மதவெறுப்புணர்வை தூண்டும் இணையதளங்கள் முடக்கம்
புதுடில்லி:மதவாத வெறுப்புணர்வை துாண்டும் இணையதளங்களை முடக்குமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லியில் நேற்று, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது:மத வெறுப்புணர்வை துாண்டும் வகையில், பயங்கரவாத அமைப்புகள், இணையதளங்களை பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகம் தொடர்பாக, வெறுப்புணர்வை துாண்டும் வகையிலான, 40 இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை அமைப்புகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
அரசின் உத்தரவை அடுத்து, சர்ச்சைக்குரிய இணையதளங்களும், சமூக வலைதளத்தில் இடம்பெற்ற, வெறுப்பை துாண்டும் பக்கங்களும் அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும், 'ஒரு சில இணையதளங்கள், பாதுகாப்பு மிக்க இணையதள கோட்பாட்டுடன் செயல்படுவதால், உடனடியாக முடக்க முடியவில்லை' என, இணையதள சேவை நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.இதற்கு முன், கடந்த டிசம்பரில், ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட இணைய தளங்களை முடக்க, மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.