நீலகிரி: வழிச்செலவு பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை; கலங்கிய பஞ்சாபி குடும்பம்! - என்ன நடந்தது?
தமிழ் உலகம்,
207
நீலகிரி: வழிச்செலவு பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை; கலங்கிய பஞ்சாபி குடும்பம்! - என்ன நடந்தது?
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருள்களை அரசியல் கட்சிகள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் பறக்கும் படையினர், உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து வாடகை காரில் சென்று கொண்டிருந்த இவர்களை குன்னூர் அருகில் வழிமறித்த தேர்தல் பறக்கும் படையினர், சோதனை மேற்கொண்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லையெனக் கூறி அவர்களிடம் இருந்து ரூ. 69,400 -ஐ பறிமுதல் செய்துள்ளனர். வழிச் செலவுக்காக வைத்திருந்த பணம் என பறக்கும் படையினரிடம் சுற்றுலா பயணிகள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
அதையும் மீறி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், உரிய ஆவணங்களைக் கொடுத்து மாவட்ட கருவூலத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுலா வந்த இடத்தில் செலவுக்கு வைத்திருந்த மொத்த பணத்தையும் இழந்து சாலையில் தவித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியது. மாவட்ட நிர்வாகத்திற்கும் நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகளிடம் தேர்தல் அதிகாரிகள் பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய குன்னூர் தேர்தல் அலுவலர்கள், " உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கப் பணத்தை யார் எடுத்துச் சென்றாலும் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை அவர்கள் ஒப்படைத்தைத் தொடர்ந்து பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது " என்றனர்.
பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பணியாற்ற வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.