பிரஞ்சுப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கிராமத்து தமிழ்ப் பெண் ஜானகி

பிரஞ்சுப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கிராமத்து தமிழ்ப் பெண் ஜானகி

நாகர்கோவில் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஏழ்மையான குடும்பமொன்றைச் சேர்ந்தவரான ஜானகி, பிரஞ்சுத் திரைப்படமொன்றில் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
 
மிஷெல் ஸ்பின்ஸோ என்ற இயக்குநரின் கைவண்ணத்தில் அண்மையில் பிரான்சில் வெளிவந்துள்ள சோன் எபூஸ் (அவன் மனைவி) என்ற திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக ஜானகி நடித்துள்ளார்.
 
ஆரல்வாய்மொழி கிராமத்தில் செங்கல் சூளைத் தொழிலாளியின் மகளான ஜானகி, கல்லூரி சென்று படிக்க வசதியில்லாமல், தெருக் கூத்துக்களில் நடித்து, பின்னர் கூத்துப் பட்டறை, தேசிய நாடகப் பள்ளி போன்றவற்றில் நடிப்புப் பயிற்சி பெற்றுள்ளார்.
 
மாலினி 22 பாளையங்கோட்டை என்ற தமிழ் படத்தில் சிறிய வேடம் ஒன்றில் தான் ஏற்கனவே தோன்றியிருந்தாலும், பிரஞ்சுத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது மிகுந்த வித்தியாசமான அனுபவமாக இருந்தது என ஜானகி கூறினார்.
 
அப்படத்தில் பிரஞ்சு மொழியிலும் வசனங்கள் பேச வேண்டியிருந்ததால் கடுமையான மொழிப் பயிற்சி தனக்கு அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
 
படத்தின் இயக்குநர் தன்னோடு வித்தியாசமில்லாமல் பழகி வசனங்களும் நடிப்பும் தனக்குச் சொல்லிக் கொடுத்ததாகவும், அதே நேரம் சுயமாக நடிக்கவும் சுதந்திரம் கொடுத்ததாகவும் ஜானகி குறிப்பிட்டார்.
 
செல்வாக்கு மிக்கவர்களும் கவர்ச்சியான தோற்றமுடைய பெண்களும்தான் சினிமாவில் வெற்றிபெற முடியும் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதாகத் தான் கருதுவதாகவும், சோன் எபூஸ் படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஐம்பது பேர் விண்ணப்பித்த போதிலும், பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்ததால் தான் தேர்வு செய்யப்பட்டிருந்ததாகவும் ஜானகி கூறினார்.
 
இலங்கை யுத்தத்தைக் கதைக் களமாக கொண்ட வேறொரு பிரஞ்சு படத்தில் நடிக்கத் தான் விண்ணப்பித்துள்ளதாகவும், இதற்காக இலங்கைத் தமிழர்கள் போலப் பேசுவதற்கு தான் பயிற்சி பெற்றதாகவும் அவர் கூறினார்.
 
களரி, முரசு போன்ற நாடக கலைக் குழுக்களில் தான் நடித்தும், நடிப்பு பயிற்றுவித்தும் வருவதாக குறிப்பிட்ட ஜானகி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியில் தெருக்கூத்துப் பாடல்களைப் பாடி நடித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்