யாகாவாராயினும் நாகாக்க - படம் எப்படி?

யாகாவாராயினும் நாகாக்க - படம் எப்படி?

யாகாவாராயினும் நாகாக்க - படம் எப்படி?
நாவடக்கம் மிக முக்கியம் என்ற கதைக் கருவுடன் வெளியாகியுள்ள படமே ‘யாகாவாராயினும் நாகாக்க. மும்பையில் கள்ளத் துப்பாக்கி வாங்கும் ஆதி , ஏன் எதற்கு என அவரே கதையை ஆரம்பிக்க நகர்கிறது படம்.
 
மிடில் க்ளாஸ் குடும்பத்தின் மகனாக ஆதி. வழக்கமாக அப்பாவிடம் தண்டச்சோறு பட்டம். அம்மா செல்லம். அக்காவுடன் சண்டை. இடையில் உயிருக்கு உயிரான மூன்று பணக்கார நண்பர்கள், குறும்புக்கார காதலி. இப்படி ஜாலி வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துவரும் ஆதிக்கு நியூ இயர் தினத்தில் நண்பர்களால் வருகிறது மிகப்பெரிய பிரச்னை.
 
குடித்துவிட்டு நண்பர்களில் ஒருவன் ஹோட்டலில் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த ரிச்சாவிடம் செய்யும் பிரச்னை பூதாகரமாக வெடிக்கிறது. நண்பர்கள், குடும்பம், காதலி, ஆதி என அனைவரும் உயிருக்கு பயந்து ஓடுகிறார்கள். யார் செய்தார்?, ஏன்? , எப்படி? என படம் முழுக்க பல திருப்பங்கள்.
 
 
 
ஆக்‌ஷன் கதைக்கேற்ற தோரணை, கணீர்க்   குரல், சிக்ஸ் பேக், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓட்டம், என ஆதி ஹீரோவாக ஸ்கோர் செய்திருக்கிறார். ’மிருகம்’ , ’அரவான்’  ஆகிய படங்களில் சவாலான பாத்திரங்களில் அசால்ட்டாக நடித்த ஆதி இந்த படத்தில் ஏன் சில இடங்களில் செயற்கையாக நடித்திருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை.
 
டார்லிங் நிக்கி கல்ராணி அதே குறும்பு, எனக்காகத் தானே வெயிட் பண்ற அப்ப வா போலாம், என ஆதியுடன் வண்டியில் பறப்பது, ராயல் என்ஃபீல்ட் பைக்கை  அலப்பறையாக ஓட்டி வருவது, ’22 வருஷமா உன் அப்பாவுக்கு உன் மேல வராத நம்பிக்கை ரெண்டு மாசம் பழகின எனக்கு வந்திருக்குன்னு உங்க அப்பா கிட்ட சொல்லப் போறேன்’ என சொல்லிவிட்டு நடப்பது, நெடு நெடுவென ஒயின் ஷாப்பில் சென்று பீர் வாங்குவது என 25ம் நூற்றாண்டு இளம் பெண்ணுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்துகிறது. ஆனால் மெடிக்கல் ஷாப்பில் ஆணுறை வாங்குவதுதான் கொஞ்சம் ஓவர் டோஸ்.
 
 பசுபதி , நாசர் , ஆடுகளம் நரேன் என அவரவர் அவருக்கு கொடுத்த வேலையைச் சரியாகச்   செய்தாலும், மிக முக்கிய நடிகர்களான  இவர்களை இன்னும் சற்று முக்கியத்துவம் கொடுத்து வேலை வாங்கியிருக்கலாம்.ஒருத்தனைக் காப்பாத்த, இன்னொருத்தன் உயிர கொடுக்க நினைக்கற நீங்க கண்டிப்பா இதை செஞ்சிருக்க மாட்டீங்க, என மிதுன் சக்ரவர்த்தி அலட்டாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் முதலியாராக மிரட்டுகிறார்.
 
தனக்காக எதையும் செய்யும் நண்பர்களாக , ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் நட்பு, என நண்பர்கள் மூவரும் நல்ல தேர்வு, சில நிமிடக் காட்சிகளே வந்தாலும் , ரிச்சா பலோட், மற்றும் லட்சுமி ப்ரியா சந்திரமௌலி இருவரும் கதையையே திசை மாற்றி அரட்டும் விதம் அருமை. 
 
 
 
சத்யபிரபாஸ் பினிஷெட்டி ஒரு இயக்குநராக இடைவேளை வரை படத்தின் கதையை கணிக்க முடியாது பார்வையாளர்களைக் கட்டிப்போட்டிருக்கிறார். அடுத்த பாதியிலும் நினைக்க முடியாத திருப்பங்கள், அவிழும் முடிச்சுகள் என படம் திக் திக் நிமிடங்களாக கடக்கிறது. எல்லாம் சரி தான் படத்தின் அப்படியா, அடடே என கண்களை விரிய வைக்க பல தருணங்கள் இருக்கும் போது ஏன் ஒவ்வொரு காட்சிகளும் இவ்வளவு நீளம்.
 
சண்டைக் காட்சியாகட்டும், காதல் காட்சியாக இருப்பினும் சரி ஒவ்வொன்றும் இன்னும் முடியலையா பாணியில் கடக்கிறது. ப்ரசன் ப்ரவீன் ஷ்யாம் இசையில் ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னணி அதிரடி, சோக்கான , மற்றும் பப்பரப்பாம் பாடல்கள் மனதில் நிற்கின்றன. மற்ற பாடல்கள் கடந்து போகிறது. இந்த மும்பை தாதாவாக முதலியார். நீங்கதான் எங்களுக்கு எல்லாம் என கேட்கும் தமிழ் மக்கள், இதெல்லாம் மும்பையில் எப்படி? இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை.
 
சில நேரங்களில் நம்மையும் மீறி கோபத்திலோ, ஆத்திரத்திலோ விழும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம், அது நம் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் என்ற ரீதியில் படத்தில் மெஸேஜ் வைத்த இடமும் சரி, குடித்தால் நீ என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியாது என்பதையும் சமுதாயத்திற்கு தேவையான மெஸேஜை, சொன்ன இயக்குநர் படத்தின் நீளத்தில் *நா காத்திருந்தால்*நன்றாக இருந்திருக்கும்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்