டாஸ்மாக் மூடினால் சாராயம் பெருகும்: உயர் நீதிமன்றம்
டாஸ்மாக் மூடினால் சாராயம் பெருகும்: உயர் நீதிமன்றம்
மதுக்கடைகளின் வேலை நேரத்தை குறைக்கும்படி, அரசை கட்டாயப்படுத்த முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் கூறிவிட்டது.
சமூகநீதிக்கான வழக்கறிஞர் அமைப்பின் தலைவர், கே.பாலு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், மது தாராளமாக கிடைப்பதால், குற்றங்கள், விபத்துகள் அதிகரிக்கின்றன. காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, மது விற்கப்படுகிறது. மாலை, 5:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை மட்டுமே, மது விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும். இதனால், குடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.மது விற்பனை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதன்படி, விற்பனை நேரத்தை, ஐந்து மணி நேரமாக மாற்ற வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜரானார். நீதிமன்றத்தில் நடந்த வாதம் வருமாறு:
தலைமை நீதிபதி: எல்லா பிரச்னைகளையும், நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள். எல்லாவற்றுக்கும், நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைக்கும் என, நினைப்பது தவறு.
வழக்கறிஞர் ராஜா: மது விற்பனை மூலம், ஆண்டுக்குக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, நான்கு கோடி ரூபாய் தான், செலவு செய்யப்படுகிறது.
தலைமை நீதிபதி: மதுவிலக்கை அமல்படுத்தினால், மக்கள் கள்ளச்சாராயத்தை தேடுவார்கள். அதை தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? எல்லா பிரச்னைகளையும், நீதிமன்றத்துக்கு இழுக்கக் கூடாது. மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை, அரசு தான் ஒழுங்குபடுத்த வேண்டும்; அதை, நீதிமன்றம் கூற முடியாது. கடைகளின் நேரத்தை, அரசு குறைக்கலாம். பிரச்னை, குடிப்பவர்களிடம் தான் உள்ளது. இரண்டு, மூன்று மணி நேரம் மட்டுமே திறக்கப்பட்டால், கடைகளில் கூட்டம் கூடிவிடும்.மதுவிலக்கு பற்றி பேசுபவர்களிடம், ஒருமித்த உணர்வு இல்லை. 1960 வரை, மதுவிலக்கு இருந்தது. மதுக்கடைகளை எப்போது திறக்க வேண்டும் என்பதை, நீதிமன்றம் எப்படி முடிவு செய்ய முடியும்.’கடைகளை, காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 2:00 மணி வரை திறக்கலாம்’ என, நாங்கள் கூறினால், அதன் பின்னணியில் உள்ள பகுத்தாய்வு என்னதாக இருக்கும். எனவே, அரசு தான், இந்த பிரச்னையை பரிசீலிக்க வேண்டும்.நேரத்தை குறைத்தால், பாட்டில்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வர்; ஒன்று வாங்குவதற்கு பதிலாக, கூடுதலாக பாட்டில்களை வாங்குவர். இந்த பிரச்னைக்கு நேரடி தீர்வு இல்லை.சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள்தான், குடியால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். வசதி படைத்தவர்களைப் பற்றி, பிரச்னை இல்லை. கூலி வேலை செய்பவர்கள், மதுவுக்கு அடிமையாகின்றனர்.பக்கத்து மாநிலங்களான புதுச்சேரி, கேரளாவில் எந்த கட்டுப்பாடும் இல்லை. புதுச்சேரியில், காலை, 8:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, மதுக்கடைகள் திறந்திருப்பதாக கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையானவர்கள், அது வேண்டும் என்று, குழந்தைகள் போல் பிடிவாதம் செய்வர். மதுப்பழக்கத்தில் இருந்து, இவர்களை விடுவித்து, மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஆலோசனைகளுடன் வந்தால், அதை பரிசீலிக்கலாம்.இவ்வாறு, தலைமை நீதிபதி கூறினார்.
இதையடுத்து, மனுவில் புதிய கோரிக்கையை சேர்க்க, மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டு, விசாரணையை, வரும் 24ம் தேதிக்கு, தள்ளிவைத்தனர்.