`ஏப்பா ஏய்... கரைவேட்டி கட்டிய நீயே இப்படி பண்ணலாமா?’ - தங்க தமிழ்ச்செல்வன் பிரசார லைவ் ரிப்போர்ட்

`ஏப்பா ஏய்... கரைவேட்டி கட்டிய நீயே இப்படி பண்ணலாமா?’ - தங்க தமிழ்ச்செல்வன் பிரசார லைவ் ரிப்போர்ட்

`ஏப்பா ஏய்... கரைவேட்டி கட்டிய நீயே இப்படி பண்ணலாமா?’ - தங்க தமிழ்ச்செல்வன் பிரசார லைவ் ரிப்போர்ட்
 
தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன், கடந்த வாரமே கெங்குவார்பட்டி அருகே உள்ள பட்டாளம்மன் கோயிலில் பூஜை செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டார். பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, கம்பம் சட்டமன்ற தொகுதிகளில் ஒரு ரவுண்ட பிரசாரத்தை முடித்துவிட்டார்.
 
இந்நிலையில் புதன்கிழமையன்று வேட்புமனுவை தாக்கல் செய்த தங்க தமிழ்ச்செல்வன் வியாழக்கிழமை காலை அதே பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு கெங்குவார்பட்டியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். மாவட்டத்தின் ஈசானி மூலையில் இருக்கும் கோயிலில் வழிபட்டு பிரசாரத்தை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை உள்ளதால் தங்க தமிழ்ச்செல்வனும் இங்கிருந்தே தொடங்கியுள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
 
முதல் நாள் பிரசாரத்தில் கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, குள்ளபுரம், வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தை முடித்துவிட்டு கடைசி பாய்ன்ட்டான அழகர்சாமிபுரத்திற்கு வந்தார். அப்போது, `சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் 75 ரூபாய், டீசல் 65 ரூபாய்க்கு கிடைக்க வேண்டும் என்றால் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’ என்றார்.
 
அவரின் பேச்சை குறுக்கிட்ட ஒருவர், `அழகர்சாமிபுரத்துக்கு சரியான சாலை வசதி இல்ல. அத மொதல போட்டு கொடுங்க மத்தலாம் அப்பறம் பாத்துக்கலாம்’ என்றார். அப்போது கட்சியினர் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயன்றனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதால் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சைத் தொடராமல் பிரசார வேனில் இருந்து இறங்கி தன்னுடைய காரில் ஏறி புறப்பட்டார்.
 
நேற்று காலை ஊஞ்சாம்பட்டி, வடபுதுபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தை முடித்துவிட்டு ஜல்லிபட்டிக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த கட்சியினரிடம், மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து திட்டம் உள்ளிட்ட திமுக அரசின் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால், உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். அங்கிருந்து திமுக தொண்டர் ஒருவர், `மகளிர் உரிமைத் தொகை எல்லோருக்கும் வரவில்லை. வசதியானவர்களுக்கு கிடைக்கிறது. ஏழை மகளிருக்கு கிடைக்கவில்லை’ என்றார்.
 
அதற்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், `தமிழகத்தில் இரண்டரை கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. ஒரு கோடி பேர் எங்களுக்கு சொத்து உள்ளது, விவசாயம் உள்ளது, பிசினஸ் உள்ளது எங்களுக்கு உரிமைத் தொகை வேண்டாம் ஏழைகளுக்கு கொடுங்கள் எனக் கூறிவிட்டனர். இதில் கால் கோடி பேருக்கு கிடைக்கவில்லை என்பது உண்மை தான் அதை பெற்றுத் தருகிறேன்’ என்றார். இதையேற்க மறுத்த அந்த தொண்டர் தொடர்ந்து பேச, `ஏப்பா ஏய்.. உச்சி வெயில் அடிக்கிறது தொண்டை வலிக்கிறது. கரைவேட்டி கட்டிய நீயே இப்படி பண்ணலாமா?’ எனக் கூறிவிட்டு அங்கிருந்த நகர்ந்தார்.
 
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுகவினர், ``பிரசாரத்தை காலை 7 டு 10.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே செய்கிறார். வெயில் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது
 
சில பாய்ண்ட்களில் போதிய ஆட்கள் இல்லாததால் அந்த பாய்ண்ட்களில் பேச முடிவதில்லை. செல்லும் இடங்களில் பெண்கள் எல்லோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வேண்டும், நூறு நாள் வேலை வேண்டும் எனக் கேட்கின்றனர். மற்றபடி திமுகவுக்கு தொகுதி முழுவதும் நல்ல ஆதரவு இருக்கிறது” என முடித்துக்கொண்டனர்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்