இன்று ஆகஸ்ட் 13 உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினம்
இன்று ஆகஸ்ட் 13 உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினம்
அந்தக் காலத்திலெல்லாம் தானம் என்று குறிப்பிட்டால் பொன், பொருள், நிலம், பசு, துணி போன்றவைகளை வழங்கியதையே குறிப்பிடும். பின்னர் மருத்துவத் துறையின் வளர்ச்சி காரணமாக ரத்த தானம் பிரதானப் படுத்தப்பட்டது. அதையடுத்து கண் தானம் வலியுறுத்தப்பட்டது. இருக்கும்போது ரத்த தானம், இறந்த பிறகு கண் தானம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் மக்களின் மனதில் பதிய ஆரம்பித்தது, தற்போது போது உடல் உறுப்புகள் தானம் என்ற நிலையையும் தாண்டி, மருத்துவ ஆராய்ச்சிக்காக, இறந்த பிறகு தனது முழு உடலையும் அப்படியே தானமாக (தேக தானம்) சிலர் மருத்துவமனைகளுக்குத் தந்துவிடுகின்றனர். இந்நிலையிலும் , இந்த அறிவியல் யுகத்திலும் பலருக்கு இந்தத் தானங்களைச் செய்ய முன்வருவதில் தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
நம் நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 2 லட்சம் பேர் விபத்தில் சிக்கி மூளைச்சாவுக்கு ஆளாகி இறக்கிறார்கள். இவர்களது கிட்னி, இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவை வீணாக மண்ணுக்கு போகிறது. மண்ணுக்கு வீணாக செல்லும் உறுப்புகளை வாழ காத்திருக்கும் மனிதருக்கு வழங்கினால், தானம் பெறுபவரும் வாழ்வார், தானம் கொடுத்தவரும் மற்றொரு உயிரில் வாழ்வார். ஆனால் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படாமல் வீணாகிறது. மூளை சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் முன் வர வேண்டும். ஆனால் 121 கோடி மக்கட்தொகை கொண்ட இந்திய மக்களில், வெறும் 1 சதவீதத்தினர் மட்டுமே உடலுறுப்பு தானம் செய்வதாக, மருத்துவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கி மூளை சாவு ஏற்பட்டவரின் இதயம் துடித்து கொண்டிருக்கும். ரத்த அழுத்தம் குறைந்து வரும். அப்படியே விட்டால் 2 அல்லது 3 நாளில் தானாக உடலின் அனைத்து உறுப்புகளும் செயலிழந்து உடல் இறந்து விடும். அதற்குள் மூளைச்சாவு ஏற்பட்டதை உறுதி செய்ய 10 முதல் 15 வகையான பரிசோதனை உள்ளது. அதன் மூலம் உறுதி செய்த பின்னர், மருத்துவர் குழு உறவினர்களுக்கு அறிவிக்கும். உடனடியாக உறவினர்கள் மூளைச் சாவு ஏற்பட்டவரின் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தால் டாக்டர்கள் உடனடியாக அரசின் நல்வாழ்வுத் துறையில் பதிவு செய்வார்கள்.
இதற்கிடையில் உடல் உறுப்புகளை ஆரோக்கியமான நிலையில் அகற்ற போதுமான பராமரிப்புகளை கையாண்டு, அதை உயிர் நிலையில் வைத்திருப்பார்கள். பின்னர் உறுப்புகளை அகற்றி பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருத்த ஏற்பாடு செய்வார்கள். இதனால், பலரது உயிர்களை காக்க முடியும். இது போன்று ஒவ்வொரு ஆண்டும் சிறுநீரகத்திற்கு 2 லட்சம் பேரும், கல்லீரலுக்காக 1 லட்சம் பேரும் மருத்துவமனையில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், அவர்களில் 2 முதல் 3 சதவீதத்தினர் மட்டுமே உடலுறுப்புகளை தானமாக பெறுகின்றனர். மேற்கத்திய நாடுகளில் 70 முதல் 80 சதவீதத்தினர் உடலுறுப்புகளை தானம் செய்யும் நிலையில், இந்தியாவில் அது வெறும் 1 சதவீதம் மட்டுமே இருப்பதற்கு மத, மூட நம்பிக்கைகளே காரணம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு வருடங்களாக உறுப்பு தானத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கவலை தெரிவித்துள்ள டாக்டர்கள், உடலுறுப்பு தானம் தரும் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இந் நிலையிதான் உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த, இந்தியாவில் ஆண்டுதோறும், ஆகஸ்ட் 13ம் தேதி உடலுறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.,