3 மாணவிகள் தற்கொலை எதிரொலி.. விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு சீல் வைப்பு
தமிழ் உலகம்,
1238
3 மாணவிகள் தற்கொலை எதிரொலி.. விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு சீல் வைப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பங்காரத்தில் உள்ள எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு இன்று அதிகாரிகள் சீல் வைத்துப் பூட்டினர். இந்தக் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவிகள் நேற்று கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட பரபரப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவையயடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி. இங்கு யோகாசனம், இயற்கை மருத்துவம் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகிறது. இந்தக் கல்லூரி மீதும், நிர்வாகம் மீதும் பல்வேறு புகார்கள் உள்ளன. இதுகுறித்து இக்கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியுள்ளனர். கலெக்டரிடம் புகார்கள் போயுள்ளன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் கல்லூரியின் தாளாளர் வாசுகியும் அவரது மகன் சுதாகர் என்பவரும் புகார் கொடுத்த மாணவிகளை மிரட்டி நெருக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகள் பாலியல் தொல்லைக்குட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் திருவாரூர் பிரியங்கா (21), சென்னை எர்ணாவூர் மோனிஷா (21), காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு சரண்யா ஆகியோர் நேற்று பிணமாக கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டனர். 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நிர்வாகம் பலமுறை புகார்கள் கொடுத்தும் கூட மாவட்ட நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று கல்லூரியைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மாவட்ட கலெக்டர் லட்சுமி உத்தரவின் பேரில் துணை ஆட்சியர் பத்ரிநாத் உள்ளிட்டோர் வந்து கல்லூரியைப் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவ, மாணவிகள் அவரவர் ஊர்களுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.