காதலர் தினம் பற்றி ஓர் பார்வை - காதல் என்பது என்ன?
தமிழ் உலகம்,
1457
காதலர் தினம் பற்றி ஓர் பார்வை | காதல் என்பது என்ன?
இன்று உலகளாவிய ரீதியில் பல தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சிறுவர் தினம், அன்னையர் தினம், போதைபொருள் ஒழிப்பு தினம் இவ்வாறு இன்னும் பல தினங்கள் உலகிலுள்ள மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற வேளையில் பெப்ரவரி மாதம் இலங்கை நாட்டில் இலங்கையின் மிகப்பிரதானமான ஓர் நாளாகிய தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் நமது நாட்டின் இளைஞர்கள், குறிப்பாக நமது சமூகத்தின் முஸ்லிம் வாலிபர்கள், யுவதிகள் இந்த தேசிய தினத்திற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விடவும் அதேமாதத்தில் பதினான்காம் திகதி வரக்கூடிய காதலர் தினம் என்றொரு தினத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதையும் அத்தினத்தை ஓர் விசேட தினமாக அனுஷ்டிப்பதனையும் நாம் அவதானிக்கிறோம். உண்மையில் இந்தக் காதலர் தினம் என்றொரு தினம் எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது, அதன் பின்னணி என்ன என்பது போன்ற விடயங்களுக்குள் செல்வதை விடவும் இத்தினத்தில் இடம்பெறக்கூடிய நிகழ்வுகளையும் அந்நிகழ்வுகளின் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற தாக்கங்கள் பற்றியும் அறிந்து கொண்டோமானால் அது தொடர்பான இஸ்லாமிய மார்க்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதனை இலகுவாகவே புரிந்துகொள்ளமுடியும்.
காதல் என்பது என்ன?
இப்பெயருக்கு இஸ்லாமிய ரீதியாக பொருள்கூறுவது சிரமம் என்றாலும் ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பருவ வயதையடைகின்ற வேளையில் உடலில் ஏற்படுகின்ற பாலியல் வேட்கையின் வெளிப்பாடே காதல் என சுருக்கமாகக் கூறமுடியும். இந்தக்காதலைப் பொறுத்தவரையில் இஸ்லாம் ஒருபோதும் இதைக் கண்டிக்கவோ இதற்குத் தடை விதிக்கவோ இல்லை. ஒரு ஆணோ ஒரு பெண்ணோ தனது பால்ய வயதையடைந்ததும் தனக்குப் பிடித்தமான வாழ்க்கைத் துணையினை ஏற்படுத்திக்கொள்வதை இஸ்லாம் வலியுறுத்தவே செய்கிறது. ஆனால் இன்று காதல் என்னும் பெயரால் நடைபெறுகின்ற கலாச்சார சீரழிவுகளையும், மேற்கத்தேயர்களின் கீழ்த்தரமான சிந்தனையின் வெளிப்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட ஆண் பெண் முறைகேடான உறவையுமே இஸ்லாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
பொதுவாக இஸ்லாம் ஓர் விடயத்தை மனிதர்களுக்கு ஏவுகின்றதென்றால் அதில் நிச்சயம் முழு மனித குலத்திற்கு பலவகையான நன்மைகள் இருப்பதை நாம் காணமுடியும். அதேபோல் இஸ்லாம் ஓர் விடயத்தை தடை செய்கிறதென்றால் அது உலக முடிவு நாள்வரைக்கும் ஒட்டு மொத்த மனித குலத்திற்குமே பயங்கரமான பல பின்விளைவுகள் இருக்கும் என்பது தற்கால சூழ்நிலையில் நடைமுறை ரீதியாக நிரூபிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்.
அந்த வரிசையில்தான் இஸ்லாம் காதலர் தினம் என்னும் இத்தினத்தையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
காதலர் தின நிகழ்வுகள்.
நமது சமூகத்திலும் சில பிற்போக்கான சடவாதிகள் கூறுவதுண்டு. காதல் என்பது புனிதமானது என்று.
ஆனால் இந்த சீரழிவுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய முற்போக்குவாதிகள்(?) தங்களுகென்று ஓர் தினமாக உருவாக்கிக்கொண்ட தினத்தில் நாம் மிகவும் தெளிவாகக் கண்டுகொள்ள முடியும் இவர்கள் கூறுகின்ற காதலின் புனிதத்துவத்தை….
