டைகர் ஏர்வேஸ்சில் தமிழில் அறிவிப்பை கேட்டது இதுவே முதல் முறை!!!

டைகர் ஏர்வேஸ்சில் தமிழில் அறிவிப்பை கேட்டது இதுவே முதல் முறை!!!

இரண்டு நாளைக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு பயணம் செய்தேன். சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து டைகர் ஏர்வேஸ் விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்தேன். பாதுகாப்பு சோதனை முடிந்ததும் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்தது. நான் அமர வேண்டிய இருக்கை முன் வரிசையில் இருந்ததால், நான் கடைசியாக தான் அழைக்கப்பட்டேன்.

நான் விமானத்தில் ஏறியபோது முக்கால் வாசி இருக்கைகள் நிரப்பப்பட்டு இருந்தது. நான் இருக்கையில் அமர்ந்தேன்.
அப்போது தான் ஒரு ஆச்சரியமான அறிவிப்பு வந்தது. முதலில் ஆங்கிலத்தில் ஒரு அறிவிப்பும் அதைதொடர்ந்து தமிழில், பயணிகள் பெட்டிகளை மேலே வைத்து விட்டு சீக்கிரம் அமரவும் என அறிவிப்பு வந்தது. திருச்சிக்கு செல்லும் விமானம் என்பதால் விமானம் முழுக்க தமிழர்களே நிறைந்து இருந்தனர்.

தமிழில் அறிவிப்பை கேட்டதும், எனக்கு மிகுந்த சந்தோசம் ஏற்பட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தமிழில் அறிவிப்பு உண்டு என்று தெரியும். டைகர் ஏர்வேஸ்சில் தமிழில் அறிவிப்பை கேட்டது இதுவே முதல் முறை. ஒருவித பரவச மனநிலையில் தான் நான் உட்கார்ந்து இருந்தேன்.

இது விமானம் சீக்கிரம் புறப்படுவதற்காக வந்த தற்காலிக அறிவிப்பு. இது தொடராது என்று நான் நினைத்திருந்த "எண்ணமும்" சில நிமிடங்களில் உடைந்தது. தொடர்ச்சியாக அறிவிப்புகள் தமிழில் வந்த வண்ணம் இருந்தது. பாதுகாப்பு குறித்தான அறிவிப்புகள், உணவு பற்றிய அறிவிப்புகள், இம்மிகிரேசன் பற்றிய அறிவிப்புகள் என தொடர்ந்து சுத்தமான/ தெளிவான தமிழில் அறிவிப்புகள் வந்தது.
தமிழில் அறிவிப்புகள் செய்தவரின் பெயர் ராமநாதன். அவர் ஆங்கிலத்தில் தனது பெயரை ராமா என்றும், தமிழில் ராமநாதன் என்றும் சொன்னார்.

அறிவிப்பில் மட்டுமன்றி உணவுகளை பரிமாறும் போதும், வேறேதும் உதவிகள் செய்யும் போதும் பரிவுடன் விசாரித்து செய்தார்.
விமானம் திருச்சியில் இறங்கியவுடன், அவர் எனது தமிழ் மொழி அறிவிப்புகள் தங்களுக்கு பிடித்திருந்தால் டைகர் ஏர் இணைய தளத்தில் சென்று அதை தெரிவிக்கவும் என்றார்.
டைகர் ஏர்வேஸ் தமிழில் அறிவிப்புகள் என்பதை ஒரு வெள்ளோட்டமாக பார்க்கிறது என்று நினைக்கிறேன். இதை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தமிழர், அருமையாக பேசினார்ல என்றார். ஆமாம் என்றேன். நம்ம ஊர்ல தான் சார், நம்ம மொழியின் அருமை தெரியாம இருக்கோம். நம்ம ஊர்ல எந்த பிளைட்லயும் தமிழ் கிடையாது என்றார். இந்த கவலை நம்மை போலவே பலருக்கு இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டு ஆமாம் என்று அவரிடம் ஆமோதித்தேன்.

தமிழில் அறிவிப்பு செய்த திரு. ராமநாதன் அவர்களுக்கு கைக்கொடுத்து அவரது சேவைக்கு எனது நன்றிகளை சொல்லிவிட்டு வந்தேன். அதைச் செய்யாமல் என்னால் அங்கிருந்து நகர்ந்து இருக்க முடியாது. இத்தனை காலம் நாம் பேசிவரும் வாடிக்கையாளர் சேவையும், மொழியுரிமையும் நமக்கு கிடைக்கும் போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது அல்லவா!
தமிழில் அறிவிப்பை தொடங்கி இருக்கும் டைகர் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கும், திரு. ராமநாதன் அவர்களுக்கும் நம் நன்றிகளை சொல்லி நாம் ஊக்குவிக்கவேண்டும்!

கீழே படத்தில் இருப்பவர் திரு. ராமநாதன்.
அவரது முகநூல் முகவரி:https://www.facebook.com/ramanathan.somasundaram.98
டைகர் ஏர்வேசின் முகநூல் பக்கம்: https://www.facebook.com/tigerair/?pnref=lhc

நன்றி: திரு. இராஜராஜன் இராஜமகேந்திரன்


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்