கத்தி - திரைத்துறையின் சமூகப் பார்வை
திரை செய்திகள,
1583
கத்தி படத்தைப் பற்றி கருத்து தெரிவித்திருக்கும் திரைப் பிரபலங்கள் அதில் சொல்லப்பட்டிருக்கும் சமூகப் பிரச்னைக்காக படத்தை புகழ்ந்துள்ளனர். இது வெறும் படமல்ல என்றும் தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கும் படம் என்று புல்லரிக்கின்றனர்.
படம் பார்த்தால் நல்ல பொழுதுபோக்கு எனும் நிலை மாறி, படம் பார்த்தால் கூடவும் ஒரு மெஸேஜை அழுத்திச் சொல்ல வேண்டும் என்பது விதியாகிவிட்டது. அது தவறு அல்ல,ஆனால் அதில் மக்களுக்கான தலைவன் உருவாக்கப்பட, ஒரு நாயக பிம்பத்தை கட்டி எழுப்ப முயல்வது சற்று ஆபத்தானது. இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் வடிவேலு, கொக்கோகோலா நிறவனத்திற்கு எதிராக ஒரு கருத்து சொல்லியிருப்பார். கத்தியிலும் கொக்கோகோலா தான் வில்லன். சென்சாருக்கு பயந்தோ என்னவோ, விஜய் மல்லய்யா, 2ஜி, கொக்கோகோலா எனப் பலரையும் பெயர் சொல்லாமல் சீண்டி உள்ளனர். மீதேன் வாயு பிரச்சனை கூட பேசப்படுகிறது. இது எல்லாம் என்ன எனப் புரியாமல் பார்த்தால், படம் மிக நன்றாக இருக்கிறது எனத் தான் சொல்லவேண்டும். கத்தி ஒரு நல்ல பொழுபோக்கு படம்.
நாயக பிம்பத்தை கட்டியெழுப்ப சமூக பிரச்சனைகளை தொட்டுக்க ஊறுகாயாக தமிழ் சினிமா எப்போதுமே பயன்படுத்தி வந்திருக்கிறது. கத்தியிலும் அப்படிதான் முருகதாஸ் தண்ணீர் பிரச்சனையை தொட்டிருக்கிறார், ஊறுகாய் அளவுக்கு.
தமிழ்ப்பட கதைநாயகர்கள் திரையில் எந்தப் பிரச்சனைக்காக போராடுகிறார்களோ அந்தப் பிரச்சனைக்கு காரணமானவர்களின் கைப்புள்ளயாகதான் நிஜத்தில் இருக்கிறார்கள். உதாரணமாக கத்தியில் சொல்லப்பட்டிருக்கும் தண்ணீர் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். இந்த கொள்ளைக்கு தலைமை தாங்குகிறவர்கள் கோலா கம்பெனிகள்.
முக்கியமாக கோகோ கோலாவும், பெப்சியும். கோக் கம்பெனிதான் தாமிரபரணியில் தண்ணீர் உறிஞ்சியது. அந்த கோக் கம்பெனியின் விளம்பரத்தில் கோக் குடி கொண்டாடு என்று ஆடி நடித்தவர் விஜய். அதற்காக கோடிக்கணக்கில் பணத்தையும் பெற்றுக் கொண்டார். கோக் கம்பெனியின் தண்ணீர் கொள்ளைக்கு எதிராக பொதுநல அமைப்புகள் தொண்டை வறள கத்திக் கொண்டிருந்த போது கோக் குடி கொண்டாடு என்று ஆடி கோடிகளில் சம்பாதித்தவர் இப்போது தண்ணீர் பிரச்சனை குறித்த படத்தில் நடித்து தனது நாயக பிம்பத்தை புதுப்பித்துக் கொண்டுள்ளார்.
சினிமாவில் இப்படி தொட்டுக்க ஊறுகாயாக சொல்லப்படும் எந்தப் பிரச்சனையும் மக்களை விழிப்படையச் செய்து அந்தப் பிரச்சனைக்கு எதிராக போராட வைத்ததாக சரித்திரம் இல்லை. மாறாக அப்படி நடித்தவர்களின் நாயக பிம்பம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ஊதி பெரிதாக்கப்பட்டடிருக்கிறது. அப்படியொரு போலி சமூக அக்கறைதான் கத்தி படத்திலும் காட்டப்பட்டிருப்பது. இந்த அடிப்படையை புரிந்து கொள்ளாமல் நல்ல கருத்து சொல்லியிருக்காங்க என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.