பெப்ரவரி 14ம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு திருட்டுத்தனமாக சந்தித்துக்கொள்வார்கள், முத்தங்களைப் பரிமாறிக்கொள்வார்கள், வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். இத்தோடு நின்றுகொண்டால் ஓரளவுக்குப் பரவாயில்லை எனக்கூறலாம். ஆனால் இதையெல்லாம் விடவும் கேவலமான, கீழ்த்தரமான சேஷ்ட்டைகளில் ஈடுபட்டு இறுதியில் அன்றைய ஒருநாள் சந்தோஷத்திற்காக ஒட்டு மொத்த வாழ்நாளையும் தொலைத்துவிட்டு மன நோயாளர்களாக வாழ்நாள் முழுவதும் அவதிப்படுகின்ற எத்தனையோ இளைஞர் யுவதிகளை நாம் பார்க்கிறோம்.
ஒருத்தனுக்கு ஒருத்தி என வறட்டுத்தத்துவம் பேசுகின்ற எத்தனையோ பேர் அன்றைய தினத்தில் தங்களின் வலக்கரம் சொந்தமாக்கிக்க்கொண்ட உறவுகளை கூட பண்ட மாற்றுப்பொருளாக பயன்படுத்துவதும், குடிபோதையில் தாய்க்கும் தாரத்திற்கும் கூட வித்தியாசம் தெரியாமல் நடந்துகொள்வதும் இத்தினத்தில்தான் அதிகளவில் நடைபெறுகின்றன.
கன்னித்தன்மை என்னும் கண்ணியத்தைப் பற்றியோ கற்பு எனும் கவசத்தைப் பற்றியோ அன்றைய தினத்தில் யாரும் அலட்டிக்கொள்வதே கிடையாது.
அழகிப்போட்டிகளின் மூலம் அங்க அவயவங்களின் அளவுகளுக்கு புள்ளிகள் இடுவது, தாய்மைக்கு இலக்கணம் வகுத்த பெண்கள் ஒரு போகப் பொருளாகவே அன்றி வேறு எதற்குமே அருகதையற்றவர்களாகக் கருதப்படுவது போன்ற இன்னோரன்ன சீரழிவுகளும் இடம்பெற்று அதன் மூலம் உலகின் சட்ட விரோதக் குழந்தைகளின் எண்ணிக்கையினை பெருக்குகின்ற செயற்பாடுகளையே அன்றைய தினத்தில் இக்காதலுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய முற்போக்குவாதிகள்(?) மேற்கொள்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.
அனால் இஸ்லாம் இவற்றைக் கண்டிக்கிறது. இன்று உலகில், ஏன் நமது நாட்டில்கூட ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருந்து விட்டுக் காதலன் தலைமறைவாகி பெண்கள் விபச்சார விடுதிகளில் தஞ்சம் புகுந்த சம்பவங்கள், காதலியோடு உடலுறவு கொண்ட வீடியோக்களை காதலன் இணைய தளங்களில் வெளியிட்டு பெண்கள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள், தனது பிள்ளைகளின் இவாறான ஈனத்தனமான செயற்பாடுகளால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட, மன நோயாளர்களான பெற்றோர்கள் என பல சம்பவங்களை பல மனிதர்களை நம்மால் காணமுடியும்.
‘பெண்களுக்கு சுதந்திரம்’ என்று வாயளவில் பெண்ணியல் நீதி பற்றி கொக்கரிக்கின்ற மேலைத்தேய சிந்தனை(?)வாதிகள் இவ்வாறான சீரழிவுகளில் சிக்கி சின்னா பின்னமாக்கப்படுகின்ற பெண்களின் நிலைமைகள் பற்றி மூச்சுவிடுவதில்லை.
‘இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது’ என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்ற ஊடகங்கள் இன்று மேலைத்தேயப் பெண்களின் கற்புக்கு உத்தரவாதம் அளிப்பதற்கு முதுகெலும்பற்றுப்போன நிலையிலேயே உள்ளன.
இவர்கள் போதித்த பெண்ணியல்வாத சிந்தனையின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இன்று அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தங்களின் தந்தை யார் என்பதை கண்டு பிடிப்பதற்கான மரபியல் சோதனை இயந்திரங்கள் உலாவருகின்ற காட்சிகளாகும். இவை மாத்திரமல்ல இன்னும் பல சீரழிவுகளை நோக்கிய மேற்கத்தேயவாதிகளின் பயணத்தில் ஓர் மைக்கல்தான் தாயும் மகனும், சகோதரனும் சகோதரியும் உறவு வைத்துக்கொள்ளக்கூடிய மிருகத்தனமான செயற்பாடாகும்.
