சாலை விபத்துகளில் தேச அளவில் தமிழகம் முதலிடம்
சாலை விபத்துகளில் தேச அளவில் தமிழகம் முதலிடம்
முதலிடம் பிடித்திருக்கிறோம் என பெருமைப்பட்டுக்கொள்ளமுடியாது. ஏனெனில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது, கடந்த 2015-ல் நாட்டிலேயே அதிகளவு சாலை விபத்துகள் ஏற்பட்ட மாநிலங்கள் பட்டியலில்.
கடந்த 2015-ம் ஆண்டில் தமிழகத்தில் 69,059 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதாவது நாடு முழுவதும் 2015-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 14% தமிழகத்தில் நடந்துள்ளன.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் 17,666 பலி எண்ணிக்கையுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. விபத்து பலி எண்ணிக்கையில் தமிழகத்துக்கு 2-வது இடம். தமிழகத்தில் 2015-ம் ஆண்டில் சாலை விபத்தில் 15,642 பேர் பலியாகியிருக்கின்றனர்.
அதாவது, கடந்த 2015-ல் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 1,300 பேர் வீதம் தமிழகத்தில் சாலை விபத்துகளில் பலியாகியிருக்கின்றனர். இதுமட்டுமல்ல சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையிலும் தமிழகமே முதலிடத்தில் இருக்கிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள், ஜீப் போன்ற வாகனங்கள் அதிகளவில் விபத்துக்குள்ளாகியிருக்கின்றன.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளிவிவரம் குறித்து தி இந்து (ஆங்கில) நாளிதழிடம் பேசிய சேவ் லைப் பவுண்டேஷன் (Save Life Foundation) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் செரியன் கூறும்போது, "சாலை விபத்துகளில் பல ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த, மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பு சட்டதிட்டங்கள் மத்திய அரசின் சாலைப் பாதுகாப்பு சட்டங்களை ஒத்து இருத்தல் அவசியம். அதேபோல் மோட்டார் வாகனச் சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களை மாநில அரசு வரவேற்று ஏற்பதும் அவசியமாகும்" என்றார்.
தலைநகர் சென்னைக்கு முதலிடம்:
தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில்தான் அதிகளவு விபத்துகள் நடந்துள்ளன. 2015-ம் ஆண்டு மட்டும் சென்னையில் சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 886. இதற்கு அடுத்தபடியாக கோவையில் 238, திருச்சியில் 156 பேர் சாலை விபத்துகளில் பலியாகியிருக்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம்.
தவறான சாலை கட்டமைப்புகளும் காரணம்:
தவறான சாலை கட்டமைப்புகளும் தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெற காரணமாக இருக்கிறது. மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்கிறது. மாநில அரசுகளே அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சாலை விபத்துகளை பதிவு செய்யும் தகவல் மேலாண்மை முறையை தமிழகம் முறையாக பயன்படுத்துகிறது (Road Accidents Data Management System). நடைபெறும் ஒவ்வொரு விபத்து குறித்த தகவலும் இதில் பதிவேற்றப்படுகிறது. விபத்து தகவல்களை முழுமையாக பதிவு செய்வதாலும்கூட தமிழகம் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கலாம்.
அரசு மறுப்பு:
சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் வகிப்பது குறித்து அரசு அதிகாரியிடம் கேட்டபோது அவர், "2012-ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் சாலை விபத்துகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருக்கிறது. தமிழகத்தில் சாலை வழிப் பயணம் மேற்கொள்பவர்களே அதிகம். சாலைப் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாததால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகம். அரசு வாகனங்கள் சாலை விபத்துகளில் சிக்குவதை தவிர்ப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது" என்றார்.
தொடர்புடையவை
சாலை விபத்துகளில் தினமும் 400 பேர் பலியாகின்றனர்: நடவடிக்கை எடுத்தும் 2 ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை