நாளை 9 படங்கள் ரிலீஸ்: அஞ்சானுக்கு அஞ்சிய படங்கள் களம் இறங்குகிறது
கடந்த இரண்டு வாரங்களாக அஞ்சான் வருகையையொட்டி பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மட்டும் வெளியானது. அஞ்சானின் வீழ்ச்சி க.தி.க.வ.இயக்கத்திற்கு சாதகமாக அமைந்தது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக தேங்கி இருந்த படங்கள் நாளை வெளிவருகிறது. நாளை (ஆகஸ்ட் 29) 6 நேரடி தமிழ் படங்களும் மூன்று டப்பிங் படங்களும் வெளிவருகிறது. அது பற்றிய ஒரு மினி டிரைலர்...
இரும்பு குதிரை
பரதேசி படத்தில் அழுக்காக நடித்த அதர்வா, படு ஸ்டைலாக மோட்டார் சைக்கிள் வீரனாக நடித்து வெளிவரும் படம். ப்ரியா ஆனந்த் ஹீரோயின் அவரும் பைக்கெல்லாம் ஓட்டி சாதனை படைத்திருக்கிறார். ஆக்ஷன் கம் ரொமாண்டிக் ஸ்டோரி.
சலீம்
நான் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வரும் படம். கிட்டத்தட்ட நான் படத்தின் தொடர்ச்சிதான். சாவை முன்கூட்டியே அறிந்து கொண்ட ஒருவன் ஒரு நாளை தன் இஷ்டப்படி வாழ நினைக்கிறான். அதுதான் கதை. பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகி உள்ளன.
மேகா
மங்காத்தா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் படங்களில் நடித்த அஸ்வின் சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் படம். சிருஷ்டி டாங்கே ஹீரோயின். ஒரு போலீஸ் அதிகாரியை கொன்ற இன்னொரு போலீஸ் அதிகாரி பற்றி துப்பறியும் கைரேகை நிபுணன் பற்றிய கதை. மென்மையான காதலும் தடதட ஆக்ஷனும் நிறைந்த படம். புதுமுகம் கார்த்திக் ரிஷி இயக்கி இருக்கிறார்.
காதல் 20014
2014ம் வருடத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதை சொல்லுகிற படம். ஒரு பெண் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். அய்யோ கற்பு போய்விட்டதே என்று உயிரை விடாமல். தன் இழப்புக்கு காரணமானவர்களை புத்திசாலிதனமாக பழிவாங்கி விட்டு அது ஒரு விபத்து என்று சொல்லி தன் வாழ்க்கையை தொடருகிற கதை. ஹரிஷ், நேகா ஹீரோ ஹீரோயின். பாய்ஸ் மணிகண்டன் வில்லன்.
சிவப்பு எனக்கு பிடிக்கும்
மும்பை, கோல்கட்டாவில் இருப்பது போன்று எல்லா நகரங்களிலும் சிவப்பு விளக்கு பகுதி அமைக்க வேண்டும் என்ற கருத்தை ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை வழியாக சொல்லும் கதை. எழுத்தாளர் யுரேகா இயக்கி உள்ளார்.
புதியதோர் உலகம் செய்வோம்
லஞ்ச ஒழிப்பை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற அப்துல் கலாம் சொன்ன வாக்கியத்தை மையமாக வைத்து தயாராகி இருக்கும் படம். சிறுவர்கள் லஞ்சம் வாங்கும் தங்கள் பெற்றோரை திருத்துகிற கதை. சின்னத்திரை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இது தவிர ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ பியர்ஸ் புரோசோன் நடித்த தி நவம்பர் மேன். ஹாலிவுட் அனிமேஷன் படமான நிஞ்சா டர்ட்டிஸ், தெலுங்கு படமான ரபாசா ஆகியவையும் ரிலீசாகிறது.