ஆனால் இதில் வேதனை மிக்க விடயம் என்னவென்றால் இஸ்லாமிய மார்க்கம் இவ்வாறான கயமைத் தனங்களுக்கெல்லாம் காத்திரமான பல அரண்களை விதித்திருக்க நமது சமூகத்தின் இளைஞர்களும் யுவதிகளும் மேற்கத்தேயர்களின் இம்மாயவலைகளில் சிக்குண்டு தங்களின் ஈருலக வாழ்வினை பாழாக்கிக் கொள்கின்ற நடைமுறையாகும்.
எல்லாம் வல்ல இறைவன் தனது திருமறையிலே இவ்வாறு கூறுகிறான்.
தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறுவீராக!
இது அல்குர்ஆன் கூறும் அழகிய உபதேசமாகும். இவ்வுபதேசம் முக்காலமும் அறிந்த ஏக இறைவனால் மனித குலத்தின் நன்மை கருதிக் கூறப்பட்ட ஓர் நல்லுபதேசமாகும். ஆனால் இவ்வுபதேசத்தைக் கொண்டு ஏனைய மதத்தினருக்கு நேர்வழி காட்டவேண்டிய நமது இளைஞர் சமுதாயம் இன்று கால்போன போக்கில், சமுதாயத்தின் மீதான பொறுப்புக்களை மறந்து ஓர் சடவாத சிந்தனைக்கு ஆட்பட்ட தலைமுறையாக மாறிவருவதை நாம் அவதானிக்கிறோம்.
மேலும் நபியவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் ஓர் அந்நியப் பெண்ணிடம் அவளுடைய (தந்தை, சகோதரன், மகன்) போன்ற மஹ்ரமான உறவினர்கள் உடன் இருந்தாலே அன்றி தனியே இருக்க வேண்டாம் (சஹீஹ்முஸ்லிம்)
ஆக எல்லாம் வல்ல இறைவன் ஆணையும் பெண்ணையும் ஓர் ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டே படைத்துள்ளான். அதன் காரணமாகவேதான் நபிகளார் ஆண் பெண் பாவங்களைப்பற்றி மிகவும் கடுமையாக எச்சரித்தார்கள்.
அதேபோன்று ஓர் ஈமாநியப்பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அல்குர்ஆன் கற்பிக்கிறது.
(மர்யம்) தன் ஜனங்களை விட்டும் ஒதுங்கி ஒரு திரையைப் போட்டு (மறைத்து) கொண்ட சமயத்தில் நம்முடைய தூதரை (ஜிப்ரீல் (அலை) அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் சரியான மனிதருடைய தோற்றத்தில் காட்சியளித்தார். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (மர்யம் ஜிப்ரீலை நோக்கி) கூறினார். (19:17-18)
ஓர் அந்நிய ஆணிடம் ஓர் பெண் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை இவ்வசனம் படம்பிடித்துக்காட்டுகிறது. ஆனால் இன்றைய நமது சமூகத்திலுள்ள நிலைமையினை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால் தலைகீழாக மாறிப்போயிருப்பதை அவதானிக்கமுடிகிறது. கற்பொழுக்கம் பேணவேண்டிய நமது இஸ்லாமியப் பெண்களே இன்று வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நேரடியாகக் கலந்துகொண்டு வெட்க சுபாவம் என்பதை அணுவளவும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அந்நியர்களின் விரசமான பார்வைகளுக்குத் தங்களை ஆளாக்கிகொள்கின்றனர்.
அதுமாத்திரமல்லாமல் வானொலி நிகழ்ச்சிகளில் தொலைபேசிகள் மூலம் தொடர்புகொண்டு அந்நிய மத ஆண்களுடன் கொஞ்சிக் குலாவுவதும், தான் ஓர் இஸ்லாமியப்பெண் என்பதையும் மறந்து அவ்வறிவிப்பாளர்களை சிரித்துப்பேசி மகிழ்விப்பதன் மூலம் விபச்சாரத்தின் வாசலை திறந்து விடக்கூடிய காட்சிகளையும் நாம் அவதானிக்கிறோம். இதில் இன்னும் பரிதாபமான விடயம், பிள்ளைகளைப்பெற்ற பெற்றோர்களே இவ்வாறான ஹராமான செயற்பாடுகளுக்கு வழி சமைத்துக்கொடுப்பதும் அதன் மூலம் தங்கள் பிள்ளைகளின் செயற்பாட்டை நினைத்து சந்தோசப்பட்டு அதை ஏனையவர்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்வதுமாகும்.
ஆனால் பரிதாபம், தங்கள் பிள்ளைகளின் விடயங்களில் இவ்வாறு பாராமுகமாக இருகின்ற பெற்றோர்கள் நாளை அவர்களின் செயல்பாடுகளில் ஷைத்தானிய தூண்டுதல்கள் ஏற்படுகின்றபோது இவ்வுலகிலும் தலைகுனிந்து நாளை மறுமையிலும் கைசேதப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதும் யதார்த்தமான, கசப்பான ஓர் உண்மையாகும்.
