திரைப்படங்களுக்கு வரிச்சலுகை, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமா அரசும் திரையுலகமும்?
திரை செய்திகள,
1282
திருட்டு படத்தகடு பிரச்சனையை கையிலெடுத்து அரசையும், காவல்துறையையும் நெருக்கிக் கொண்டிருக்கிறது தமிழ் திரையுலகம். திரைத்துறை நசிந்து வருவதற்கு திருட்டு படத்தகடே காரணம் என்று பிரச்சனையை ஒற்றைப்படையாக அணுகும் அவர்களுக்கும், அரசுக்கும் பொதுமக்கள் சார்பில் ஓர் வேண்டுகோள்.
திரைப்படங்களுக்கு வரிச்சலுகை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற நீங்கள் தயாரா?
கோச்சடையான் படம் வெளியான போது, வழக்கு காரணமாக தமிழ்ப் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. ஆனால், கோச்சடையான் படத்துக்கு மட்டும் சிறப்பு ஆணை பிறப்பித்து வரிச்சலுகை அளித்தனர். அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் புகார் தரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தடை விதித்திருந்தாலும் அரசாணையின் மூலம் ஒரு படத்துக்கு வரிச்சலுகை அளிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறியது. அதனைத் தொடர்ந்து நீதிபதி கூறியிருந்ததுதான் முக்கியம். கோச்சடையானுக்கு வரிச்சலுகை அளித்ததால் திரையரங்கோ, வணகவரித்துறையோ கேளிக்கை வரியை பொதுமக்களிடம் வசூலிக்கக் கூடாது என்று திட்டவட்டமாக தீர்ப்பில் கூறியிருந்தார்.
ஆனால் சென்னையில் தேவி திரையரங்கு தவிர்த்து வேறு எந்த திரையரங்கும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கேளிக்கை வரிச்சலுகையின் பலனை பொதுமக்களுக்கு அளிக்கவில்லை. வரிவிலக்கு அளிக்கப்பட்ட பிறகும் டிக்கெட் கட்டணத்தில் முப்பது சதவீதத்தை கேளிக்கை வரியாக பொதுமக்களிடம் வசூலித்தனர். இது அப்பட்டமான பகல் கொள்ளை. நீதிமன்ற அவமதிப்பு. தமிழகம் முழுவதிலுமுள்ள திரையரங்குகளில் ஒன்றே இரண்டோ தவிர அனைத்தும் இந்த கொள்ளையில் ஈடுபட்டன.
திருட்டு படத்தகடுக்கு எதிராக குரல் தரும் யாரும் இந்தத் தவறை தட்டிக் கேட்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பு அப்பட்டமாக மீறப்பட்டும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதில் மட்டுமின்றி திரையரங்குகள் அடிக்கும் நேரடி மற்றும் மறைமுக கொள்ளையில் அரசு அக்கறை காட்டியதே இல்லை. திரையரங்குகள் விவகாரத்தில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா என்பதே சந்தேகம்.
நாளை வெளியாகவிருக்கும் காவியத்தலைவன் படத்துக்கு அரசு வரிச்சலுகை அளித்துள்ளது. அப்படியானால் டிக்கெட் கட்டணத்தில் முப்பது சதவீதத்தை குறைத்தே பார்வையாளர்களிடம் வசூலிக்க வேண்டும். 100 ரூபாய் டிக்கெட் கட்டணம் என்றால் அதில் முப்பது சதவீதத்தை கழித்து 70 ரூபாயை மட்டுமே வசூலிக்க வேண்டும். அப்படிதான் வசூல் செய்ய வேண்டும் என்று திரையுலகைச் சேர்ந்த யாரேனும் திரையரங்குகளை அறிவுறுத்த முன்வருவார்களா?
நாம் சொன்னால் நமது திரைப்படங்களை திரையரங்கு உரிமையாளர்கள் கட்டம்கட்டி ஒதுக்கிவிடுவார்கள் என்று ஒவ்வொருவருக்குமே பயம். அதையும் மீறி சொன்னால், இதுபோன்ற கொள்ளையை நம்பித்தான் உங்கள் படங்களை அதிக விலைக்கு வாங்குகிறோம் என்று திரையரங்குகள் திருப்பியடிக்கும். இந்த பயமும், சந்தர்ப்பவாதமும், பகல் கொள்ளையும்தான் திருட்டு வி.சி.டி. என்ற நோயாக புரையோடியிருக்கிறது. நோய்க்கு சிகிச்சை செய்யாமல் வலிக்கு நிவாரணம் தேடுவது ஒருபோதும் தீர்வாகப் போவதில்லை.
மேலும், தங்கள் துறையில் சட்டத்தை மீறி பொதுமக்கள் கொள்ளையடிக்கப்படுவதை கண்டும் காணாத பாவனையில் கள்ள மவுனம் இருப்பவர்களைதான் நாட்டையும், நம்மையும் காப்பாற்ற, தலைவா வா தலைமை ஏற்க வா என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்.
என்னே ஒரு நகைமுரண்.