சினிமா மற்றும் பாப்புலர் பத்திரிகைகளில் வரும் செய்திகளும், அவை அலசும் சமூகப் பிரச்சனைகளும் மேலோட்டமானவை. முக்கியமான பிரச்சனைகளையும் வியாபார உத்திகளையும் சேர்த்து விற்பனைக்கான கச்சாப் பொருளாக மாற்றுபவை. காவிரி பிரச்சனை குறித்து தினசரிகளும், வாரப் பத்திரிகைகளும் இவ்வளவு வருடங்களில் எத்தனை பத்திகள் எழுதியிருக்கும்? எவ்வளவு பக்கங்கள் நாம் படித்திருப்போம்? காவிரியின் மையப்பிரச்சனை குறித்து, அந்த சொல்லாடல் குறித்து நமக்கு இந்த பத்திரிகைகள் வாயிலாக கிடைத்தது என்ன?
காவிரி நதிநீர் ஆணையம் எதற்கு, எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
ஒரு டிஎம்சி தண்ணீர் என்றால் எவ்வளவு?
காவிரி பிரச்சனை ஆரம்பமான போது கர்நாடகத்தின் விளைநிலங்களின் மொத்த பரப்பளவு என்ன? இப்போது அந்த அளவு அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா?
இதுபோன்ற அடிப்படை கேள்விகளில் எத்தனைக்கு இந்த பத்திரிகைகள் படித்த நமக்கு பதில் தெரியும்? அதேநேரம் காவிரி பிரச்சனைக்கு நெய்வேலியில் பாரதிராஜா தலைமையில் சினிமா நட்சத்திரங்கள் போராட்டம் நடத்திய போது கமலின் காரில் அவருடன் வந்த நடிகை யார் என்று கேட்டுப் பாருங்கள். எல்லோருக்குமே அதற்கான பதில் தெரியும். எப்படி?
சினிமாவும், பாப்புலர் பத்திரிகைகளும் இதுபோன்ற கேளிக்கை செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. எதைப் பற்றி பேசினாலும் வாசகர்களை, பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமே அவற்றின் நோக்கம். அதற்கான தொட்டுக்க ஊறுகாய்தான் சமூகப் பிரச்சனைகள். ஒரு பிரபல வாரப்பத்திரிகை காவிரிப் பிரச்சனை உச்சத்தில் இருந்த போது காவிரி என்ற பெயர் கொண்ட நடிகைகளை பேட்டியெடுத்து போட்டது.
1993 -இல் வெளியான ஜென்டில்மேனின் கொள்ளை அடித்த பணத்தில் ஏழைகளுக்கு கல்வி வழங்கினார் ஷங்கர். 2007 -இல் அதே கல்விப் பிரச்சனையைதான் சிவாஜியிலும் கையிலெடுத்தார். இன்னும் இருபது வருடங்கள் கழித்தும் இதே பிரச்சனையைப் பற்றி அவர் படமெடுப்பார். ஷங்கர், முருகதாஸ் போன்றவர்களின் படங்கள் சமூகப் பிரச்சனைகள் குறித்து பேசுவதில்லை, மாறாக சமூகப் பிரச்சனைகளை வைத்து நம்மை உற்சாகப்படுத்த செய்கின்றன. பிரச்சனைகள் குறித்து பேசாமல் மௌனம் சாதிப்பதைவிட, இப்படி பிரச்சனைகளை வைத்து பிழைப்பு செய்வது ஆபத்தானது. இருக்கிற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது போன்றும், நம்முடைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது போன்றும் ஒருவித போலி மயக்கத்தை பார்வையாளர்களுக்கு இப்படிப்பட்ட படங்கள் தருகின்றன. அந்த மயக்கத்தின் உளறல்கள்தான், மக்கள் பிரச்சனையை பேசியிருக்காங்க என்பதும், நல்ல கருத்தை சொல்லியிருக்காங்க என்பதும்.
ஒருபக்கம் கோக் விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதிப்பது. இன்னொரு பக்கம் தண்ணியை கொள்ளையடிச்சிட்டாங்க என்று ஃபிலிம் காட்டுவது. ஒரு வியாபார நடிகர் என்ற அளவில் அவர் நன்றாகவே நடித்துள்ளார். இந்த அட்டகத்திகளை தான் நாம் தேவை இல்லாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
சமூகப் பார்வையை எழுப்பி விட்டதற்காக இயக்குனரை வாழ்த்தினாலும், இல்லாத ஒரு சமுக நாயகனை இது போன்ற திரைப்படம் உருவாக்கி விடக்கூடாது.