் அவர் அடிக்கடி ஒரு வசனம் செஞ்சுருவேன். இந்த வார்த்தைக்கான அர்த்தகம் அந்த குழந்தைகளுக்கு தெரியுமோ தெரியாதோ… ஆனால் அந்த வசனத்தை அவர்களும் அடிக்கடி சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அந்தளவுக்கு அவர்கள் சினிமாவால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.