``நான் வெற்றி பெற்று விடுவேன் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு நன்றாக தெரியும்" - டிடிவி தினகரன்

``நான் வெற்றி பெற்று விடுவேன் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு நன்றாக தெரியும்" - டிடிவி தினகரன்

``நான் வெற்றி பெற்று விடுவேன் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு நன்றாக தெரியும்" - டிடிவி தினகரன்
 
தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டத்திலுள்ள தனிச்சியம் பகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டு பேசும்போது, "14 வருடத்திற்கு பிறகு மீண்டும் வேட்பாளராக வந்ததற்கு நன்றி என மக்கள் கூறுகிறார்கள்.
 
ஜெயலலிதாவின் பேரில் கம்பீரமான தோற்றத்தோடு கொடியை உருவாக்கி ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்க அமமுக-வை உருவாக்கினேன். கருணாநிதி எப்படி பொதுக்குழுவை கூட்டி எம்ஜிஆரை நீக்கினாரோ, அதே போல வரலாறு நடந்துள்ளது.
 
ஜெயலலிதாவின் விருப்பத்தின் பேரில் அப்போது எம்.பி.ஆனேன், மக்கள் கேட்டதை செய்து கொடுத்தேன். ஜெயலலிதா மறைந்த பிறகு பழனிசாமியும், முன்னாள் அமைச்சர்களும் கொள்ளையடித்தனர், ஊழல் செய்தனர்.
 
செந்தில் பாலாஜி அவரது தம்பி அசோக் ஊழல் செய்கிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள் என குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், அமமுகவை விட்டு திமுகவில் இணைந்தபோது, ஊழல் பற்றி எதுவும் பேசவில்லை. இப்போது சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி வாயை திறந்தால் பலர் சிறைக்கு செல்ல நேரிடும்.
 
என் பழைய நண்பர் இன்று வேட்பாளராக நிற்கிறார், தங்க தமிழ்ச்செல்வன் ஏற்றுள்ள வேஷத்திற்கு பேச வேண்டி உள்ளது. என்னைப்பற்றி, டோக்கன் பற்றியெல்லாம் பேசுகிறார்.  நான் வெற்றி பெற்று விடுவேன் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு நன்றாக தெரியும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல குக்கர் ஜெயித்துவிடும்.
 
ஆர்.கே.நகர் தேர்தலில் டோக்கன் கொடுக்காதே, என்னை கைது செய்து விடுவார்கள், தேர்தலை நிறுத்திவிடுவார்கள் என தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்தேன். சொந்த அண்ணன் தம்பியே பணம் தர மாட்டார்கள். இவர் டோக்கன் கொடுத்து பணம் கொடுத்ததாக சொல்கிறார்.
 
பாரத பிரதமராக மோடி மீண்டும் வர உள்ளார். நீங்கள் கேட்கும் அனைத்தையும் மோடியிடம் கேட்டு நிச்சயம் செய்து தருவேன். வெறுங்கையால் முழம் போட முடியாது. என்னை வெற்றி பெற வையுங்கள், எல்லாம் செய்து தருகிறேன்" என பேசினார்.
 
பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "துரோகிகள் கையில் கட்சி உள்ளது. திடீரென கட்சியை விட்டு நீக்கினால் நாங்கள் என்ன, சும்மா இருக்க வேண்டுமா.. அமமுக தொடங்கப்பட்டதன் காரணம், அதிமுக-வை ஜனநாயக ரீதியாக மீட்க மட்டுமே. மூன்றாவது அணியாக நினைத்த மக்கள், தற்போது எங்கள் அணியை முதல் அணியாக நினைக்கிறார்கள்" என்றவரிடம்,
 
'உங்கள் வீட்டு காவல் நாயாக இருந்த நாங்கள், இப்போது சிங்கமாக மாறிவிட்டோம்' என்று ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளது குறித்து கேள்விக்கு,
 
"எங்கள் வீட்டு காவலுக்கு இருந்தவை இப்போதும் எங்கள் வீட்டில்தான் உள்ளது. நாய் ஓநாயாகத்தான் மாறும், ஆனால் ஒருபோதும் சிங்கமாக மாறாது" என்றவர்,
 
"துரோகம் செய்தவர்களால்தான் இரட்டை இலை பலவீனமாகிறது. அதனை நானும் பன்னீர்செல்வமும் இணைந்து மீட்போம்" என்றவரிடம் "இந்தி திணிப்பு பற்றி அண்ணாமலையின் விமர்சனம்' குறித்த கேள்விக்கு,
 
"மத்திய அரசு அப்போது இந்தியை திணிக்க முயன்ற போது, அண்ணா இந்தியை திணிக்கக்கூடாது என போராட்டம் நடத்தினார். தாய்மொழி கல்வி படிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் 9 சதவிகிதமே உள்ளனர். குஜராத்தில் 70 சதவிகிதம் உள்ளனர். தற்போது தாய்மொழி தமிழை கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது ஏனென்று முதலில் பாருங்கள்" என்றார்.
 
'திமுக - அதிமுக இடையேதான் போட்டி' என பேசுவது குறித்த கேள்விக்கு, "ஜூன் 4 என்னவென்று தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்" என்றவர், "அதிமுகவை மீட்கும் நடவடிக்கையில் சசிகலா உள்ளதால், அவர் பிரசாரம் செய்ய வரமாட்டார்" என்றார்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்