ரஜினி படத்தில் நடித்தும் புண்ணியமில்லை! பெரியவருக்கு நேர்ந்த அவலம்!

ரஜினி படத்தில் நடித்தும் புண்ணியமில்லை! பெரியவருக்கு நேர்ந்த அவலம்!

ரஜினி படத்தில் நடித்தும் புண்ணியமில்லை! பெரியவருக்கு நேர்ந்த அவலம்!
 
ஒளிப்பதிவாளர் ஒருவருடன் பேட்டியை முடித்துக் கொண்டு வடபழனியில் இருந்து நானும் புகைப்படக்காரரும் திரும்பிக் கொண்டிந்தோம்.
 
வடபழனி பேருந்து நிலையத்துக்கும் விஜயா மருத்துவமனைக்கும் இடையில் காலை 11 மணி அளவில் ஒரு விபத்து நடக்கிறது. முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவரை பின்னால் வந்து கொண்டிருந்த வேன் ஒன்று மோதிவிட,  நிலைகுலைந்து  கீழே விழுகிறார் அந்த பெரியவர். அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நாங்கள்,  எங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு அவரை தூக்கி நிறுத்த முயன்றோம். மனிதாபிமானம் நிறைந்த பொதுமக்கள் சிலரும் நம்மோடு இணைந்தார்கள்.
 
பின்னந்தலையில் அடிபட்டவர் தொடர்ந்து வாந்தி எடுத்ததும்,  அவரின் முகத்தை கழுவிவிட்டு அவரை நிழலான பகுதிக்கு கொண்டு சென்றோம். கூட்டம் சேர்ந்தது. அவரைப் பார்த்த பலரும் ‘’இவரு ரஜினி படத்துல நடிச்சவர்தானே...? ‘’ என்று கேள்வி கேட்டுக்கொண்டே கடந்து போனார்கள். தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
 
உழைப்பாளி படத்தில் ரஜினி, சிவன் வேடத்திலும்,  ஐயராக ஒருவர் அவர் பின்னாலும் அமர்ந்து கொண்டு வருவார்களே...அந்த ஐயராக வரும் குருக்கள்தான் காயமடைந்த பெரியவர் ராமகிருஷ்ணன்.
 
செல்போன் வைத்திருந்த பலரும் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து போராடினோம். அரை மணி நேரம் ஒரு மணி நேரம் ஆனது ஆம்புலன்ஸ் வந்தபாடில்லை.
 
"கிண்டியில இருக்கோம் சார்...ஆலந்தூர்ல இருக்கோம் சார்...வர ஒரு மணி நேரம் ஆகும் பரவாயில்லையா...?" என்று அலட்சியமாக இருந்தது ஆம்புலன்ஸ் தரப்பின் இருந்து வந்த பதில்கள்.
 
சரி...ஆட்டோவை நிறுத்தலாம் என்று பார்த்தால்,  கை காட்டும் ஆட்டோக்கள் பலவும்  எங்களை கண்டு கொள்ளாமலே கடந்து சென்றன. அவர் எடை அதிகமாக இருந்ததால் தூக்குவதில் சிரமம் இருந்தது. பக்கத்தில் இருக்கும் விஜயா மருத்துவமனைக்குக் கூட அவரை தூக்க முடியாமல் ஆட்டோவை தேடியே அங்கிருந்தவர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்.
 
நிச்சயமாக ஆம்புலன்ஸ் வராது என்று தெரிந்தால் கூட அடுத்து என்னவென்று யோசித்திருக்கலாம். ஆனால் வரும் ஆனால் வராது என்கிற நிலை இருந்ததால் அருகில் பேருந்து நிலையம் அருகே இருந்த போலீஸ் பூத்துக்கு போனால் அது 12 மணி அளவிலும் பூட்டப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரையிலும் மிக முக்கியமான இடத்தில் டிராஃபிக் போலீஸ் யாருமே இதை கவனிக்கவில்லை.
 
கடைசியாக அவரின் உறவினருக்கு அவரது செல்போன் மூலம் தொடர்பு கொண்டோம். அவர்களும் வந்து சேர ஒரு மணி ஆகும் என்று சொல்ல,  அந்த நேரத்தில் கருணை நிறைந்த ஆட்டோகாரார் ஒருவர் வண்டியை நிறுத்த,  அருகில் இருந்த மருத்துவமனையில் அவரை கொண்டு போய் சேர்த்தோம். இப்போது அவர் முதலுதவி பெற்று வருகிறார். தங்கள் பணிகளை எல்லாம் நிறுத்திவிட்டு அந்த சாலையில் தங்கள் வாகனங்களை ஓரங்கட்டிவிட்டு உதவியவர்களால் மட்டுமே மனிதம் தழைத்துக் கொண்டிருக்கிறது.
 
விபத்து சிறியதோ பெரியதோ,  ஆம்புலன்ஸ் வரும் என்ற நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டால் எப்படி அவர்கள் உதவ முன்வருவார்கள்? சென்னை போன்ற பெருநகரத்திலேயே ஆம்புலன்ஸ்கள் தட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனவா? விபத்து நடந்து ஆட்டோக்கள் உதவ முன் வந்தால்,  அவர்களுக்கு சிக்கலாகும் என பயப்படுகிறார்களே...இதற்கு முடிவே இல்லையா?  ஒரு விபத்து இப்படி பல கேள்விகளை முன் நிறுத்துறது.
 
சாமான்ய மனிதனுக்கும் சட்டம் சரிசமமாகும் வரை இங்கே எதுவும் கேள்விகளே!

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்