தமிழனை கவுரவித்த அமெரிக்க டைம் பத்திரிகை
தமிழனை கவுரவித்த அமெரிக்க டைம் பத்திரிகை
டைம்ஸ் நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள ”ஆயிரம் ஆண்டுகளில் உலகத்தில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள்”, என்ற பட்டியலில் சென்னையை சேர்ந்த உமேஷ் சச்தேவ் இடம்பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் யூனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான உமேஷ் சச்தேவ், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 25 மொழிகள் மற்றும் 150 பேச்சு வழக்குகளை புரிந்து கொண்டு, மொழிபெயர்ப்பு செய்யக் கூடிய வகையிலான செல்போன் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. தன்னுடைய நண்பர் ரவி சாரோகி என்பவருடன் இணைந்து இவர் உருவாக்கியுள்ள செல்போன் தொழில்நுட்பத்தின் மூலமாக ஒரு மொழியில் பேசப்படும் தகவல், குறிப்பிட்ட 25 மொழிகளில் எந்த மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, 150 பேச்சு வழக்குகளில் கேட்கும் வசதியை உள்ளடக்கியது. இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக 2016-ம் ஆண்டிற்கான ”ஆயிரம் ஆண்டுகளில் உலகில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள்” என்ற டைம்ஸ் நாளிதழின் பட்டியலில் உமேஷ் சச்தேவ் இடம்பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்.
இந்த கண்டுபிடிப்பு பல்வேறு மொழிகளை பேசும் நம் இந்திய மக்கள் மத்தியில் ஒரு இணைப்பு பாலமாக அமைந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த மிக முக்கிய சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள உமேஷ் சச்தேவ் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுவதோடு, அரிய கண்டுபிடிப்பை உருவாக்கி தமிழகத்திற்கு புகழ் சேர்த்துள்ள உமேஷ் சச்தேவ் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மாநில அரசும், மத்திய அரசும் உரிய அங்கீகாரத்தை வழங்கி, பாராட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.