அறுந்த ரீலு 11: இயக்குநர் மணிகண்டனை கடுப்பேற்றிய காக்கா

அறுந்த ரீலு 11: இயக்குநர் மணிகண்டனை கடுப்பேற்றிய காக்கா

அறுந்த ரீலு 11: இயக்குநர் மணிகண்டனை கடுப்பேற்றிய காக்கா
 
'காக்கா முட்டை' படத்தில் பெரிய காக்கா முட்டை வைக்கும் சோற்றை வந்து ஒரு காக்கா தின்று விட்டு போகும். அக்காட்சியை எடுக்க இயக்குநர் மணிகண்டன் பட்ட கஷ்டங்கள் உங்களுக்கு தெரியுமா?
 
'காக்கா முட்டை' படத்தில் வரும் சிறுவர்கள் மரத்தின் மீது ஏறி காக்கா முட்டை குடிக்கும் காட்சி, மரம் வெட்டும் காட்சி, காக்கா வந்து சோற்றை தின்னும் காட்சி இவை அனைத்துமே வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது.
 
பெரிய காக்கா முட்டை விக்னேஷ் அட்டைப் பெட்டியின் மீது சோறு வைக்கும் காட்சியை எடுத்துவிட்டார்கள். அதை காக்கா வந்து திங்க வேண்டுமே, அக்காட்சியை காட்சிப்படுத்த வேண்டும் என்று இயக்குநர் இரண்டு நாட்களாக கஷ்டப்பட்டு இருக்கிறார்.
 
சாப்பாடு வைக்கும் முன்னர் நிறைய காக்கைகள் சுற்றிக் கொண்டே இருந்திருக்கிறது. சோறு வைத்தவுடன் ஒரு காக்கா கூட வரவே இல்லை. அனைவரையும் அனுப்பிவிட்டு இயக்குநர் மணிகண்டன் மற்றும் உதவியாளர் இருவரும் கறுப்பு துணி மூடி நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போதும் காக்கா வரவில்லை.
 
ஒருவேளை கறுப்பு துணி மூடியிருப்பதால் வரவில்லை என்று துணியை எடுத்துவிட்டு வெயிலில் உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போதும் வரவில்லை. உடனே இயக்குநர் மணிகண்டன் கோழிக்கறி வாங்கி அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சாப்பாட்டை சுற்றி தூவி இருக்கிறார். ஆனால், வந்த காக்கைகள் அனைத்துமே அப்பெட்டியை சுற்றி இருந்த சிக்கனை எடுத்துக் கொண்டு பறந்துவிட்டன.
 
சோறு வைத்திருந்த பெட்டியை காக்கைகள், தம்மை பிடிக்க வைத்திருக்கும் கூண்டு என்று நினைத்திருக்குமோ என இயக்குநர் மணிகண்டன் யோசித்திருக்கிறார். ஆனால், காட்சியின் தொடர்ச்சி என்பதால் பெட்டியை எடுத்துவிட்டு அக்காட்சியை காட்சிப்படுத்த முடியாது.
 
எனவே அயராது கேமிராவை வைத்துக் கொண்டு உட்கார்ந்தே இருந்திருக்கிறார். அப்போது ஒரு காக்கா வந்து அமர்ந்து சோற்றின் பின்னால் இருந்த பெரிய சிக்கன் பீஸை எடுத்துச் சென்றுவிட்டது.
 
இப்போதும் 'காக்கா முட்டை' படத்தைப் பார்த்தீர்கள் என்றால், அக்காட்சியில் சோற்றை காக்கா கொத்துவது போல மட்டும் தான் இருக்கும். கொத்தி எடுப்பது இருக்காது. ஏனென்றால் காக்கா எடுத்தது சிக்கன் பீஸ் ஆச்சே!

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்