எனவே இஸ்லாமிய மார்க்கம் என்பது ஏனைய மதங்களை, சித்தாந்தங்களை விடவும் தனித்துவமானது. பல சிறப்புக்கள் பொருந்தியது. மேலைத்தேய சடவாதிகள் கூறுவது போல் இஸ்லாம் கடுமையான சித்தாந்தங்களை உடையதோ, பழமையான கோட்பாடுகளை உடையதோ அல்ல. மாறாக அது ஓர் மனிதனுக்கு உச்சபட்ச பாதுகாப்பு அரணாக இவ்வுலகிலும் மறுவுலகிலும் செயற்படுகிறது.
ஆனால் அதன் புனிதத்துவத்தைக் காப்பதில்தான் நமது சமூகம் கோட்டை விட்டுள்ளது. மேற்குறிப்பிட்டது போன்ற இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டுமல்லாது முழு மனித சமுதாயத்தின் நாகரீக விழுமியங்களையே குழி தோண்டிப் புதைகின்ற இவ்வாறான கீழ்த்தரமான நிகழ்வுகளில் இருந்து முஸ்லிம்களாகிய நாம் விலகிக்கொள்ள எத்தனிக்க வேண்டும். விபச்சாரம் என்பது இன்று முழு உலகையும் வியாபித்திருக்கக் கூடிய ஓர் சாபக்கேடு என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.
எல்லாம் வல்ல இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
ஆக விபச்சாரம் என்பதை இஸ்லாம் தடைசெய்வதற்கு முன்னால் அதன் பக்கம் நெருங்க வேண்டாம் என்ற கட்டளையையே பிறப்பிக்கின்றது. அந்த வகையில் இவ்வாறான காதலர் தினம் போன்ற தினங்களைக் கொண்டாடுதல், அந்நிய பெண்களைப் பார்த்து இரசித்தல், ஒட்டி உறவாடுதல் போன்ற விபச்சாரத்தின் பக்கம் தள்ளிவிடக்கூடிய செயற்பாடுகளில் இருந்து முதலில் விலகிக்கொள்ள வேண்டும். ஓர் மனிதனின் இவ்வுலக வாழ்வின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் இழக்கச் செய்வதில் விபச்சாரத்திற்கே அதிகளவான வகிபாகம் உண்டு என்பதையும் மேலேயுள்ள இறைவசனம் கோடிட்டுக்காடுவதுடன் அதனை நாம் நிதர்சனமாகவும் கண்டு வருகிறோம்.
அதேநேரம் நமதூரின் தலைமை நிறுவனங்களான ஜம்மியத்துல் உலமா, சம்மேளனம் போன்ற அமைப்புக்கள் இதுபோன்ற கலாச்சார சீரழிவுகளுக்கு வழி வாசல்களைத் திறந்து விடக்கூடிய மதுபான சாலைகள், விபச்சார விடுதிகள், சினிமாக்கொட்டகைகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து கொள்ளும் நமதூர் இளைஞர், யுவதிகளின் விடயத்தில் காத்திரமான எந்தவொரு வழி காட்டல்களையோ தீர்மானங்களையோ இதுவரையில் முன்வைப்பதற்குத் திராணியற்றுப்போயிருப்பதும் கவலைக்குரிய விடயமாகும்.
அதேபோன்று ஷைத்தானிய தூண்டுதல்களின் விளைவாக இவ்வாறான சதிவலைகளில் சிக்கிவிடுகின்ற சில தனிநபர்களை, குடும்பங்களை அறிவுரை கூறி அதிலிருந்து மீட்பதற்குப்பதிலாக விசாரணை எனும் பெயரில் ஊரின் மையப்பகுதியில், பொதுமக்களின் முன்னிலையில் வைத்து மானபங்கப் படுத்துகின்ற இவ்வூர்த்தலைமைகளின் செயற்பாடுகளும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையேயாகும்.
ஆகவே, புனித இஸ்லாமிய மார்க்கத்தின் விழுமியங்களையும், கண்ணியமான போதனைகளையும் எமது வாழ்வில் முற்றாகக் கடைப்பிடிப்பதோடு மாத்திரமல்லாது இவ்வாறான ஷைத்தானிய சிந்தனைகளில் இருந்து நாமும் நம்மைச் சார்ந்த அனைவரும் விலகி வாழ்ந்து மரணிக்க எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிய வேண்டும்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்துவருவார்கள்.