செடியில் இருந்து பறித்த பிறகும் 24 மணிநேரம் வாடாமல் இருக்கும் பூக்கள்

செடியில் இருந்து பறித்த பிறகும் 24 மணிநேரம் வாடாமல் இருக்கும் பூக்கள்

பூக்களில் மரபணுக்களை மாற்றுவதன் மூலம் செடியில் இருந்து பறித்த பிறகும் 24 மணிநேரத்திற்கும் மேலாக வாடாமல் இருப்பதற்கான வழிமுறையை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நம்மூர்களில் ரோஜா, முல்லை, மல்லிகை உட்பட பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகை மலர்கள் அதிகாலையில் பறிக்கப்படும். பின்னர் அவை பல்வேறு ஊர்களுக்கு சென்று, மாலை வரை மலர்ந்து காணப்படும். பின்னர், அவை அன்றைய இரவுக்குள் அதன் ஆயுள் முடிந்து, வாடி வதங்கிவிடும்.

 

பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் மலர்கள் மீது இரவு நேரங்களில் ஒருசில ரசாயன கலவை தெளிக்கப்பட்டு, சில மணி நேரங்கள் மட்டுமே மலர்ச்சியுடன் காணப்படும்.ஜப்பானில் மார்னிங் குளோரி என்ற பூக்கள் பூங்கொத்துகளிலும் அலுவலகங்களில் அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை பூக்களின் ஆயுளை மேலும் அதிகரிக்கும் ஆய்வுகளை ஜப்பானின் தேசிய விவசாய மற்றும் உணவு ஆராய்ச்சி மையம் செய்து வருகிறது.

 

இதன் தொடர்ச்சியாக, தெற்கு ஜப்பானில் ககோஷிமா பல்கலைக்கழகத்தில் கெனிச்சி ஷபுயா என்ற தாவரவியல் விஞ்ஞானி தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து கெனிச்சி ஷபுயா கூறுகையில், பொதுவாக செடிகளில் பூக்கும் மலர்கள் 13 மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்கிறது. பின்னர் வாடி வதங்கிவிடுகிறது. நாங்கள் எபிமிரல் 1 என்ற மரபணுவை அந்த பூக்களின் செடிகளுக்குள் செலுத்தினோம். அந்த பூச்செடிகள் புதிய மரபணுவை உறிஞ்சிக் கொண்டு, அதன்பிறகு உருவான மலர்களில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்தியது. மரபணு மாற்றத்துக்குப் பிறகு அம்மலர்களின் ஆயுள் மேலும் பாதியாக அதிகரித்தது. இதன்மூலம் அந்த பூக்களின் இதழ்கள் 24 மணி நேரமும் பொலிவுடன் காணப்பட்டது என்று தாவரவியல் விஞ்ஞானி கெனிச்சி ஷபுயா கூறினார்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்